கொள்ளு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:31 AM | Best Blogger Tips
Photo

கொள்ளு என்ற சத்தான சிறுதானியத்தை குதிரைக்கான உணவாக‌ மட்டுமே ஆக்கிவிட்டோம். உடலை வளர்க்கும் முக்கிய அமினோ அமிலங்களை இயல்பாக உள்ளடக்கிய கொள்ளு போன்ற தானியங்கள், நமக்கு உணவாவது மட்டுமின்றி, நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கும்.


என்ன சத்து?


லோ கிளைசீமிக் தன்மையும் (low glycemic index), நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும், அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய natural polyphenols உள்ளது.



கொள்ளு கஞ்சி

கொள்ளு மிகவும் சத்தானதும், மருத்துவக்குணம் கொண்டதாகும். வாரம் ஒருமுறை கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கொள்ளு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக் கூடியது. எல்லா வயதினரும் இக்கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:

கொள்ளு, அரிசி - 200 கிராம், சின்னவெங்காயம் -100 கிராம், துருவிய தேங்காய் - ஒரு கரண்டி, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் - ஒரு ஸ்பூன், சீரகம் - ஒரு ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, கருவேப்பிலை தேவைக்கேற்ப‌


செய்முறை:

கொள்ளை லேசாக வறுக்கவும், அதை மிக்சியில் ஒரு சுற்று உடைத்து எடுக்கவும். பின்னர் அதைச் சுத்தம் செய்து அரிசியுடன் சேர்த்து கழுவிவிடவும். குக்கரில் போட்டு ஐந்து மடங்கு நீர் விட்டு அத்துடன், சின்ன வெங்காயத்தை உரித்து சின்ன துண்டுகளாக நறுக்கிப் போட்டு துருவிய தேங்காயை சேர்த்து, தேவையான அளவு, உப்புச் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.


வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு பொறித்ததும் பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியவுடன் கொள்ளுக் கஞ்சியில் சேர்த்து நன்கு கலக்கி காலை டிபனாக சாப்பிட சுவையாக இருக்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு சாப்பிடுவது நல்லது.


கொள்ளு தொக்கு

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 4, பச்சைமிளகாய் - 2, சமையல் எண்ணெய்- ஒரு ஸ்பூன், கடுகு + உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன், கருவேப்பிலை & ஒரு இணுக்கு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கொள்ளை முதல் நாள் காலையில் நீரில் ஊறவைத்து, அன்று மாலை கழுவி சுத்தம் செய்து நீர் இல்லாமல் வடித்து ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால் மறுநாள் காலையில் முளைவிட்டிருக்கும் அந்தக் கொள்ளை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசித்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு + உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலைப் போட்டு நன்கு வதக்கி மசித்த தொக்குவில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி சாதத்தில் போட்டு, சிறிதளவு நல்ல எண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கொள்ளு துவையல்

கொள்ளு - 100 கிராம், மிளகாய் வத்தல் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டு- 2 பல், தேவையான அளவு உப்பு.

கொள்ளை நன்றாக வறுத்து அத்துடன் மிளகாய் வத்தல், புளி, பூண்டு, உப்புச் சேர்த்து நன்கு அரைத்து துவைலாக சாப்பிடலாம்.


யார் தவிர்க்க வேண்டும்?


கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது


நன்றி : விகடன்