மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:48 PM | Best Blogger Tips



ஓருவருக்குச் சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே நாம் கேட்கும் கேள்வி, அவருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா? என்பதே.

சர்க்கரை நோய்க்கும் சிறுநீரகச் செயல் இழப்புக்கும் அந்த அளவுக்குத் தொடர்பு இருக்கிறது.

"ஆனால் சிறுநீரகச் செயல் இழப்புக்குச் சர்க்கரை நோய் தவிர, நிறையக் காரணங்கள் இருக்கின்றன'' என்கிறார் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பில்ராத் மருத்துவமனையில் சிறுநீரகத்துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் ஆர்.விஜயகுமார்.

"சர்க்கரை நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரகச் செயல் இழப்பு ஏன் ஏற்படுகிறது? சர்க்கரை நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரில் அதிகமான அளவில் புரதம் வெளியேறுகிறது. இதனால் அடிக்கடி அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள். அவர்களுடைய சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிகப்படியான புரதம் வெளியேறிவிடுவதால், உடல் பருத்துவிடுகிறது. கை, கால்களில் வீக்கமும் ஏற்படுகிறது.

அடுத்து, ரத்தத்தில் யூரியாவின் அளவும் அதிகமாகிவிடுகிறது. இப்படி புரதம், யூரியா என்று ரத்தத்தில் அதிக அளவு கழிவுகள் சேர்ந்து கொண்டே போகின்றன. சிறுநீரகங்களால் ஓர் அளவுக்கு மேல் ரத்தத்தில் உள்ள கழிவுகளைத் தூய்மைப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ரத்தத்தில் கழிவுகளின் அளவு அதிகரிக்கிறது. இந்தக் கழிவுகளை நீக்க, ரத்தத்தைச் செயற்கையான முறையில் தூய்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது, டயாலிஸிஸ் செய்ய வேண்டியிருக்கிறது. இதன் பின்னர் சிலநாட்களிலேயே சிறுநீரகங்கள் முற்றிலும் செயல் இழந்துவிடுகின்றன.

ஆனால் இது தவிர, சிறுநீரகச் செயல் இழப்புக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன'' என்கிறார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுநீரகவியல்துறையில் நிபுணரான அவர்.

"இப்போது என்னிடம் வரும் நோயாளிகளில் 8 - 10 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகப்படியான வலி நிவாரண மாத்திரைகளை - அதாவது, தலைவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கான மாத்திரைகளை - பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. நான்-ஸ்டிராய்ட் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ் (NSAID) வகை மருந்துகளைப் பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக DICLOFENAC, NIMESULIDE போன்ற வலிநிவாரண மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

டாக்டர் எப்போதோ ஒரு நோய்க்கு ஒரு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்திருப்பார். மீண்டும் அது போன்ற நோய் வரும்போது, டாக்டரிடம் காண்பிக்காமல் பழைய மருந்துச் சீட்டைக் காட்டி மருந்துகளை வாங்கி பலர் உட்கொள்கிறார்கள். இது தவறு.

ஒரே விதமான அறிகுறிகளுடன் பல நோய்கள் இருக்கலாம். உதாரணமாக தலைவலிக்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன. மருத்துவர் எதனாலோ வந்த தலைவலிக்கு எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வேறு காரணத்தால் வந்த தலைவலிக்குப் பயன்படுத்துவார்கள். இதனாலும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

அதுமட்டுமல்ல, ஒருவருக்கு ஏதாவது நோய் வந்துவிட்டதாக அடுத்தவரிடம் சொன்னால், உடனே இந்த இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் நோய் குணமாகிவிடும் என்று இலவச மருத்துவ ஆலோசனை கிடைக்கிறது. தனக்கு அந்த மாதிரி நோய் வந்தபோது டாக்டர் இதைத்தான் எழுதிக் கொடுத்தார் என்பதாகச் சொல்வார்கள். அப்படி அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும்போது பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த மாத்திரை ஒவ்வாமல் போய் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

சில ஆன்ட்டிபயாடிக் மருந்துகளாலும் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. சென்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஏன் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படுகிறது?

