
1975 - இப்போது வயது 52ஐ நெருங்குகிறது...

இதயம் முரளி படத்தின் முதல் சில காட்சிகளை நெட்ப்ளிக்ஸில் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அதில் வந்தவை இந்த கட்டுரையை எழுத தூண்டியது... படத்தை நிறுத்திவிட்டு இதனை எழுத தொடங்கினேன்.. 

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது உங்கள் முகத்தில் ஒரு சின்னச் சிரிப்பு வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.. கண்களின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தாலும் அதை மறைக்க வேண்டாம்...
ஏனென்றால், இது நீங்கள் வாழ்ந்து கடந்த ஒரு வாழ்க்கை....
70-80களில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வது மிகச் சிறிய வார்த்தை. நாங்கள் ஒரு தலைமுறை அல்ல...
இரண்டு உலகங்களுக்கு நடுவே பாலமாக நின்ற தலைமுறை....
ரேடியோவில் "இது அகில இந்திய வானொலி..." என்று ஒலித்த காலையையும் பார்த்தோம்... இன்று ஹே கூகுள் என்று கைப்பேசியிடம் பேசும் காலத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்....
கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் படம் தெளிவாக வர வேண்டும் என்பதற்காக... வீட்டுக்குள் இருந்து "அப்படியே... அப்படியே... இன்னும் கொஞ்சம் வலது... அய்யோ... போயிடுச்சுண்ணா என்று மொட்டை மாடியில் ஆண்டெனாவைத் திருப்பிக் கொண்டிருந்த அண்ணனிடம் கத்தினோம்... இன்று 4K படம் இரண்டு விநாடி நின்றாலே பொறுமை நின்றுவிடுகிறது...
ஞாயிற்றுக்கிழமை திரைப்படம் என்பது ஒரு வீட்டின் நிகழ்ச்சி அல்ல... ஒரு தெருவின் திருவிழா.... ஒரே வீட்டில் இருந்த ஒரே டிவியைச் சுற்றி அக்கம் பக்கத்தினர் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள்.... வெள்ளிக்கிழமை மட்டுமே மாலையில் 7.30 மணிக்கு முப்பது நிமிட ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் வரும் 5 பாடல்களுக்காக 6 நாட்கள் காத்திருப்போம்...
அப்போது டிவி ஒரு வீட்டில் இருந்தது... சிரிப்பு ஒரு தெருவில் இருந்தது... இன்று ஒவ்வொரு கையிலும் ஒரு திரை இருக்கிறது.. ஆனால் அந்தத் தெரு முழுக்க ஒலித்த சிரிப்புச் சத்தம் எங்கேயோ தொலைந்துவிட்டது...
மழை பெய்தால் நனைந்துவிடுவோமே என்று பயப்படவில்லை....அம்மா திட்டுவாரோ என்பதுதான் பயம்.... ஆனாலும் காகிதக் கப்பல் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்த்தில்லை... அது தண்ணீரோடு எவ்வளவு தூரம் மிதக்கிறது என்று பின்னாலேயே ஓடியிருக்கிறோம்.... இன்று மழையை ஜன்னல் வழியாக மட்டுமே பார்க்கிறோம்...
பல் விழுந்ததும் அதை ஓட்டு மேலே வீசிவிட்டு, "காக்கா... காக்கா... நல்ல பல்லு கொண்டு வா..." என்று முழு நம்பிக்கையோடு கத்தியிருக்கிறோம்... காக்கா உண்மையில் கேட்டதா தெரியாது... ஆனால் அந்த நம்பிக்கை மட்டும் எவ்வளவு அழகாக இருந்தது... அந்த குழந்தைப் பருவம் என்பதே அப்படித்தான்.... அறிவியல் குறைவாக இருந்திருக்கலாம்... ஆனால் மகிழ்ச்சி நிறைவாக இருந்தது...
தீபாவளி என்பது எங்களுக்கு ஒரு நாள் பண்டிகை இல்லை... ஒரு மாதக் கொண்டாட்டம்.... அப்பா எப்போது துணிக்கடைக்கு கூட்டிப் போவார் என்ற எதிர்பார்ப்பிலேயே நாட்கள் நகரும்... புதிய சட்டையையும் கால்சட்டையையும் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்ததும்.. "தீபாவளி அன்னைக்குத்தான் போடணும்..." என்று அம்மா சொன்னாலும்.. கதவைச் சாத்திக்கொண்டு ஒருமுறையாவது அணிந்து கண்ணாடி முன் நின்று பார்த்திருப்போம்... அந்தப் புதிய துணியின் வாசனைகூட இன்று வரை மறக்க முடியவில்லை...
