வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே-ஹோண்டா

மணக்கால் அய்யம்பேட்டை | 3:30 AM | Best Blogger Tips

இந்த உலகம் நிறைய வெற்றியாளர்களை கொண்டுள்ளது 
.
அந்த வெற்றியாளர்கள் வந்த பாதைகளை திரும்பி பார்த்தால் திரும்பிய திசையெல்லாம் தோல்வியே தெரிகிறது.இப்படி தான் உலகை திரும்பி பார்க்க வைத்த சாய்க்கிரோ ஹோண்டா சொன்ன ஒரு வார்த்தைதான் எனக்குள்ளும் நம்பிக்கை நெருப்பினை அணையாமல்
வைத்திருக்கிறது.
ஒரு காலத்தில்பிழைக்கத் தெரியாத பையன் என்று தன்னுடைய 18 வயதில் பெற்ற தகப்பனிடம் பெயர் எடுத்த ஹோண்டா தான் இன்று எத்தனையோ அப்பாக்கள்
தங்களின் செல்ல மகன்களுக்கு வாங்கி கொடுக்கும் ஹோண்டா மோட்டார் பைக்கினை உருவாக்கியவர்.
சாய்க்கிரோ ஹோண்டா தன்னுடைய வாழ்வில் 
அடைந்த தொடர் தோல்விகள் மாதிரி உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.அத்தனை தோல்விகளை யும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை  தனதாக்கிய சாய்க்கிரோ ஹோண்டா”.தனது வாழ்க்கை அனுபத்தில் கற்றுக்கொண்டு நமக்கு கற்பித்த வாக்கியம் தான் வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே..
டோயோட்டோ நிறுவனத்திற்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.யாருக்காகவும் அவர் காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர் களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக் கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.
இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டோயோட்டோ நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை நாங்கள் இன்னமும் பெட்டராக
எதிர்பார்க்கிறோம்என்று நிராகரித்துவிட்டது டோயோட் டோ நிறுவனம்.
முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொ த்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிக ளை பொழிந்தார்கள்.புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டோயோட்டோ நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
அருமை என்று பாராட்டி டோயோட்டோநிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப் பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான பிஸ்டன் தயாரிக்க முடியும்.
எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு.எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண் ட்டு கூட கிடைக்கவில்லை.வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா போ
எங்காவது வேலைக்கு போ என்று குடும்பத்தின் மிரட்டல் கள்..
இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமெண்டு கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக் கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.ஆங்காங்கு
கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற் சாலை யை கட்டி முடித்தார்.
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பிஸ்டன் தயாரி க்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூட வே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.அமெரிக்கா
போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.
ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிற ங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.
ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.
மொத்தத்தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு டோயோட் டோ நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.
இப்படிப்பட்ட நிலைமையில் நம்முடையமனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.....ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து..நான் ஆசைப்பட்ட..
ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப் படமாட்டேன்இருக்கிற நிலைமை யை எப்படி மாற்ற லாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விடுவேன் .என்றார்.
இரண்டாம் உலகப் போர் முடிந்தி ருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங் கிவிட்டன.எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.
அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.
அதைஎடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.அவரும் சளைக் கா மல் செய்து கொடுத்தார். அதன் விளைவுஇதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று மீண்டும் எல்லோரும் கூறினார்கள்.
அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்கா ரர்களுக்கு கடிதம் எழுதினார்.முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர் களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.
5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.
அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.
இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.
ஹோண்டா கார்களுக்கு உலக நாடுகள் அனைத்திலும் நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருகிறது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

 நன்றி இணையம்

கங்கா விஜயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:28 AM | Best Blogger Tips

