‪#‎ஆதிரை_அழகனாம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:47 PM | Best Blogger Tips

ஆடவல்லானுக்கு(10..07..2016)_ஆனி_திருமஞ்சன_பெருவிழா
-
தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர். தேவர்களுக்கு வைகறை ‪#‎மார்கழி மாதம்; காலைப்பொழுது ‪#‎மாசி மாதம்; உச்சிக் காலம் ‪#‎சித்திரை; மாலைப்பொழுது ‪#‎ஆனி; இரவுப்பொழுது ‪#‎ஆவணி; அர்த்த சாமம்‪#‎புரட்டாசி என்பர்.
-
வைகறை பூஜை மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும்; காலைச்சந்தி பூஜை மாசி மாத வளர்பிறை சதுர்தசி திதியிலும்; உச்சிக்கால பூஜை சித்திரை திருவோணத்திலும்; மாலை (சாயரட்சை) பூஜை ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும்; இரண்டாம் கால பூஜை ஆவணி மாத வளர்பிறை சதுர்தசி திதியிலும்: அர்த்தஜாம பூஜை புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசி திதியிலும் நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீ நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சில ஆலயங்களில் இந்த ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.
-
இது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
-
தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலம். இந்தக் காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறான். அடுத்து வருவது தட்சிணாயன காலம். அப்போது தன் பாதையை சூரியன் மாற்றிக்கொள்கிறான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலம் ஆரம்பம். இதையே "ஆனி இலை அசங்க'" என்பார்கள். கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து இதமான நாட்கள் தொடங்கும் மாதம் ஆனி.
-
சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
-
பொன்னம்பலமான சிதம்பரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்காக சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். வெள்ளியம்பலமான மதுரையில் சுந்தரத் தாண்டவம் ஆடினார். இங்கு ராஜசேகர பாண்டியன் வேண்டிக் கொண்டதால், கால் மாறி வலது காலைத் தூக்கி ஆடியதாக வரலாறு சொல்கிறது. தாமிர சபையான திருநெல்வேலியில் இறைவன் ஆடியது சங்காரத் தாண்டவம்.
-
சித்திர சபையான குற்றாலத்தில் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளதால், இத்தலத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரிந்தார் என்பர். ரத்தின சபையான திருவாலங்காட்டில் வலக்காலை உச்சந்தலை வரைத் தூக்கி அனைவரும் வியக்கும் வண்ணம் ஊர்த்துவத் தாண்டவம் ஆடினார்.
-
திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள நடனசபை ஆதி சித்சபை என்று போற்றப்படுகிறது. இங்கே சுவாத கேது என்ற மன்னன் வேண்டிக்கொண்ட வண்ணம் இறைவன் நவ தாண்டவங்கள் ஆடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இதற்குப் பிறகு தான் சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடினாராம். அதனால் இத்தலத்தினை ஆதிசிதம்பரம் என்று சொல்வர்.
-
இதேபோல் பல திருத்தலங்களில் சிவபெருமான் திருநடனம் ஆடியதாகப் புராணம் கூறுகிறது. திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர். திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர். 
-
திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர். திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர். 
-
திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர். திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.
-
இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்.
-
ஆனித் திருமஞ்சனத்தின் போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
-
கங்கை தீர்த்தம் அளித்தால் நம் பாவங்கள் நசியும்; எண்ணெய் அளித்தால் சுகம் கிட்டும்; மாப்பொடி அளித்தல் கடனைப் போக்கும்; நெல்லி முள்ளி பொடி அளித்தால் நோய் நீங்கும்; பஞ்சகவ்யம் அளித்தால் மனதில் தூய்மை உண்டாகும்; இளநீர் அளித்தால் சுகமான வாழ்வு கிட்டும்; தேன் அளித்தால் மகிழ்ச்சி உண்டாகும்; பால் அளித்தால் ஆயுள் வளரும்; தயிர் அளித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; நெய் அளித்தால் மோட்சம் கிடைக்கும்; கரும்புச்சாறு அளித்தால் உடல்பிணியைப் போக்கும்; சந்தனம் அளித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்; பன்னீர் அளித்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது; பஞ்சாமிர்தம் தயாரிக்க பழங்கள் அளித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.
-
பொதுவாக சிவபெருமானை வழிபட்டால் நமக்கு நல்லறிவு கிட்டும். இதனால் எது நல்லது எது தவறு என்பதைப் பகுத்தறியலாம். உடலில் பதட்டம் இருக்காது. அமைதியான வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சிவதரிசனம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. அதுவும் ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்வர். 
-
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
-
|| -----------
திருச்சிற்றம்பலம் ----------- ||
Happy Sweet Sunday Morning my Dear Guru,GOD,
brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran


