"எந்த இறைவன்... உங்கள் இறைவனா..."

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 PM | Best Blogger Tips
பாலகுமாரன் க்கான பட முடிவு
எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் எழுதப்பெற்ற "சிம்மாசனம்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை.
காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார்.
"கிழவரே... நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை.
எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்... தருகிறேன்" சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.
ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன் ஏற்பவர்கள். கோபமில்லாதவர்கள். எதிரே இருப்பவன் அரசனோ, அசுரனோ, அறிவிலியோ, ஆராய்ந்து அறிந்த பண்டிதனோ யாராயினும் தரக்குறைவாகப் பேசமாட்டார்கள்.
எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை. ஞானியின் கைகள் எப்போதும் பிறருக்காகத்தான் தானம் கேட்கும். ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும்.
ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது. பல செல்வந்தர்களுக்கு இந்த எளிமை புரியாத விஷயமாக இருக்கிறது.
சற்று உயரமாக மேடை போட்டு... உலகமே தன் கீழ் என்கிற மமதை வந்துவிடுகிறது. ஆட்சியாளர் பலருக்கு இதுவே வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.
ஆட்சியில் அமர்வது என்பது இடையறாது தந்திரம், கணக்கில்லாத துரோகங்கள், கலவரம் ஊட்டும் வன்முறைகளால் நிகழ்வது. இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு இருந்தால்கூட அவனுக்கு நல்ல தூக்கம் என்பதில்லை. மூன்றையும் கொண்டவனுக்கு எவ்விதம் தூக்கம் வரும்.
ஆழ்ந்து தூங்காதவனிடம் அமைதி எப்படி குடிகொண்டு இருக்கும். அமைதியில்லாத எவனும் பிறரை எளிதில் அவமதிப்பான். ஆட்சியாளர்கள் சகலரையும் அவமானப்படுத்த இந்த அமைதியின்மையே காரணம்.
மறுநாள் விடிந்தது. காசி தேசத்துச் சான்றோர்கள் அவையில் கூடினார்கள். பாட்டுப் பாடுகிற வித்வான்களும், ஆடல் மகளிரும், அரபியில் கவிதை சொல்கிறவர்களும், அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும் ஒன்றுகூடினார்கள்.
"எங்கே அந்த மதுரைக் கிழவர்...?" நவாப் விசாரித்தார்.
"அவர் அரபி படிக்க போயிருக்கிறார்." யாரோ சொல்ல, சபை சிரித்தது.
"அப்படியா... ஆயுஸுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள்..." மறுபடி சபை சிரித்தது.
"அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க வேண்டும்." யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.
"அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே... வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே..."
"இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில் நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட முடியும்.." ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.
"சில சவுக்கடிகள்..." ஒரு உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான். மறுபடியும் அந்த நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.
"ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா..."
"வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக் கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார். உம்முடைய அழுக்குத் துணிகளைச் சுமப்பார். அதுவரை பொறுத்திருங்கள்.
நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மதுரைக் கிழவர் மிருகமாக வருவார் என்கிறீர்களா..."
"ஆமாம்... ஆமாம்..." என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.
வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது.
குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார்.
அவர் நரைத்த தலைமுடியும், தலைப்பாகையும், வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும், இறையை உணர்ந்த உறுதியான முகமும், போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின.
அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான்.
"என்ன இது..." கத்தினான்.
"நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்."
"இதுவா ஆசனம்... இது சிங்கமல்லவா..."
"இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா..."
காலியான ஒரு ஆசனத்தில் உட்காரும் பொருட்டு அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு அருகே நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான்.
ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. சிறுநீர் விட்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று. உலகத்தில் எந்த துதிபாடியும் ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.
குமரகுருபரர், "இங்கே வா.." என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான்.
குமரகுருபரர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. முகச் சுருக்கங்கள் சிரித்தன. இதழ்க் கடைகள் சிரித்தன. காது வளையங்கள் சிரித்தன. அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.
நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்..." மீண்டும் சலாம் செய்தான்.
"தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"
"காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும்."
"நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே."
"நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..."
"ஆமாம். பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி... எப்படி இது சாத்தியமாயிற்று?"
"இறையருள்."
"எந்த இறைவன்... உங்கள் இறைவனா..."
"உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு."
"ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?"
"ஒரு நொடியில் கொடுத்தான்."
"நீங்கள் மண்டியிட்டு வேண்டினீர்களா..."
'சகலகலாவல்லி மாலை' என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில் இறைவனை வேண்டினேன்.
"மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம்.
கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல் எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்..." நவாப் பணிவாகப் பேசினார்.
(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)
நன்றி.
குருவே துணை.


முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:50 PM | Best Blogger Tips
Image may contain: one or more peopleNo automatic alt text available.Image may contain: one or more people and people standing
கும்பகோணத்தில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் உள்ளன. அவை...
* திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோவில். கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது இந்த ஆலயம்.
* கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம். இது மாந்தி பகவான் பரிகாரத் தலம் ஆகும்.
* திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவில். ராகு– கேது பரிகாரத் தலம்.
* வைத்தீஸ்வரன் கோவில். இது செவ்வாய் பரிகார தலமாகும்.
* திருந்து தேவன்குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவில். இது அனைத்து முன் ஜென்ம பாவங்களையும் போக்கும் திருத்தலம் ஆகும்.
* திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோவில். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் ஆலயம் இது.
ஓம் நம சிவாய

 நன்றி இணையம்

துன்பம் வரும்போது சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:48 PM | Best Blogger Tips
Image may contain: 4 people, selfie and closeup
மனிதர்கள் துன்பம் வரும் நேரத்தில் கலங்காதிருக்க வேண்டும். துன்பமே வராத வாழ்வு என ஒன்றில்லை. துன்பத் தருணங்களில் அமைதியோடு, வந்த துன்பத்தை எதிர்கொண்டால், வாழ்வை எளிதாக வென்றுவிடலாம். இந்த அடிப்படை வாழ்வியல் தத்துவத்தை விளக்கவென்றே பத்துக் குறள்களைப் படைத்திருக்கிறார் வள்ளுவர். (இடுக்கண் அழியாமை - அதிகாரம் 63)
'இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்பதில்!’
துன்பம் வரும்போது சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற துணை சிரிப்பைத் தவிர வேறில்லை.
விவேகானந்தர் வாழ்வில் ஒரு சம்பவம். காசியில் ஒரு குறுகலான சந்து வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென அவரைப் பத்துப் பதினைந்து குரங்குகள் துரத்தத் தொடங்கிவிட்டன. எல்லாம் பெரிய பெரிய குரங்குகள். இப்போது என்ன செய்வது? ஓட்டம்தான் ஒரே வழி. விவேகானந்தர் ஓடலானார். ஆனால், குரங்குகள் அவரை விடாமல் துரத்தத் தொடங்கின. சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்த வயதான துறவி ஒருவர் திரும்பிப் பார்த்தார். நிலைமையைப் புரிந்து கொண்டார். பின் ஆணித்தரமான குரலில் அறிவுறுத்தினார்:
மகனே! ஓடாதே! திரும்பி நில். குரங்குகளை நோக்கி முன்னேறு. என்ன நடக்கிறதென்று பார்!’ விவேகானந்தருக்கு அவர் அறிவுரைப்படி நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர் தம் ஓட்டத்தை நிறுத்தினார். குரங்குகளை நோக்கித் திரும்பினார். குரங்குகள் திகைத்தவாறு அப்படியே நின்றன. விவேகானந்தர் கால்களை உறுதியாக வைத்து மெல்ல குரங்குகளை நோக்கி நடக்கலானார். குரங்குகள் பம்மிப் பதுங்கின. விவேகானந்தர் தொடர்ந்து குரங்குகளை எதிர்கொண்டு அவற்றை நோக்கியே நடக்கலானார். அச்சமடைந்த குரங்குகள் சடாரென்று திரும்பி தாங்கள் வந்த வழியிலேயே ஓடி மறைந்தன.
இந்தச் சம்பவத்தைப் பின்னாளில் நினைவு கூர்ந்த விவேகானந்தர் எழுதுகிறார்:
`
வாழ்வில் வரும் துன்பங்களெல்லாம் நம்மைத் துரத்தும் குரங்குகளே. அவற்றிற்கு அஞ்சி ஓடினால் அவை நம்மைத் துரத்தும். தைரியமாக எதிர்கொண்டால் அவை நம்மிடம் பயந்து நம்மை விட்டு ஓடியே போய்விடும்!’ விவேகானந்தர் தம் வாழ்க்கைச் சம்பவத்திலிருந்து கண்டெடுத்துச் சொல்லும் நீதி, வள்ளுவம் போதிக்கும் அதே நீதிதான். விவேகானந்தர் திருக்குறளைப் படிக்காதிருந்திருக்கலாம். ஆனால், குறள் சொல்லும் கருத்துகளை அவர் தம் வாழ்வில் பின்பற்றியிருக்கிறார்✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

நன்றி 
*பெ.சுகுமார்*