கங்கா விஜயம்🕉🙏🏼🕉🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏼🌷🌷🌷🌷💐💐💐💐🙏🏼💐💐💐💐💐  
-----------------------------
​​கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன். தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில்.
​ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ''எவ்வளவு பாக்கியசாலி அவர்'' என்று அவரை தூர இருந்தே இரு கரம் கூப்பி கிழவன் வேண்டுவான்.
அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். அவனோடு பேசுவார். ஒருநாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை கிழவனிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார். நன்றாக ரிப்பேர் செய்து கொடுத்தான்.
அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந்தார். அருகே வந்து தரமுடியாதே! அவன் வணங்கி ''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''.
''உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது? நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது'' என்கிறார் அந்த பண்டிதர்.
''ஐயா இந்த ஏழைக்கு ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா? இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும் வணங்குகிறேன் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?'
''என்ன சொல்கிறாய். இந்த ஓரணாவை கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி''
பண்டிதர் கங்கையில் இறங்கினார் வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். ''அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவன் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள்'' என்று சொல்லி வீசி எறிந்தார்.
நுங்கும் நுரையுமாக ப்ரவாஹமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கையின் முகம் தோன்றியது பேசியது.
''பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள்'' என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலை, கொடுத்தாள். பண்டிதன் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான்.
அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டான். கிழவினிடம் ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் மனைவிடம் '' கமலா, இதோ பார்த்தாயா, நான் எதற்குமே பிரயோஜனம் இல்லை, ஏட்டுச் சுரைக்காய் என்பாயே'' இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு?
''என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள்? உங்களை போல் உதவாக்கரைகளுடன் பேசிவிட்டு தேங்காய் மூடி வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள். சீக்கிரம் கொடுங்கள். இன்றைய பொழுது துவையலிலாவது கழியட்டும். '' என்றாள் மனைவி.
''அசடே, இதைப் பார். என் வேதத்தை மதித்து கவுரவித்து அதால் பெற்றது. உனக்காக நான் சம்பாதித்தது'' என்று கங்காதேவி தந்த வளையலை தந்தான் பண்டிதன். கமலாவுக்கு தன்னையோ, தன் கண்களையோ நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண் கூசியது. என்ன ஒருவளை தானா? இன்னொன்று?''
''அடுத்த முறை கங்கையை கேட்டு வாங்கி தருகிறேன்'' என்று சமாளித்தான் பண்டிதன். இந்த ஒன்று எதற்கும் உதவாதே . நாமோ ஏழைகள். திருடர்கள் கொள்ளையர்களால் இதனால் உயிர் போனாலும் போகலாம். எனவே அவன் மனைவி கெட்டிக்காரி என்ன சொன்னாள்?
''இதோ பாருங்கோ, இந்த ஒண்ணை வச்சுண்டு என்ன பிரயோஜனம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் எல்லாரும் சிரிப்பார்கள். பேசாமல் இதை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக சௌகர்யமாக வாழலாம்.
ராஜாவிடம் சென்றான். கொடுத்தான். ராஜா வாங்கி பார்த்து மகிழ்ந்தான். ஒரு பை நிறைய பொற்காசுகள் கொடுத்தான். ராணியிடம் ஆசையோடு அந்த வளையை கொடுத்தான். மிக்க மகிழ்ச்சி அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது. ''இன்னொன்று எங்கே?''
ராஜாவிடம் ''இன்னொன்றும் வேண்டுமே எங்கே'' என்று கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதனை அழைத்து வர செய்தான்.
''ஹே ப்ராமணா. இன்னொரு வளை எங்கே? ஏன் அதை தரவில்லை? வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடு. ராணி கேட்கிறாள்''
​பிராமணன் தயங்குவதை பார்த்த ராஜாவுக்கு கோபம் வந்தது. ''என்ன விளையாடுகிறாயா என்னிடம். இன்னும் ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையுடன் நீ வரவில்லை என்றால் உன் உயிர் உனதல்ல .ஜாக்கிரதை'' என்றான். ராஜாவின் கட்டளை பண்டிதனுக்கு எம பயத்தை தந்ததால் ஓடினான். எங்கே? கங்கைக்கரைக்கு.
அந்த கிழவன் வழக்கம்போல் அதிகாலையில் கங்கைக் கரைக்கு தூர நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடி கங்கையை வணங்கினான். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டான் அது தான் அவனுக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தான்.
திடீரென்று தன முன்னே பண்டிதன் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவனுக்கு ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.
''சாமி நீங்க என்ன செய்றீங்க?"' என்ன ஆச்சு உங்களுக்கு? நான் தானே உங்களை எப்போவும் வணங்கறது?''
''என்னை மன்னிச்சுடுப்பா. நான் துரோகி. கங்கா மாதா உனக்கு கொடுத்த பரிசை திருடி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவன் அதை வித்து ராஜாகிட்ட நிறைய பணம் வாங்கினேன். இப்போ என் உயிரே காற்றிலே ஊசல் ஆடுது என்று விஷயத்தை சொன்னான் பண்டிதன்.
''ஆஹா அப்படியா. நமக்கு யார் உதவி செய்வாங்க இப்போ ? எப்படி இன்னொரு வளையல் கிடைக்கும்? கங்காமாதாவையே கேட்போம்.
கிழவன் கண்ணை மூடினான். தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினான். அம்மா கங்கா நீ எனக்கு பரிசாக ஒரு வளை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே. பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்'' என்று தனது கையை அந்த ஜலத்தில் விட்டான்.
மீண்டும் பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த கிழவனின் அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.
அப்புறம் என்ன நடந்ததா??
பண்டிதன் ராஜாவிடம் அதை எடுத்து போகவில்லை. தனது உயிரைப் பற்றி கவலைப் படவில்லை. வீடு, கமலா எல்லாவற்றையும் மறந்தானா , துறந்தானா எதுவோ ஒன்று. அங்கேயே கிழவனின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தான். விஷயம் பரவியது. ராஜாவும் அவன் மனைவியும் ஓடி வந்தார்கள். கிழவனை வணங்கினார்கள். அரண்மனைக்கு கூப்பிட்டார்கள்.
என் கங்காமாதா தரிசனம் ஒன்றே போதும் என்று அவர்களை திரும்பி வணங்கினான் கிழவன்.🌷🌷🙏🏼🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🏼🌸💐💐💐💐💐💐🙏🏼💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🙏🏼