உடலுக்குப் பொருத்தமில்லாத மருந்து, மாத்திரைகள் உடலுக்குள் சென்று செரிமானமாகி, உடலில் கல்லீரலிலும், ரத்த ஓட்ட சுழற்சியிலும் சேர்ந்த பிறகு, அவை எல்லாம் வெளியேறுவது சிறுநீரகங்களில் வழியாகத்தான். இதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டவர்களை ஆரம்ப நிலையில் கொண்டு வந்தால் இரண்டு, மூன்று முறை டயாலிஸிஸ் செய்து குணப்படுத்திவிடலாம். அதிக அளவில் சிறுநீரகப் பாதிப்பு இல்லாமல் சரி செய்துவிடலாம். இதற்கே ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டால், மாற்றுச் சிறுநீரகம்தான் பொருத்த வேண்டும். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்'' என்கிறார் அவர்.

"சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க ஓரே வழி, டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வதுதான்.
டாக்டரிடம் போக நேரமில்லை என்பதாலோ, டாக்டரிடம் போனால் அதிகக் கட்டணம் வசூலித்துவிடுவார் என்பதாலோ, மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டால் அதனால் ஏற்படும் இழப்பு மிகவும் அதிகம். மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் ஆர்.விஜயகுமார்.

பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tips


பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பார்கள். 108 திவ்ய தேசங்கள் உள்பட எல்லா பெருமாள் கோயில் களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் ஸ்தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் மிகவும் சிறந்தது.

சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.

பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள். சனிக்கிழமை விரத மகிமையை விளக்க ஒரு புராண கதை உண்டு.திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் பீமன் என்ற குயவர் வாழ்ந்து வந்தார். தீவிர பெருமாள் பக்தர். வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்து கொண்டார்.

இவருக்கு சாஸ்திர, சம்பிரதாய, பூஜை வழிமுறைகள் எதுவும் தெரியாது. தொழில் மற்றும் ஏழ்மை நிலை காரணமாக கோயிலுக்கு போகவும் நேரம் இருக்காது. அப்படியே சென்றாலும் “பெருமாளே நீயே எல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவார்.ஒருநாள் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. கோயிலுக்கு போக நேரமில்லை. ஆகையால் பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று நினைத்து களிமண்ணால் பெருமாள் சிலை ஒன்றை செய்தார்.

பூ வாங்க பணம் இல்லாததால் மண்ணை சிறு பூக்களாக உருட்டி மாலையாக தொடுத்து அணிவித்து வணங்கினார்.அவ்வூர் அரசர் தொண்டைமானும் திருப்பதி பெருமாளின் பக்தர். அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு தங்க பூமாலை அணிவித்து வழிபடுவார். ஒரு தடவை மாலை அணிவித்துவிட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது. அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்று குழப்பத்திலேயே அரண்மனைக்கு சென்று படுத்தார்.

அன்று அரசன் கனவில் தோன்றிய பெருமாள், பீமனின் பக்தியையும் தாம் அதனால் மகிழ்வுற்றதையும் விளக்கினார். உடனே மன்னர் அந்த குயவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளையும், பொன்னையும், பொருளையும் அள்ளி கொடுத்தார். ஆனால் அதைக் கண்டு சிறிதும் மயங்காத குயவர் இறுதிவரை தன் விருப்பப்படி பெருமாள் விரதம் இருந்து வைகுண்ட பதவி அடைந்தார். அந்த பக்தரின் நினைவாக இன்றளவும் ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.


இம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. செப்டம்பர் 24, ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

நகப் பராமரிப்புக்கு அழகுக் குறிப்புக்கள்….

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips


* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
...

* நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ்ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

* ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

லிப்ஸ்டிக் போடும் பெண்ணா நீங்கள்? இதைப்படிங்க!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | Best Blogger Tips



வேலைக்கு செல்பவர்களோ, இல்லத்தரசிகளோ திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது லிப்ஸ்டிக் இன்றி வெளியே கிளம்புவதில்லை. அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதயநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர்கள் அபாய மணியை ஒலிக்க விட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் (triclosan) என்ற ரசாயனம் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களில் அனைத்திலும் உள்ளது. இந்த ரசாயனம் இருதயம் உட்பட மூளையிலிருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
...

எலிகளை வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. எலிகளுக்கு டிரைக்ளோசன் கொடுக்கப்பட்ட 20 நிமிடத்திலேயே அவைகளின் இருதயச் செயல்பாடுகள் படிபடிப்படியாக குறைந்தது. இதுவே மனித உடல்களிலும் நடக்கலாம் என்று இவர்கள் எச்சரித்துள்ளனர். டிரைக்ளோசன் அனைத்திலும் உள்ளது, சுற்றுப்புறச் சூழலில் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கே கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுகின்றனர்.

