திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும். ஒவ்வொருவரின் கிரக நிலைகளுக்கேற்ப வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பற்றி பல நூல்களில் குறிப்பிட்டு இருப்பதைப் போல பத்து பொருத்தங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய் தந்தையரையோ, உற்றார் உறவினர்களையோ
தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை நமக்கில்லை. ஆனால், நமக்கு அமையக் கூடிய வாழ்க்கைத்
துணையை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை உண்டு. தற்போதுள்ள சூழ்நிலையில் நிறைய காதல்
திருமணங்கள் நடைபெறுகிறது. என்றாலும் அதற்கு கூட இப்பொழுதெல்லாம் பொருத்தம்
பார்த்து தான் திருமணம் செய்கிறர்கள். மன ஒற்றுமை எப்படியிருக்கும். சண்டை
சச்சரவில்லாத வாழ்க்கை அமையுமா? உடலுறவில் இன்பம் நீடிக்குமா? வம்ச விருத்தி
எப்படியிருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் உண்டா, மாங்கல்ய பலம் எப்படி
என்பதையெல்லாம் பறறி தெரிந்து கொள்ள பலவித பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.
மண வாழ்க்கை நீண்ட காலம் சந்தோஷமாகவும் மாங்கல்ய
பலத்துடனும் செல்வம் செல்வாக்கு அனைத்தையும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுமென்றே
அனைவரும் விரும்புகின்றனர். இதில் செவ்வாய் தோஷம் உண்டா, ராகு கேது தோஷம் உண்டா
என்பதைப் பற்றியும் ஆராய்ந்து தான் செய்கின்றனர். இதற்கு பரிகரங்களும் செய்ய
முடியுமா, எந்த நட்சத்திரத்திற்கு எந்தெந்த நட்சத்திரங்கள் பொருந்தும் என்பதற்கான
அனைத்து விளக்கங்களையும் நாம் ஜோதிட ரீதியாக அறியலாம். குறிப்பாக இருவருக்கும்
நடைபெறக் கூடிய திசா புக்திகள் என்னென்ன? தசா சாந்தி உள்ளதா என்பதைப் பற்றியும்
அறியலாம்.
திருமண ஜோடிகளுக்கு ஒரே திசையோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்ய முடியுமா என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். திருமண பொருத்தங்கள் பற்றி பல பழங்கால ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் மிகவும் புகழ் பெற்ற புத்தகமான காலவிதானத்தில் திருமண பொருத்தங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை இனி தெளிவாகப் பார்ப்போம்.
காலவிதானம் என்ற புத்தகத்தில் 10 திருமணப்
பொருத்தங்கள் பற்றி கூறியிருப்பதாவது :
பத்து பொருத்தங்கள் இருவரின் நட்சத்திரத்தை கெண்டு தசா பொருத்தத்தை தீர்மானிககிறோம். தினம், கணம், மகேந்திரம், ஸ்திரி தீர்க்கம் யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜீ, வேதை என்பனவாகும்.
தினப்பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி அதனை 9ல் வகுக்க மீதி தொகை 2, 4, 6, 8, 9 ஆக வந்தால் தினப் பொருத்தமானது உத்தமம். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 1 முதல் 9 வரை வருவது 1வது பரியாயம் 10 முதல் 18 வரை வருவது 2 வது பரியாயம் 19 முதல் 27 வரை வருவது 3வது பரியாயம் 1, 2வது பரியாயத்தில் 3, 5, 7 யும் 3வது பரியாயத்தில் 7 மட்டும் அதாவது 25வது நட்சத்திரத்தை மட்டும் தவிர்ப்பது உத்தமம். 3வது பரியாயத்தில் 3, 5 அதாவது 21, 23 வது நட்சத்திரம் தோஷமில்லை. 27வது நட்சத்திரம் வேறு ராசியாக இருந்தால் நல்லதல்ல. ஒரே ராசியானால் உத்தமம்.
பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 1வது என்றால் ஜென்மம். கலகம், 2வது சம்பத்தை உண்டாக்கும். 3வது விபத்து, 4 ஷேமம், 5. காரியத்தடை, 6. அனுகூலம், 7 வதை வேதனை, 8 சுபம், 9. மிகவும் சுபம். இவைதான் தினப் பொருத்தத்தின் பலன்கள். தினப் பொருத்த ரீதியாக பார்க்கும்போது சில பெண் ந ட்சத்திரத்திற்கும் சில ஆண் நட்சத்திரத்திற்கும் பொருத்தம் சரிவர வருவதில்லை.
கிருத்திகைக்கு ஆயில்யமும், சுவாதிக்கு சித்திரையும், பூராடத்திற்கு அனுஷமும், அவிட்டத்திற்கு பரணியும், சதயத்திற்கு கிருத்திகையும் வந்தால் தவிர்ப்பது உத்தமம். அப்படி வரும் பட்சத்தில் தம்பதிகளுக்கு கண்டம் உண்டாகும். மிருக சீரிஷத்திற்கு பூசமும், அஸ்தத்திற்கு மூலமும் தரித்திரமாகும்.
அஸ்வினிக்கு புனர்பூசம், சுவாதிக்கு உத்திராடமும் வந்தால் பெண் குழந்தை உண்டாகும். வதை தோஷம் குறைவு. உத்திராடத்திற்கு ரேவதியும் மூலத்திற்கு பூரட்டாதியும், பூராடத்திற்கு உத்திரட்டாதியும் பரணிக்கு பூசமும் ஆக வந்தால் தோஷம் இல்லை. 7வது நட்சத்திரம் எனறால் திருமணம் செய்யலாம்.
மகத்திற்கு விசாகம் என்றால் புத்திர பாக்கியம் இல்லை. விசாகத்திற்கு திருவோணம் என்றால் சக்களத்தி வருவாள். திருவோணத்திற்கு அஸ்வினி என்றால் பிரிவு. உத்திரத்திற்கு மிருக சீரிஷம் என்றால் பிரச்சனை ஏற்படும்.
ஏக நட்சத்திரம்
தினப்பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரும் ஒரே நட்சத்திரமாகி, ரோகிணி, மகம், திருவாதிரை, விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி என்றால் ஏக நட்சத்திர ரீதியாக பொருத்தம் உத்தமம்.
பூரம், உத்திரம், புனர்பூசம், பூசம், சித்திரை அஸ்வினி, கிருத்திகை, உத்திராடம், அனுஷமாக இருந்தால் மத்திமம். மன பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.
ஆண்,பெண் இருவரும் பரணி, சுவாதி கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம், சதயம் பூரட்டாதியாக வந்தால் திருமணம் செய்வது நல்லதல்ல.
ஏக நட்சத்திரமாக வரும் பட்சத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரண்டு ராசியில் வரும்போது ஆண் நட்சத்திரம் பாதம் முன்னும், பெண் நட்சத்திர பாதம் பின்பும் சுபம். பெண் நட்சத்திரப் பாதம் முன்னும் ஆண் நட்சத்திர பாதம் பின்னும் வந்தால் தவிர்ப்பது நல்லது. ஆண் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்க்கும்போது ஒரே ராசியில் பரணியும் கிருத்திகையும், பூசமும் ஆயில்யமும் அவிட்டமும் சதயமுமாக வந்து ஆண் நட்சத்திரம் முன் நட்சத்திரமாக வந்தாலும் தவிர்ப்பது நல்லது.
பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரில் ஒருவரின் நட்சத்திரம் மகம், மிருக சீரிஷம், சுவாதி மற்றும் அனுஷமாக இருந்தால் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என ஒரு விதி உண்டு.
அஸ்வினி, கிருத்திகை, மகம், ரோகிணி, அஸ்தம் சுவாதி, பூராடம், சதயம் ஆகிய 8 நட்சத்திரமும் ஏக நட்சத்திரமாக வந்து பெண் நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.
தின பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் வளமான வாழ்க்கை பற்றி அறியலாம்.