பணம் ! பணம் ! பணம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips

வாழ்வதற்கு பணம் தேவையாக இருக்கிறது:
பணம் சம்பாதிக்கவோ, நீ, உன் வாழ்ககையையே தொலைக்க வேண்டியிருக்கிறது.
இது ஒரு பொல்லாத வளையம்.
நீ வாழ வேண்டுமென்றால் உனக்கு பணம் தேவை,பணம் வேண்டுமென்றால் பலதோடும் ஒத்துப்போக வேண்டியுள்ளது.
அதன் பிறகு வாழ்வதற்கு உன்னிடம் வாழ்க்கை இருக்காது.
பணம் இருக்கும் : வாழ்க்கை இருக்காது.
பிரச்சனை இவ்வளவு குழப்பமாக இருப்பதால், சில வருடங்கள் இந்த வேலையைச் செய்தபின்,ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஓய்வாக நாம் நம் வழியை பார்த்துக் கொண்டு இருக்கலாம். என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இதில் பல பிரச்சனைகள் உள்ளன....
முதலாவதாக, ஒருவன் தொடர்ந்து வாழ்வதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நீ முப்பது, இருபது வருடங்கள் வாழ்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால்
அந்த தள்ளிப்போடும் தன்மையே உன் மனதின் பாகமாகி, உன் அமைப்பாகி விடும். நீ அதை கற்றுக்கொள்வாய்.
'ஓய்வுக்குப் பிறகு காட்டுக்குச் சென்று, நான் வாழ்வேன் ' என்று இருபது வருடங்கள் தள்ளிப்போட்டபின் தள்ளிப்போடுதல் ஒரு தன்மையாகிவிடும்.

"நாளை -நாளை -நாளை என்று முப்பதாண்டுகள் தள்ளியபின்,முப்பது வருடங்களுக்குப் பிறகு பென்சன் ஒருநாள் கிடைக்கும் : ஆனால் முப்பது வருடப் பழக்கமான 'நாளை 'யும் உன் கூடவே இருக்கும்."
திடீரென அதைவிட முடியாது. அது உன்னுடனே தங்கி இருக்கும்.
இப்போது நீ சிக்கிக் கொண்டாய்.
இதுவரைக்கும் ஒரு நம்பிக்கையாவது இருந்தது. இனி, அந்த நம்பிக்கைக்கும் வழியில்லை. இவ்வளவு நாளும் நாம் ஓய்வூதியம் பெற்று ஓய்வாக இருப்போம் என்ற நம்பிக்கையாவது இருந்தது.
பணப்பிரச்சனை தீர்ந்து விடும். சொந்த விஷயங்களை இனி செய்யலாம்.ஆடலாம்,பாடலாம் செய்ய விரும்பியதை எல்லாம் செய்யலாம்,ஏனெனில் இனி பணம் ஒரு பிரச்சனை இல்லை.
"ஆனால்,ஓய்வுக்குப் பிறகு, ஒருவன் வெறுமையையே உணர்வான். ஏனெனில்,அவனுக்கு,ஒரே மாதிரிதான் வாழத்தெரியும்...'நாளைக்கு வாழ்ந்து கொள்ளலாம் ' என்பதே அது"
ஓய்வு பெற்றவர்கள் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். வேலையில் இருந்திருந்தால் இன்னும் பத்து வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். எந்த வேலையில் எப்போதும் துன்பத்துடன் இருந்தார்களோ அதே வேலையை தொடர்ந்திருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்.
ஓய்வினால் வாழ்வில் பத்தாண்டுகள் குறைந்து விட்டது. தொண்ணூறு வருடம் வரை வாழவேண்டிய மனிதன் எண்பது வரைதான் வாழ்வான்.
"ஓய்வுபெற்ற மனிதனின் வாழ்க்கை ஒரு பயங்கர கனவுபோல ஆகிவிடுகிறது. யாருக்கும்,எதற்கும், அவன் தேவையற்றவன் ஆகிவிடுகிறான். அவன் அநேகமாக 'பயனற்ற' பொருள்களோடு எறியப்பட்டவனாகிறான்."
யார் கவலைப்படுகிறார்கள் அவனைப் பற்றி?
'நாம் பயனற்றவனாகி விட்டோம் ' என்று எண்ண ஆரம்பிக்கிறான்.
"இந்த எண்ணம் வந்த நாள் முதலே, நீ, தற்கொலை செய்துகொள்ள துவங்கிவிட்டாய் என்று அர்த்தம் "
இந்த எண்ணம் ஒரு விஷம்.
எனவே....
காலத்தை வீணாக்காதே.
பணம் ஒரு தேவை . அதுவே வாழ்வல்ல ..
இப்போதே ஆனந்த்தித்திரு நாளை அல்ல .
நாளை என்றுமே வருவது அல்ல . நாளை வந்தால் கூட
அதுவும் இன்றாகி விடும் . வாழ்க்கை இப்பொழுது மட்டுமே ..
விட்டுக்கொடுத்து போகிறவனை தைரியமில்லாதவன் என்றும்,
வைராக்கியமாய் இருப்பவரை ஈகோ பிடித்தவர் என்றும் பட்டம் கொடுக்கும் உலகம்...
எப்படி வாழ்ந்தாலும் விமர்சனம் தான்..
பிடித்த மாதிரியாவது வாழ்வோம்.. 
நம் மகிழ்ச்சிக்காவது உத்தரவாதம் இருக்குமே...
விடியல் வேளை வந்தனம்😀
நன்றி இணையம்


படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:21 PM | Best Blogger Tips

ஜீ நீங்க ஒரு ஹிந்து அபிமானிதானே. வழக்கறிஞரும்கூட. நீங்க ஏன் ஹிந்துக்களுக்காக இந்த வழக்கை எடுத்து நடத்தக்கூடாது என்று என்னைப் பார்த்து சிலர் கேட்பதுண்டு.
நீதிமன்றத்தில் ஒரு பொது வழக்கை தாக்கல் செய்துவிட்டால் பிரச்சனை அதோடு முடிவதில்லை. அந்த வழக்கின் விசாரணை குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்களாவது நீதிமன்றத்தில் நடைபெறும். இந்த காலகட்டத்திற்குள் வழக்கு சுமார் 10 அல்லது 15 முறை விசாரணைக்கு (வாய்தாக்கள்) வரும்.
இம்மாதிரி பொதுவழக்குகளை தாக்கல் செய்யம்பொழுது வழக்கறிஞர்கள் பெரிதாக வருமானம் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
பொது வழக்குகளில் சவால்கள் அதிகம், சிக்கல்கள் அதிகம். அந்த வழக்குகளை திறம்பட நடத்த நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். இதே காலகட்டத்தில் வழக்கறிஞருக்கு வருமானம் தரக்கூடிய ஏனைய வழக்குகளுக்கும் நேரம் ஒதுக்கியாக வேண்டும்.
கஷ்டப்பட்டு வழக்கை நடத்தி அதில் வெற்றிபெற்றால் மனுதாரருக்கு பரிகாரமும், வக்கீலுக்கு அங்கீகாரமும் கிடைக்கும். அந்த வழக்கு தோற்றுவிட்டால், பரவாயில்லை! நாம் முயற்சியாவது செய்தோமே, போராடி தானே தோற்றோம் என்ற ஆறுதலுடன் இருவரும் வீடு செல்வர். இந்த விவகாரத்தில், பொது நோக்கோடு வழக்கை தாக்கல் செய்ய முன்வரும் மனுதாரர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகாது. கோடிக்கணக்கான மக்களுக்கு இல்லாத அக்கறை அந்த ஒருவருக்கோ அல்லது குறிப்பிட்ட சிலருக்கோ ஏன்? அவ்வழக்கை தாக்கல் செய்ய அவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் தெரியுமா?
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருச்செங்கோட்டை சேர்ந்த சில நல்ல உள்ளங்கள் ஹிந்து மதத்தின் மீதும் அதன் கலாச்சாரத்தின் மீதும் அபிமானம் கொண்டவர்கள் தங்கள் குல தெய்வமான அர்தனாரீஸ்வரரையும், தேர் திருவிழாவையும் நாவல் என்ற பெயரில் பெருமாள் முருகன் என்ற ஒருவர் கொச்சைப்படுத்திவிட்டார். அந்த புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டார்கள். இந்த வழக்கிற்காக அவர்கள் சிரமப்பட்டது கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் நியாயத்தை நிரூபிக்க மிகவும் போராடினார்கள். ஒவ்வொரு வாய்தாவிலும் பங்குகொள்ள அவர்கள் திருச்செங்கோட்டிலிருந்து பேருந்தைப் பிடித்துக்கொண்டு சென்னைக்கு வருவர். விடுதியில் தங்குவர். கிடைத்த இடத்தில் உணவு உண்பர். வழக்கு நடக்கும் அந்த ஒரு நாள் முழுவதும் தத்தம் வேலைகளை விட்டுவிட்டு நீதிமன்ற விசாரணையை கவனித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கு தெரிந்த சங்கதிகளை வழக்கறிஞர் மூலம் நீதிபதிக்கு தெரியப்படுத்தி வழக்கிற்கு வலு சேர்ப்பர். இப்படியாக வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. துரதிஷ்டவசமாக வழக்கில் அவர்களுக்கு எதிர்பார்த்த தீர்ப்பு கிட்டவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். இத்தனை வருடம் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை அவர்கள் செய்துவிட்டனர். திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் கயவர்கள் ஹிந்து கடவுள்களையும், மதத்தையும் எத்தனை முறை இழிவுப்படுத்தியிருப்பார்கள். இத்தனை காலம் நாம் அவர்களை வேடிக்கைதானே பார்த்துக்கொண்டு இருந்தோம். ஆனால் ஒரு சிறிய ஊரிலிருந்து நாம் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்தோமே. வழக்கு உயர் நீதிமன்றத்தில் தோற்றால் என்ன, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடன் சென்றனர்.