ஆனாலும் எலிகளில் பரிசோதனைக்காக ஏற்றப்பட்ட டிரைக்ளோசன் அளவுகள் அதிகம், ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் உள்ள இந்த ரசாயனத்தின் அளவு மிகக்குறைவே என்று இந்தப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்துவருகின்றனர். மருத்துவ மனைகளில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பாக்டீரியா நுண்ணுயிரித் தாக்கத்தை இது தடுப்பதாகவே டாக்டர்கள் கருதுகின்றனர்.

ஆனால் கலிபோர்னியா விஞ்ஞானிகளோ இந்த ரசாயனத்தின் தாக்கம் உடல் உறுப்புகளிலும் விளைவை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறுகின்றனர். டிரைக்ளோசன் பற்றி ஏதோ இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ரசாயனத்திற்கும் தைராய்டு பிரச்சனை மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தசைகளில் இதன் தாக்கம் பற்றி இப்போதுதான் ஆராய்ப்படுகிறது.

நல்ல இருதய ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இந்த ரசாயனத்தினால் 10% இருதயச் செயல்பாடு குறைந்தால் தெரியாது. ஆனால் இருதயப்பிரச்சனைகள் ஏற்கனவே உள்ளவர்களுக்கு 10% செயல்பாட்டுக் குறைவு என்பது ஆபத்துதான் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே லிப்ஸ்டிக் போடும் பெண்களே லிப்ஸ்டிக் போட்டால்தான் அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள் இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி இருக்கு...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:10 PM | Best Blogger Tips



பெண்கள் தன் வாழ்வின் பெரும் பாக்கியமாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தையை நல்லபடியாக பெற்றெடுப்பது தான். ஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்கு கிடைக்க நிறைய நாட்கள் ஆகின்றன. அதிலும் சிலர் என்ன தான் கர்ப்பமாக இருந்தாலும், அவர்களுக்கு தெரியாமலேயே கருசிதைவு ஏற்பட்டுவிடும். இத்தகைய கருசிதைவு 20 வாரங்களில் நடைபெறும். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக கருசிதைவு ஏற்படும். அதற்கு காரணம், அவர்கள் பலவீனமாக இருப்பது, கவனக்குறைவுடன் நடந்து கொள்வது, கருமுட்டை சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பது போன்றவைகளே. இவை அனைத்து தேவையில்லாமல் நடப்பது அல்ல. அனைத்தும் கருவுறும் பெண்கள் நடந்து கொள்வதிலேயே இருக்கின்றன. அதிலும் சில பெண்கள் ஒரு சிலவற்றை சாதாரணமாக விடுகின்றனர். ஆகவே அவ்வாறு கருசிதைவு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

* கர்ப்பமாக இருக்கும் போது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். அதிலும் ஒரு பக்கம் மட்டும் அதிகமான வலி ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமல்லாமல், சில...
நாட்கள் முதுகு வலியும் ஏற்படும். அதிலும் அந்த நேரத்தில் வரும் வயிற்று வலி, மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி போல் இருக்கும். இந்த நேரத்தில் உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்.

* இரத்த போக்கு அதிகமாகவோ, குறைவாகவோ, விட்டுவிட்டோ, முதல் மூன்று மாதங்களில் ஏற்படுமாயின், அதுவும் கர்ப்பம் கலைந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகளே. இவ்வாறு அதிக அளவு இரத்த போக்கு ஏற்படும் போது, உடனே மருத்துவரை அணுகி, கருப்பையை சுத்தம் செய்துவிட வேண்டும். இல்லையென்றால், கருப்பையில் இருந்து கருப் போல் உருவாகும் இரத்த கட்டிகள் முழுதும் வெளியேறாமல், கருப்பையில் நோயை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும். பின் அது தாயின் உடலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும், மேலும் மற்றொரு முறை கர்ப்பமாகும் வாய்ப்பும் இல்லாமல் போகும்.

* கர்ப்பத்தின் போது பெண்கள் தங்கள் வயிற்றில் குழந்தை இருப்பதை ஓரளவு உணர முடியும். ஆனால் கர்ப்பம் கலைந்துவிட்டதென்றால், அந்த உணர்வு போய்விடுவதோடு, மார்பில் வலி மற்றும் அதிக படியான பசி போன்றவை ஏற்படும். அவை அனைத்து ஒவ்வொருவரின் உட நிலையைப் பொறுத்தது. ஆனால் இந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஆகவே கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏதேனும் இது போன்ற எண்ணங்களோ அல்லது அறிகுறிகளோ ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்.