துன்பம் வரும்போது சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:48 | Best Blogger Tips
Image may contain: 4 people, selfie and closeup
மனிதர்கள் துன்பம் வரும் நேரத்தில் கலங்காதிருக்க வேண்டும். துன்பமே வராத வாழ்வு என ஒன்றில்லை. துன்பத் தருணங்களில் அமைதியோடு, வந்த துன்பத்தை எதிர்கொண்டால், வாழ்வை எளிதாக வென்றுவிடலாம். இந்த அடிப்படை வாழ்வியல் தத்துவத்தை விளக்கவென்றே பத்துக் குறள்களைப் படைத்திருக்கிறார் வள்ளுவர். (இடுக்கண் அழியாமை - அதிகாரம் 63)
'இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்பதில்!’
துன்பம் வரும்போது சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற துணை சிரிப்பைத் தவிர வேறில்லை.
விவேகானந்தர் வாழ்வில் ஒரு சம்பவம். காசியில் ஒரு குறுகலான சந்து வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென அவரைப் பத்துப் பதினைந்து குரங்குகள் துரத்தத் தொடங்கிவிட்டன. எல்லாம் பெரிய பெரிய குரங்குகள். இப்போது என்ன செய்வது? ஓட்டம்தான் ஒரே வழி. விவேகானந்தர் ஓடலானார். ஆனால், குரங்குகள் அவரை விடாமல் துரத்தத் தொடங்கின. சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்த வயதான துறவி ஒருவர் திரும்பிப் பார்த்தார். நிலைமையைப் புரிந்து கொண்டார். பின் ஆணித்தரமான குரலில் அறிவுறுத்தினார்:
மகனே! ஓடாதே! திரும்பி நில். குரங்குகளை நோக்கி முன்னேறு. என்ன நடக்கிறதென்று பார்!’ விவேகானந்தருக்கு அவர் அறிவுரைப்படி நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர் தம் ஓட்டத்தை நிறுத்தினார். குரங்குகளை நோக்கித் திரும்பினார். குரங்குகள் திகைத்தவாறு அப்படியே நின்றன. விவேகானந்தர் கால்களை உறுதியாக வைத்து மெல்ல குரங்குகளை நோக்கி நடக்கலானார். குரங்குகள் பம்மிப் பதுங்கின. விவேகானந்தர் தொடர்ந்து குரங்குகளை எதிர்கொண்டு அவற்றை நோக்கியே நடக்கலானார். அச்சமடைந்த குரங்குகள் சடாரென்று திரும்பி தாங்கள் வந்த வழியிலேயே ஓடி மறைந்தன.
இந்தச் சம்பவத்தைப் பின்னாளில் நினைவு கூர்ந்த விவேகானந்தர் எழுதுகிறார்:
`
வாழ்வில் வரும் துன்பங்களெல்லாம் நம்மைத் துரத்தும் குரங்குகளே. அவற்றிற்கு அஞ்சி ஓடினால் அவை நம்மைத் துரத்தும். தைரியமாக எதிர்கொண்டால் அவை நம்மிடம் பயந்து நம்மை விட்டு ஓடியே போய்விடும்!’ விவேகானந்தர் தம் வாழ்க்கைச் சம்பவத்திலிருந்து கண்டெடுத்துச் சொல்லும் நீதி, வள்ளுவம் போதிக்கும் அதே நீதிதான். விவேகானந்தர் திருக்குறளைப் படிக்காதிருந்திருக்கலாம். ஆனால், குறள் சொல்லும் கருத்துகளை அவர் தம் வாழ்வில் பின்பற்றியிருக்கிறார் *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

நன்றி 
*பெ.சுகுமார்*