ஆனால் இவ்வளவு நாட்கள் வழக்கைப்பற்றி கவலைப்படாத சுவதேசி இயக்கத்தைச் சேர்ந்த திரு. குருமூர்த்தி அவர்கள் திடீரென்று வழக்கு தோற்றதற்கு சரியான வழக்கறிஞரை நியமிக்காததே காரணம் என்று பத்திரிக்கையில் பகிரங்க பேட்டி கொடுத்திருக்கிறார். திரு குருமூர்த்தி அவர்கள் இன்று வரைக்கும் இந்த வழக்கிற்காக எந்த உதவியும் செய்யவில்லை. நான் யார் என்று கூட அவருக்கு தெரியாது. இருப்பினும் பொதுவில் ஒரு வழக்கறிஞரை தகுதியற்றவர் என்று அவமானப்படுத்தியிருக்கிறார். இவ்வளவு அக்கறை உள்ளவர் ஆராம்பத்திலேயே ஒரு தகுதியான வழக்கறிஞரை நியமித்து வழக்கை தயார் செய்து, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நடத்தியிருக்க வேண்டியதுதானே.
திரு குருமூர்த்திக்கு ஒரு விஷயம் தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டதே அவர் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அரசு வழக்கறிஞரான திரு ஜி. ஆர். சாமிநாதன் அவர்கள். மாதொருபாகன் புத்தகத்திற்கு எதிராக திருச்செங்கோடு மக்கள் போராட்டம் நடத்திய போது, அரசாங்கம் ஊர் மக்களையும் புத்தகத்தை எழுதியவருமான திரு பெருமாள் முருகன் அவர்களையும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமரசத்தை எட்டினர். சமரச உடன்படிக்கையின் படி, எழுத்தாளர் பெருமாள் முருகன் எதிர்ப்புக்குள்ளான சர்ச்சைக்குரிய விஷயங்களை தன் புத்தகத்திலிருந்து நீக்கிவிடுவதாகவும், மேலும் திருச்செங்கோட்டையும், அதன் மக்களையும் இழிவாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்டார். ஆனால் திரு குருமூர்த்தியின் இயக்கத்தைச் சேர்ந்தவரும், மத்திய அரசின் வழக்கறிஞருமான திரு ஜி. ஆர். சாமிநாதன் அவர்கள், பெருமாள் முருகன் கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார் என்று ஹிந்து பத்திரிக்கையில் வெளியிட்டு பிரச்சனையை பூதாகரமாக்கினார். அவர் வெளியிட்ட செய்தியை வைத்துக்கொண்டுதான் முற்போக்கு எழுத்தாளர்கள் உயர் நீதிமன்றத்தில் பெருமாள் முருகனின் சமரசம் செல்லாது என்று மூன்று வழக்குகளைத் தொடுத்தனர். பிரச்சனை மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வந்த பிறகு திருச்சங்கோடு மக்கள் மாதொருபாகன் புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்ற வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த உயர் நீதிமன்றம், பெருமாள் முருகனின் சமரசம் செல்லாது, அதேசமயத்தில் அவரது புத்தகத்தை தடையும் செய்யமுடியாது என்ற தீர்ப்பை வெளியிட்டது.
திரு குருமூர்த்தி அவர்களே, மேற்சொன்ன விவகாரத்தில் பெருமாள் முருகனுக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்தது திரு ஜி. ஆர். சாமிநாதன் என்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே! இதிலிருந்து பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்று அனைவருக்கும் தெரியட்டும். இராமாயணம் படிப்பவர்கள் பெருமாள் கோயிலை இடிக்கலாமா? உங்களுக்கு துணிவு இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுங்கள். அதை விட்டுவிட்டு எளியோர்கள் ஆகிய எங்களது முயற்சிகளை கொச்சைப்படுத்தாதீர்கள். சனாதன தர்மப்படி நடந்துகொள்ளுங்கள்.

 நன்றி இணையம்