பட்டாசுப் பெட்டியை வாங்கி வந்தவுடன் வெடிக்கவில்லை... முதலில் அதைத் திறந்து ஒவ்வொரு பட்டாசையும் எண்ணிப் பார்ப்போம்... லட்சுமி வெடி எத்தனை... சரம் எத்தனை... பூச்சட்டி, சக்கரம், ராக்கெட், புஸ்வானம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தினமும் ஒரு முறை திறந்து பார்த்துவிட்டு மீண்டும் அதே ஒழுங்கில் அடுக்கி வைப்போம்... அதனை மாடியில் வெயிலில் காயவைத்து தீபாவளியன்று அது நன்றாக வெடிக்கவேண்டுமென தினம்தினமும் காத்திருப்போம்... தீபாவளிக்கு முந்தைய இரவு மட்டும் தூக்கம் வராது.... புதிய துணிகளும், பட்டாசுப் பெட்டியும் தலையணைக்கு அருகிலேயே இருக்கும்... எப்போது விடியும்... எப்போது எண்ணெய் குளியல்... எப்போது முதல் வெடியை வெடிப்போம்... என்ற எதிர்பார்ப்பே அந்த இரவின் தூக்கமாக இருந்தது....
இன்று... ஆன்லைனில் துணி வாங்குகிறோம். பட்டாசுகளும் வாங்குகிறோம்.. ஆனால் அந்தக் காத்திருப்பு இல்லை. அந்தப் பரபரப்பு இல்லை. அந்தக் குழந்தை மனம் இல்லை....
அதுபோல.. முழுஆண்டு தேர்வு முடிந்து அடுத்த வகுப்பு என்கிற கெத்தும் பயமும் கலந்த உணர்வும்... புதிய புத்தகங்களை விட அதன் வாசனையைத்தான் முதலில் ரசித்தோம்.... பழைய காலண்டரை வெட்டி அட்டை போட்டு... வெள்ளை லேபிளில் பெயரை அழகாக எழுதுவதற்கே அரை மணி நேரம் எடுத்துக்கொண்டோம்... இன்று ஆயிரம் டிஜிட்டல் நுட்பங்கள் இருக்கின்றன... ஆனால் புதிய புத்தகத்தின் வாசனையை இன்னும் எந்தத் தொழில்நுட்பமும் உருவாக்கவில்லை....
பள்ளி முடிந்ததும் புத்தகப்பையை வீட்டுக்குள் தூக்கி எறிந்துவிட்டு... சாப்பாடு வாயில் இருக்கும்போதே "டேய்... வா!" என்று நண்பன் கூப்பிட்டால், அம்மாவிடம் கூட சொல்லாமல் வெளியே ஓடியிருக்கிறோம்.... கபடி, கோலி, பம்பரம், கில்லி, திருடன்–போலீஸ், ஓடிவிளையாடு... ஒளிஞ்சுவிளையாட்டு என எத்தனை எத்தனை... சூரியன் மறைந்த பிறகுதான் விளையாட்டு முடியும்...
அம்மா ஒரு முறை வாசலில் நின்று பெயர் சொல்லி கூப்பிட்டால்... அது வீட்டிற்கு திரும்பும் அலாரம்....
அன்று... மனிதர்களிடம் நேரம் அதிகம்... பொருட்கள் குறைவு...
இன்று... பொருட்கள் அதிகம்....மனிதர்களிடம் நேரம் குறைவு...
அப்பா ஒருபோதும் "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று சொல்லியதில்லை... ஆனால் சாலை கடக்கும்போது நம் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்தார்.... திருவிழா கூட்டத்தில் நம்மைத் தோளில் தூக்கிச் சென்றார்.... நமக்காக நல்ல மாம்பழத்தை ஒதுக்கி வைத்தார்.... அதுதான் அந்தக் காலத்து அன்பின் மொழி... அப்பாக்களின் மொழி...
