ஜீ நீங்க ஒரு ஹிந்து அபிமானிதானே. வழக்கறிஞரும்கூட. நீங்க ஏன் ஹிந்துக்களுக்காக இந்த வழக்கை எடுத்து நடத்தக்கூடாது என்று என்னைப் பார்த்து சிலர் கேட்பதுண்டு.
நீதிமன்றத்தில் ஒரு பொது வழக்கை தாக்கல் செய்துவிட்டால் பிரச்சனை அதோடு முடிவதில்லை. அந்த வழக்கின் விசாரணை குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்களாவது நீதிமன்றத்தில் நடைபெறும். இந்த காலகட்டத்திற்குள் வழக்கு சுமார் 10 அல்லது 15 முறை விசாரணைக்கு (வாய்தாக்கள்) வரும்.
இம்மாதிரி பொதுவழக்குகளை தாக்கல் செய்யம்பொழுது வழக்கறிஞர்கள் பெரிதாக வருமானம் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
பொது வழக்குகளில் சவால்கள் அதிகம், சிக்கல்கள் அதிகம். அந்த வழக்குகளை திறம்பட நடத்த நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். இதே காலகட்டத்தில் வழக்கறிஞருக்கு வருமானம் தரக்கூடிய ஏனைய வழக்குகளுக்கும் நேரம் ஒதுக்கியாக வேண்டும்.
பொது வழக்குகளில் சவால்கள் அதிகம், சிக்கல்கள் அதிகம். அந்த வழக்குகளை திறம்பட நடத்த நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். இதே காலகட்டத்தில் வழக்கறிஞருக்கு வருமானம் தரக்கூடிய ஏனைய வழக்குகளுக்கும் நேரம் ஒதுக்கியாக வேண்டும்.
கஷ்டப்பட்டு வழக்கை நடத்தி அதில் வெற்றிபெற்றால் மனுதாரருக்கு பரிகாரமும், வக்கீலுக்கு அங்கீகாரமும் கிடைக்கும். அந்த வழக்கு தோற்றுவிட்டால், பரவாயில்லை! நாம் முயற்சியாவது செய்தோமே, போராடி தானே தோற்றோம் என்ற ஆறுதலுடன் இருவரும் வீடு செல்வர். இந்த விவகாரத்தில், பொது நோக்கோடு வழக்கை தாக்கல் செய்ய முன்வரும் மனுதாரர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகாது. கோடிக்கணக்கான மக்களுக்கு இல்லாத அக்கறை அந்த ஒருவருக்கோ அல்லது குறிப்பிட்ட சிலருக்கோ ஏன்? அவ்வழக்கை தாக்கல் செய்ய அவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் தெரியுமா?
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருச்செங்கோட்டை சேர்ந்த சில நல்ல உள்ளங்கள் ஹிந்து மதத்தின் மீதும் அதன் கலாச்சாரத்தின் மீதும் அபிமானம் கொண்டவர்கள் தங்கள் குல தெய்வமான அர்தனாரீஸ்வரரையும், தேர் திருவிழாவையும் நாவல் என்ற பெயரில் பெருமாள் முருகன் என்ற ஒருவர் கொச்சைப்படுத்திவிட்டார். அந்த புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டார்கள். இந்த வழக்கிற்காக அவர்கள் சிரமப்பட்டது கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் நியாயத்தை நிரூபிக்க மிகவும் போராடினார்கள். ஒவ்வொரு வாய்தாவிலும் பங்குகொள்ள அவர்கள் திருச்செங்கோட்டிலிருந்து பேருந்தைப் பிடித்துக்கொண்டு சென்னைக்கு வருவர். விடுதியில் தங்குவர். கிடைத்த இடத்தில் உணவு உண்பர். வழக்கு நடக்கும் அந்த ஒரு நாள் முழுவதும் தத்தம் வேலைகளை விட்டுவிட்டு நீதிமன்ற விசாரணையை கவனித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கு தெரிந்த சங்கதிகளை வழக்கறிஞர் மூலம் நீதிபதிக்கு தெரியப்படுத்தி வழக்கிற்கு வலு சேர்ப்பர். இப்படியாக வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. துரதிஷ்டவசமாக வழக்கில் அவர்களுக்கு எதிர்பார்த்த தீர்ப்பு கிட்டவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். இத்தனை வருடம் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை அவர்கள் செய்துவிட்டனர். திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் கயவர்கள் ஹிந்து கடவுள்களையும், மதத்தையும் எத்தனை முறை இழிவுப்படுத்தியிருப்பார்கள். இத்தனை காலம் நாம் அவர்களை வேடிக்கைதானே பார்த்துக்கொண்டு இருந்தோம். ஆனால் ஒரு சிறிய ஊரிலிருந்து நாம் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்தோமே. வழக்கு உயர் நீதிமன்றத்தில் தோற்றால் என்ன, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடன் சென்றனர்.