 நன்றி இணையம்

செயின் அறுப்பு திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:28 AM | Best Blogger Tips

விழிப்புணர்வு கட்டுரை!
-------திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,
(
முன்னாள் காவல்துறை அதிகாரி)
தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)
சமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஜூலை மாதத்தில் மட்டும் 37 இடங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
இதில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கப்பட்ட இளைஞர்கள். அது மட்டுமல்ல அவர்களில் பலர் நன்றாக படித்த பட்டதாரி இளைஞர்கள்.
இந்த செயின் அறுப்பு குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்ன? இதற்கு முக்கிய காரணம் மிக அதிகமாக ஏறி வரும் தங்கத்தின் விலைதான்.
தங்கத்தின் விலை ஒரு சவரன் 24,000/- ருபாய் உயர்ந்து விட்டதால், இந்த செயின் அறுப்பு திருடர்கள் அறுக்கும் செயினை உடனே அடகு வைத்தாலோ அல்லது விற்றோலோ மிக எளிதில் அவர்களுக்கு அதிகமான பணம் கிடைத்துவிடும்.
இளைஞர்கள் செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபடுவது ஏன்?
1.பெரிய நகரங்களிலுள்ள படித்த இளைஞர்கள் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் "PUB " நிகழ்ச்சிக்கு அடிக்கடி செல்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. இந்த PUBகளில் சிறிய வயது ஆண்களும் பெண்களும் மது அருந்தி விட்டு நடமாடுவதுண்டு. ஒரு தடவை PUBற்கு செல்ல ஒருவருக்கு ரூபாய்.2000/- முதல் 3000/- வரை செலவாகும். செயின் அறுப்பு சம்பவங்களில் கைதான சில படித்த இளைஞர்கள் தாங்கள் " PUB ற்கு செலவழிக்கத் தேவைப்படும் பணத்திற்காக செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.
2. மதுவிற்கும் போதை மருந்துக்கும் அடிமையான சில இளைஞர்கள் அதற்கு தேவைப்படும் பணத்திற்காகவும் இது போன்ற செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட்டதும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
3.இந்த நவீன காலத்தில் இளைஞர்கள் நவீன மோட்டர் சைக்கிளையும் ஸ்மார்ட் செல்போனையும் மிக அதிகமாக விரும்புகிறார்கள். இந்த குற்றங்களில் கைதான சில இளைஞர்கள் நவீன மோட்டர் சைக்கிளையும் ஸ்மார்ட் செல்போனையும் வாங்குவதற்காக இது போன்ற செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அடிக்கடி "PUB” ற்கு செல்கிறார்களா? மது மற்றும் போதை மருந்து அருந்துகிறார்களா? என்பதை உரிய முறையில் கண்காணித்து அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தங்கள் பிள்ளைகள் இந்த பழக்கங்களுக்கு அடிமையாகாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கெட்ட பழக்கங்களுக்கு தேவைப்படும் பணத்திற்காக உங்கள் பிள்ளைகள் இது போன்ற செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட வாய்ப்புண்டு.
2.இப்போதெல்லாம் நவீன மோட்டர் சைக்கிளும் ஸ்மார்ட் போனதும் உபயோகிப்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே உங்கள் பிள்ளைகள் இது போன்ற பொருட்களை விரும்பினால் வசதியுள்ள பெற்றோர்கள் அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுங்கள். வசதியில்லாத பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணியுங்கள்.
இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை:
செயின் அறுப்புத் திருடர்கள் இரு சக்கர வாகனங்களைத் திருடி அதை உபயோகித்தே இந்தக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் எனவே உங்கள் இருசக்கர வாகனம் தொலைந்த அடுத்த நிமிடமே காவல் துறைக்கு புகார் கொடுங்கள் இல்லாவிட்டால் போலீசாரின் சந்தேகக் கணைகள் உங்கள் மீது பாய்ந்துவிடும்.
அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
1.ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் "செயின் அறுப்பு பகுதி" ( Chain Snatching Zone ) என்று ஒன்று உண்டு. இதைக் கண்டு பிடித்து அந்த இடங்களைச் சுற்றி பாதுகாப்பு கேமராக்களை அரசாங்கம் உடனடியாகப் பொருத்த வேண்டும்.
2.அடகு நகை வியாபாரிகளும், நகைக்கடை ஷோரூம்களும் தங்களிடம் தங்க நகை விற்கவோ, மாற்றிக்கொள்ளவோ வருபவர்களிடம் உரிய அடையாள ஆவணங்களை வாங்கி கொண்டு அந்த நபர்களின் புகைப்படத்தை பதிவு செய்த பின்பே அவர்களிடம் அந்த நகையை வாங்க வேண்டுமென்று அறிவுறுத்தவேண்டும்.
காவல் துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
1.பெரும்பாலான காவல் நிலையங்களில் திருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. இதன் காரணமாகவே இது போன்ற செயின் அறுப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டில் மிக அதிகமாக நடக்கின்றன. எனவே திருட்டு நகைகளை வாங்கும் நகைக்கடைகள் மீது 3 வருடம் "சிறைத் தண்டனை கிடைக்கக்கூடிய இந்திய தண்டனைச் சட்டம் 411 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
2. நமது போலீசார் செயின் அறுப்பு திருடர்கள் மீது 3 வருடம் தண்டனை கிடைக்கக்கூடிய 379 IPCலேயே வழக்குப் பதிவு செய்கிறார்கள். ஆனால் செயின் அறுப்பு குற்றம் robbery என்பதால் 10 வருடம் தண்டனை கிடைக்கக்கூடிய 392 IPC ல் இந்த குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பெண்கள் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவைடிகைகள்:
1.செயின் அறுப்பு சம்பவங்கள், பள்ளிகள், கோவில்கள், பூங்கா மற்றும் நடைப்பயிற்சி ஆகிய இடங்களுக்கு அருகிலேயே நடப்பதால் இந்த இடங்களிலெல்லாம் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2. பொதுவாக செயின் அறுப்பு குற்றங்கள் இருசக்கர வாகனங்களை உபயோகித்தே நடக்கின்றன எனவே எந்த இருசக்கர வாகனமும், உங்களுக்கு அருகே நெருங்கி வந்தால் எச்சரிக்கை தேவை.
3,இருசக்கர வாகனங்களிலும் சைக்கிளிலும் உங்களுக்கு அருகே வந்து ஏதாவது விசாரித்தால் அவர்களுக்கு பதிவளிக்காமல் அவர்களை விட்டு உடனே விலகி செல்லுங்கள்.
4. ரோட்டில் நடந்து செல்லும் போது செல்போனில் பேசிக் கொண்டு செல்லாதீர்கள்..
5.இருட்டு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாத தெருக்களில் தனியாக நடந்து செல்லாதீர்கள்.
6.யாராவது உங்களை பின் தொடர்ந்து வருவதாக நீங்கள் உணரும் பட்சத்தில் உடனடியாக ஆட்கள் அதிக நடமாட்டமுள்ள மெயின் ரோடுக்கு ஓடி வந்து விடுங்கள்.
7.செயின் அறுப்பு சம்பவம் நடக்கும் போது சத்தத்தை 
எழுப்பி மற்றவர்களை உதவிக்கு அழையுங்கள். ஆனால் அந்த குற்றவாளியுடன் எதிர்த்து போராடாதீர்கள். காரணம் நீங்கள் அவர்களை எதிர்த்துப் போராடினால் இப்படிப்பட்ட குற்றவாளிகள் தங்களிடம் இருக்கும் கத்தியினால் உங்களை காயப்படுத்திவிடுவார்கள்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
இது போன்ற சமுதாய சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து படிக்க விரும்பினால் கீழ்க்கண்ட link Click செய்து
https://www.facebook.com/varadarajpublicfigure/?fref=ts
எனது பக்கத்திலுள்ள Like பட்டனை அழுத்துங்கள்.
இது போன்ற சமூக சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுக்கும் எங்கள் இயக்கத்தில் சேர விரும்பினால் www.nptmk.com சென்று எங்கள் இயக்கத்தில் நீங்கள் சேரலாம்.
நன்றி
-
திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,
(
முன்னாள் காவல்துறை அதிகாரி)
தலைவர் 
நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)
தமிழ்நாட்டு ஊழல் அரசியலுக்கு 
எதிரான இயக்கம்