இந்து கோவில் தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:53 | Best Blogger Tips

பக்தர்கள் பருகாத தீர்த்தம்

பொதுவாக பெருமாள் கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் தீர்த்தத்தை வாங்கி தலையில் தெளித்துக் கொண்டு மீதியை பருகுவது பக்தர்கள் வழக்கம். ஆனால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே, வடக்கு மாடவீதியிலுள்ள குண்டுக்கண்ணன் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி, ஆலய வாசலில் விட்டு விடுகின்றனர். அதாவது, கிரிவலம் வந்த புண்ணிய பலனை கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் செய்கின்றனர். அதனால் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

--------------------------------------

குழந்தை வடிவில் காலபைரவர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் ரோட்டில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் காலபைரவர் தனி அழகோடு காட்சி தருகிறார். இவருக்கு இங்கு நாய் வாகனம் இல்லை. இவர் குழந்தை வடிவமாக கருதப்படுவதே அதற்குக் காரணம் என்கிறார்கள். மேலும் இந்தக் கோயிலில் பிச்சாடனர், கங்காதர நாதர் என்ற திருநாமத்தோடு சூலமும், உடுக்கையும் ஏந்தி அருள் பாலிப்பதும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது.

------------------------

லிங்க சரபேஸ்வரர்

காஞ்சிபுரம் அருகில் உள்ளது தாமல். இங்குள்ள சிவாலயத்தில் உள்ள லிங்க ரூப இறைவன் சரபேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். சரபேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

-------------------------


வன்னிமரமும், உறைகிணறுமே சாட்சி!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு தெற்கில் 3வது கிலோ மீட்டரில் உள்ளது திருமணஞ்சேரி. ஈசன் சுகந்தபரிமளேஸ்வரராகவும் இறைவி பெரிய நாயகியாகவும் கோயில் கொண்டுள்ள தலம்.

அஞ்ஞான விமோசன நதியின் தென்கரையில் ஆலயம் அமைந்துள்ளது. நறுமணம் நிரம்பியவர் என்றும், திருமணநாதர் என்றும் இந்த சுயம்பு லிங்க ஈசனுக்கு வேறு பெயர்கள் உண்டு. ஆலயத்தின் உள்ளேயே தனி சந்நதியில் அம்பாளும், விமானம் அமைந்த சந்நதியில் சுயம்பு நந்தி தேவரும் உள்ளனர்.

இங்கிருந்த வன்னி மரமும், உறைகிணறும் புதுமண தம்பதியருக்காக மதுரை சென்று சாட்சி சொன்னதாக புராணம். இத்தல அம்பிகை, திருமணத் தடையை விலக்கி விரைவில் திருமணம் நடத்தி வைக்கிறாள்; மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்கிறாள்.

நீண்ட நாள் நோயுற்றவர்கள், மனநலம் பாதித்தவர்கள் இக்கோயில் திருக்குளத்தில் 48 நாட்கள் நீராடி ஈசனையும் அம்பிகையையும் வழி பட, விரைவில் குணமடைகிறார்கள்.

-----------------------

லிங்க துர்க்கை

மங்களூரிலிருந்து 25மைல் தூரத்தில் கடில் நகரில் துர்க்காதேவி லிங்க வடிவில் காட்சி தருகிறாள். அபிஷேகத்தின்போது மட்டுமே லிங்கரூபிணியாகக் காட்சி தரும் இந்த லிங்க அன்னை, ஏனைய நேரங்களில் துர்க்கை கவசத்துடன் காட்சியளிப்பார்.

பண்டாசுரனை துர்க்கை வதம் செய்த தலமிது.

----------------------

இளநீர் கிணறு

திருநெல்வேலி- சேரன்மகாதேவி அருகில் சுற்றிலும் மலைகள் சூழ, அமைந்துள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் மூன்றடி விட்டமுள்ள ஒரு கிணறு உள்ளது. ‘பாலூற்று’ என்று இதற்கு பெயர். மழை அதிகம் பெய்து பூமி குளிர்ந்தால் இந்தக் கிணற்றில் தண்ணீர் நிரம்பி வழியும். இந்த நீர், இளநீரின் நிறமும் சுவையும் கொண்டதாக இருக்கிறது.

-------------------

அது என்ன 7, 12, 9?

திருவீழிமிழலை கோயிலின் மகாமண்டபம் வித்தியாசமான அமைப்பு கொண்டது. வார நாட்களை, கிழக்குபுறத்திலிருக்கும் 7 படிகள் குறிக்கின்றன. அதேபோல தென்புறத்திலுள்ள பன்னிரண்டு படிகள் மாதங்களைக் குறிக்கின்றன. வடபுறத்து ஒன்பது படிகளும் நவகிரகங்களைக் குறிக்கின்றன.

=-------------------
Via இந்து மத வரலாறு - Religious history of hinduism