ஆனால் இவ்வளவு நாட்கள் வழக்கைப்பற்றி கவலைப்படாத சுவதேசி இயக்கத்தைச் சேர்ந்த திரு. குருமூர்த்தி அவர்கள் திடீரென்று வழக்கு தோற்றதற்கு சரியான வழக்கறிஞரை நியமிக்காததே காரணம் என்று பத்திரிக்கையில் பகிரங்க பேட்டி கொடுத்திருக்கிறார். திரு குருமூர்த்தி அவர்கள் இன்று வரைக்கும் இந்த வழக்கிற்காக எந்த உதவியும் செய்யவில்லை. நான் யார் என்று கூட அவருக்கு தெரியாது. இருப்பினும் பொதுவில் ஒரு வழக்கறிஞரை தகுதியற்றவர் என்று அவமானப்படுத்தியிருக்கிறார். இவ்வளவு அக்கறை உள்ளவர் ஆராம்பத்திலேயே ஒரு தகுதியான வழக்கறிஞரை நியமித்து வழக்கை தயார் செய்து, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நடத்தியிருக்க வேண்டியதுதானே.
திரு குருமூர்த்திக்கு ஒரு விஷயம் தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டதே அவர் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அரசு வழக்கறிஞரான திரு ஜி. ஆர். சாமிநாதன் அவர்கள். மாதொருபாகன் புத்தகத்திற்கு எதிராக திருச்செங்கோடு மக்கள் போராட்டம் நடத்திய போது, அரசாங்கம் ஊர் மக்களையும் புத்தகத்தை எழுதியவருமான திரு பெருமாள் முருகன் அவர்களையும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமரசத்தை எட்டினர். சமரச உடன்படிக்கையின் படி, எழுத்தாளர் பெருமாள் முருகன் எதிர்ப்புக்குள்ளான சர்ச்சைக்குரிய விஷயங்களை தன் புத்தகத்திலிருந்து நீக்கிவிடுவதாகவும், மேலும் திருச்செங்கோட்டையும், அதன் மக்களையும் இழிவாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்டார். ஆனால் திரு குருமூர்த்தியின் இயக்கத்தைச் சேர்ந்தவரும், மத்திய அரசின் வழக்கறிஞருமான திரு ஜி. ஆர். சாமிநாதன் அவர்கள், பெருமாள் முருகன் கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார் என்று ஹிந்து பத்திரிக்கையில் வெளியிட்டு பிரச்சனையை பூதாகரமாக்கினார். அவர் வெளியிட்ட செய்தியை வைத்துக்கொண்டுதான் முற்போக்கு எழுத்தாளர்கள் உயர் நீதிமன்றத்தில் பெருமாள் முருகனின் சமரசம் செல்லாது என்று மூன்று வழக்குகளைத் தொடுத்தனர். பிரச்சனை மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வந்த பிறகு திருச்சங்கோடு மக்கள் மாதொருபாகன் புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்ற வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த உயர் நீதிமன்றம், பெருமாள் முருகனின் சமரசம் செல்லாது, அதேசமயத்தில் அவரது புத்தகத்தை தடையும் செய்யமுடியாது என்ற தீர்ப்பை வெளியிட்டது.
திரு குருமூர்த்தி அவர்களே, மேற்சொன்ன விவகாரத்தில் பெருமாள் முருகனுக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்தது திரு ஜி. ஆர். சாமிநாதன் என்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே! இதிலிருந்து பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்று அனைவருக்கும் தெரியட்டும். இராமாயணம் படிப்பவர்கள் பெருமாள் கோயிலை இடிக்கலாமா? உங்களுக்கு துணிவு இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுங்கள். அதை விட்டுவிட்டு எளியோர்கள் ஆகிய எங்களது முயற்சிகளை கொச்சைப்படுத்தாதீர்கள். சனாதன தர்மப்படி நடந்துகொள்ளுங்கள்.
நன்றி இணையம்