சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை , அந்தஸ்து என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில் கிடைக்கிறது.
வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுகிடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
இங்கே பணிவு என்று குறிப்பிடுவது தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதாகும். அடிமையாகவோ சுயமரியாதையின்றி இருப்பதோ அல்ல. பிறரது சுய மரியாதையை தாக்காமல் இருப்பது. காக்காய் பிடித்தல் முகஸ்துதி எல்லாம் பணிவு ஆகாது இது ஏமாற்று. மனிதர்கள் காலில் விழுவதும் பணிவாகாது அடிமைதனமிது. சுயமரியாதை அற்ற கீழான செயல். தீமைகளுக்கு பணிவதும் கூடாது.
மற்றவர்களை புண்படுத்தாத, பிறரை மதிக்கும் பிறர் உணர்வை புரிந்து கொண்டு நடக்கும் பணிவு ஒருவரை லிப்டில் உயரே போவது போல் வாழ்வில் உயரச்செய்யும். மற்றவர்கள் படிப்படியாகக் கஸ்டப்பட்டுத் தான் ஏற வேண்டும். ஓசையை யாரும் விரும்ப மாட்டார்கள். மெல்லிய இசை தான் மனதை மயக்கும்.
பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாசம் கிடைக்கிறது. அவர்கள் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது. அதுவே பள்ளியிலும் தொடர்கிறது . ஆசிரியர்கள் அடிப்பதில்லை. சிறப்பாக கவனித்து பாடம் சொல்லிக்கொடுகிறார்கள். பாராட்டுகிறர்கள். அதிக மார்க் வாங்குகிறார்கள். பணிவு நல்ல நட்பை தருகிறது, எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது. பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள் பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது.
மற்றவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தை கூட பணிவுடன் சொல்லும்போது அதற்கு நிச்சயம் அங்கீகாரமோ கவனிப்போ இருக்கும். இனிமையாக பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திருப்பிக் கிடைக்கும். *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
நன்றி 💐 இணையம்