
☕ உலக மக்களின் ஃபேவரைட் பானமாக காபி ஆனது எப்படி? – சுவையான வரலாறு
காபி நவீன கால பானமாக கருதபட்டாலும், அதன் வரலாறு தொன்மையானது.
காபி எப்படி தோன்றியது என்பது குறித்து பொதுவாக சொல்லபடும் கதையானது எத்தியோப்பியாவில் துவங்குகிறது.
கி.பி. 850 வாக்கில், எத்தியோப்பியாவில் 'கால்டி' என்ற ஆடு மேய்க்கும் சிறுவன், தனது ஆடுகள் ஒரு குறிப்பிட்ட செடியின் சிவப்பு நிறப் பழங்களைச் சாப்பிட்ட பிறகு மிகவும் சுறுசுறுப்பாவதைக் கவனித்தான். அவனும் அந்த பழங்களை உண்டபிறகு சுறுசுறுப்பானான்
தொடக்க காலத்தில் எத்தியோப்பியாவின் காடுகளில் காபி செடிகள் தானாகவே வளர்ந்தன. அதன் பழங்கள் பழுத்தவுடன் நல்ல சிவப்பு நிறத்தில், செர்ரி பழங்களைப் போலக் காட்சியளிக்கும்.
அதன்பின் கால்டி மற்றும் அந்தப் பகுதி மக்கள் இந்தச் சிவப்பு நிறப் பழங்களை மரத்தில் இருந்து நேரடியாகப் பறித்து, அதன் மேல் தோலையும் உள்ளே இருக்கும் இனிப்பான சதைப்பகுதியையும் மென்று சாப்பிட்டனர்.
இந்தப் பழத்தின் சதைப்பகுதியில் இயற்கையாகவே கஃபைன் கலந்திருந்ததால், அதைச் சாப்பிட்ட உடனே அவர்களுக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியும், உடலாற்றலும் கிடைத்தது. ஆனால், உள்ளே இருந்த கடினமான பச்சை விதைகளை (காபி கொட்டைகளை) அவர்களால் மெல்ல முடியாமல் துப்பிவிட்டனர்.
எத்தியோப்பியாவின் பழங்குடியின மக்களான 'ஒரோமோ' பிரிவினர், காபி பழங்களை நீண்ட நாட்களுக்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்த ஒரு தனித்துவமான முறையைக் கண்டறிந்தனர். அவர்கள் பழுத்த காபி பழங்களைச் சேகரித்து, நன்றாக நசுக்கினர். பின்னர், விலங்குகளின் கொழுப்புடன் இந்த நசுக்கிய காபி பழங்களை ஒன்றாகக் கலந்தனர்.இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
விலங்குக் கொழுப்பில் இருந்து உடலுக்குத் தேவையான கலோரிகளும், காபி பழத்தில் இருந்து சோர்வை நீக்கும் கஃபைனும் கிடைத்ததால், இது அவர்களுக்கு ஒரு சிறந்த சத்து உருண்டை போலச் செயல்பட்டது.
அதேபோல் காபி பழங்களை நசுக்கி, தண்ணீரில் போட்டு சில நாட்கள் நொதிக்க வைத்தனர். இதன் மூலம் காபி பழச்சாறு ஒருவித போதையூட்டும் ஒயின் போல மாறியது.
இப்படி காப்பியை வைத்து காமடி செய்துகொண்டிருந்தார்களே ஒழிய நாம் இன்று அறியும் காபி பானமாக எப்போது உருவெடுத்தது என்பது கேள்விக்குரியது. காபி கிபி 850ல் கண்டுபிடிக்கபட்டு, கிபி 1600ம் ஆண்டில் தான் உலகெங்கும் பரவுகிறது. இடைப்பட்ட 800 ஆண்டுகளில் யாராவது தற்செயலாக காபிகொட்டையை வறுத்து இருக்கலாம். அப்போது வந்த வாசனையில் மதிமயங்கி அதை சுடுதண்ணீரில் போட்டு குடித்து இருக்கலாம்
இது எத்தியோப்பொயாவில் நடந்ததா, ஏமனில் நடந்ததா என தெரியவில்லை. ஆனால் காபி விரைவில் ஏமெனுக்கு செல்கிறது. அங்கிருந்த சூஃபி துறவிகள் இரவு முழுக்க காப்பியை குடித்தபடி, கண்விழித்து பிரார்த்தனைகள் செய்து வந்தார்கள். தூக்கம் வராமல் தவிர்க்கும் புத்துணர்ச்சி பானமாக காபி கருதபட்டது
அடுத்த 800 ஆண்டுகளில் யேமென் நாட்டின் ஏகபோக வர்த்தக பானமாக காப்பி இருந்தது. மெக்காவுக்கு வரும் பயணிகள் காபியை குடிக்கமுடியும், வறுத்த காபிகொட்டைகளை வாங்கிக்கொண்டு தாயகம் போகமுடியும். ஆனால் பச்சை காபி கொட்டைகள், விதைகளை விற்க யேமெனில் தடை இருந்ததால் காபி உலகெங்கும் பரவலாகவில்லை
காபி கொட்டைகளை வாங்கவேண்டுமெனில் யேமெனில் உள்ள மோக்கா (Mocha) துறைமுகத்தில் இருந்து தான் வாங்கவேண்டும். இன்று மோக்கா என்பது ஒரு வகை காப்பியின் பெயராக அறியபட காரணம் இதுதான்
இந்த சூழலில் கிழக்கிற்கும், மேற்கிக்கும் காபி பரவ இரு கடத்தல் சம்பவங்கள் உதவின. ஏமெனில் இருந்து காபிகொட்டைகளை டச்சுகாரர்கள் ரகசியமாக கடத்தி சென்று சாவகத்தீவில் (ஜாவா- இந்தோனேசியா) பயிரிடுகிறார்கள். ஐரோப்பாவில் காபிக்கான வணிகம் முழுக்க அவர்கள் கட்டுபாட்டில் வருகிறது
கி.பி. 1670ல் இந்தியாவின் சிக்மகளூரைச் சேர்ந்த பாபா புதன் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு காபியை சுவைக்கிறார். அதன்பின் யெமென் சென்று மொக்கா துறைமுகக் காவலாளிகளின் கண்களில் மண்ணைத் தூவி, வேகவைக்கப்படாத 7 உயிருள்ள பச்சை காபி கொட்டைகளைத் தனது தாடியிலும் ஆடையிலும் மறைத்துக் கடத்தி வருகிறார்.
அவர் சிக்மகளூரில் உள்ள சந்திரகிரி மலைப்பகுதியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வெளியே இந்த ஏழு கொட்டைகளையும் நட்டார். அந்த மலைப்பகுதியின் குளிர்ச்சியான காலநிலையும், நிழலான சூழலும் காபிச் செடிகள் செழித்து வளர ஏதுவாக இருந்தன.
காலப்போக்கில், உள்ளூர் மக்கள் இந்தச் செடிகளிலிருந்து விதைகளைப் பெற்றுத் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கத் தொடங்கினர். இந்தியர்களுக்கு வரலாற்றில் முதன்முறையாக காபி கிடைக்கிறது. இதனால், இன்று அந்த மலைத்தொடர் 'பாபா புதன் கிரி' என்று அழைக்கப்படுகிறது.
இப்படியாக காபி உலகெங்கும் பரவி, இன்று உலக மக்களின் ஃபேவரைட் பானமாக ஆனது
பதிவு: நியாண்டர் செல்வன்
