மலச்சிக்கல் பிரச்சனையா? கவலைய விடுங்க !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips
 


இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும் உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை பாதிக்கும், பின் உடலில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறாமல், உடலிலேயே தங்கி எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமலிருக்குமாறு செய்யும்.

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்றால் அது நார்ச்சத்துள்ள உணவுகள் தான். இந்த சத்துள்ள உணவுகள் குடலின் இயக்கத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் கழிவுகளை சரியாக வெளியேற்றிவிடும். ஆகவே இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம். இப்போது அந்த மலச்சிக்கலை தடுக்கும் நார்ச்சத்துள்ள உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காய்
மலச்சிக்கலானது பொதுவாக வயிறு உப்புசத்துடன் இருந்தால் ஏற்படுவது. இதற்கு பழங்களில் ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட்டால், அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

பாப்கார்ன்
பாப்கார்னில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணம். ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, மற்ற பிட்சா, சாண்ட்விச் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, பாப்கார்னை சாப்பிட்டால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

பீன்ஸ்
காய்கறிகளில் கிடைக்கும் நார்ச்சத்துக்களை விட, பீன்ஸில் இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து உள்ளது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், குடலியக்கம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாது தடுக்கலாம்.


உலர் பழங்கள்
பழங்களை விட உலர் பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. அதிலும் உலர்ந்த திராட்சை, பேரிச்சை, ஆப்ரிக்காட் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, சோர்பிட்டால் என்னும் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. இது பொருளானது உணவுப் பொருட்கள் செரிமானமடையும் போது உண்டாகும் திரவத்தை, குடலின் வழியாக வெளியேறும் மலத்தை லேசாக்கி, எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

தானியங்கள்
அனைவருக்குமே தானியங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன என்பது தெரியும். ஆகவே இந்த பொருட்களை உணவில் சேர்ப்பது நல்லது. அதிலும் கோதுமையால் ஆன சப்பாத்தியை சாப்பிட்டால், மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்கும்.

ப்ராக்கோலி
நார்ச்சத்தின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ப்ராக்கோலி எனலாம். ஏனெனில் இதில் அந்த அளவில் நார்ச்சத்தானது நிறைந்துள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க முடியும்.

பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அரைக் கப் ஸ்ட்ராபெர்ரியில் 2 கிராமும், ப்ளாக்பெர்ரியில் 3.8 கிராமும், ராஸ்ப்பெர்ரியில் 4 கிராம் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் கலோரிகளும் குறைவாக உள்ளன. ஆகவே இவற்றை சாப்பிட்டால், குடலியக்கம் நன்கு இயங்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

நட்ஸ்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் நட்ஸ் வகைகளும் ஒன்று. ஆகவே நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, இதனை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், வயிற்றில் உண்டாகும் உப்புசம் நீங்கி, மலச்சிக்கலை தடுக்கலாம்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 3.8 கிராம் நார்ச்சத்தை பெறலாம். அதிலும் இனிப்பு உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 4.8 கிராம் நார்ச்சத்தானது உடலுக்கு கிடைக்கும். ஆகவே உருளைக்கிழங்கை சாப்பிடும் போது தோலை நீக்காமல், வேக வைத்து, மசித்து, ஒரு பொரியல் போன்று செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

நன்றி பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்

பைரவாஷ்டமி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:34 PM | Best Blogger Tips
ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.

அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, "காளி' என பெயர் சூட்டினாள்.

காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, "பைரவர்' என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, "காளபைரவர்' எனப்பட்டு தற்போது, "காலபைரவர்' ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர்.

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, "வேதஞாளி' என்ற பெயர் இருக்கிறது.

பைரவரை மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் உள்ளது. இங்குள்ள பைரவர் முன், ஒரு யந்திரம் உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு பைரவாஷ்டமி விழா சிறப்பாக நடக்கும். தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில், வாயுமேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கி.மீ., சென்றால், தகட்டூரை அடையலாம்.

கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில், கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவ வாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக நிகழ்த்துவர். அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இப்போதே பதிவு செய்தால், சில ஆண்டுகளுக்குப் பின் தானம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக்கோபுரம் அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார்.

பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம். கஷ்டங்கள் தீவிரமாகும் போது, காவல் தெய்வமான பைரவரை வணங்குங்கள். அவை காற்றில் பறக்கும் பஞ்சாகி விடும்.