வீட்டில் கரண்ட் போனால் இன்று எரிச்சல் வருகிறது... ஆனால் அன்று மொத்த தெருவும் வாசலுக்கு வந்துவிடும்... நிலாவைப் பார்த்தபடி தாத்தா கதைகள், பாட்டி சிரிப்புகள், பக்கத்து வீட்டு அக்காவின் கிண்டல்கள் என்று இரவு நகரும்... கரண்ட் இல்லாத அந்த இரவுகள்... உறவுகள் நிறைந்த இரவுகள்... இன்று இன்டர்நெட் போனால் பதறுகிறோம்..
வீட்டில் தொலைபேசி இருந்த வீடு அந்தத் தெருவின் தகவல் தொடர்பு மையம்... "உங்க மாமாவுக்கு போன்..." என்று பக்கத்து வீட்டுக்காரர் ஓடிவந்து கூப்பிடுவார்.... இன்று ஒரே வீட்டில் இருந்தும் மெசேஜ் அனுப்புகிறோம்...
கேசட் சிக்கிக் கொண்டால் பென்சிலை வைத்து சுழற்றித் திருத்தினோம்.... பிடித்த பாடல் ரேடியோவில் வந்தால் யாரும் பேசக்கூடாது என்று சைகை காட்டினோம்....ஒரு புகைப்படம் எடுப்பதற்கு முகத்தைச் சரிசெய்ய ஐந்து நிமிடம் எடுத்தோம்... இன்று நூறு புகைப்படங்கள் எடுத்த பிறகும்கூட... நம்மையே நமக்கு பிடிக்கவில்லை....
அன்று ஒரு ரூபாய் இருந்தால் உலகமே நம் கையில் இருந்தது.. ஐம்பது பைசா பென்னி பெப்ஸி எனும் ஐஸ் சாப்பிட்ட மகிழ்ச்சி.. இன்று ஆயிரம் ரூபாய் செலவு செய்தாலும் கிடைப்பதில்லை....
அன்று வீடுகள் சிறியதாக இருந்தன... மனங்கள் பெரியதாக இருந்தன... இன்று வீடுகள் பெரியதாகிவிட்டன.. மனங்கள்தான் சிறிதாகிவிட்டன.... அன்று கதவுகள் திறந்திருந்தன... இன்று கடவுச்சொற்கள் திறந்திருக்கின்றன...
அன்று உறவுகளை சேமித்தோம்... இன்று தொடர்பு எண்களை சேமிக்கிறோம்....
நாம் ரேடியோவிலிருந்து ஸ்மார்ட்போன் வரை வந்துவிட்டோம்.... கருப்பு-வெள்ளை தொலைக்காட்சியிலிருந்து 4K வரை வந்துவிட்டோம்... இன்லேண்ட் லெட்டரிலிருந்து எமோஜி வரை வந்துவிட்டோம்....
ஆனால் ஒரு மழை மணம்... தூரத்தில் எங்கோ ஒரு பழைய பாடல் நாம் ரேடியோ காலத்தில் கேட்ட பாடல்... சித்தமருத்துவ கடைகளின் சீயக்காயின் வாசனை... எங்கோ வீடியோவில் ஒரு பம்பரம் சுழலும் சத்தம்... இவை கேட்டாலே பார்த்தாலே அவ்வளவுதான்...நாற்பது வயது மனிதன் எங்கோ மறைந்துவிடுகிறான்...
காலில் செருப்பில்லாமல் மண் தெருவில் ஓடும் அந்தப் பத்து வயது சிறுவன் மட்டும் மீண்டும் உயிர் பெற்று ஓட ஆரம்பித்துவிடுகிறான்....
இது மாதிரி பட்டியல்கள் சில இன்னுமிருக்கிறது... முழுஆண்டுதேர்வும் முப்பது நாள் விடுமுறையும் அட அட.. அதுவே ஆயிரம் கதைகள் சொல்லும்..
அதனால்தான்...70 80 களில் பிறந்தவர்கள் வயதாகிவிட்டார்கள்... ஆனால் அவர்களுடைய குழந்தைப் பருவம் இன்னும் வயதாகவில்லை....
அது இன்னும் ஒருதுளி மண் வாசனையிலும்... ஒரு மழைத்துளியிலும்... ஒரு பழைய பாடலிலும்... ஒரு அம்மாவின் குரலிலும்... ஒரு அப்பாவின் பிடித்த கையிலும்... ஒரு பாட்டியின் கதையிலும்... உயிரோடு வாழ்ந்துகொண்டே இருக்கிறது
சிவா ஜி
🙏🌹நன்றி இணையம் 🌹🙏

