தாய்மை அடைதல் !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:49 PM | Best Blogger Tips


தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.

ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் "மலடி", இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று.

இனி தாய்மை அடைதல் குறித்த சித்தர்களின் பார்வை மற்றும் தீர்வுகள் எவ்வாறு இருக்கிறது என பார்ப்போம்.

நிஜத்தில் மலட்டுத்தன்மை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லும் அகத்தியர். மேலும் பெண்களிடம் எத்தகைய குறைபாடுகள் இருந்தால் தாய்மை அடைவதில் தடையாகும் என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார்.

"
இசைந்ததோர் பெண்மலடு எங்கு மில்லை
எதுனால் மலபான சேதி கேளு கேளு
அசைந்திருக்கும் பேயினால் பூதத் தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாய்வி னாலும்
பிசைந்து கெர்ப்பப் பூச்சியினால் கிரகத்தாலும்
பிணி நோவு மத்தத்தால் வாத சூலையாலுந்
துசங்கட்டிக் கல்வியினால் பூலவா துங்கித்
துலங்காமல் கெர்ப்பமில்லைசொல்லக் கேளே"

-
அகத்தியர் -

இந்த உலகத்தில் பெண்களில் மலடு என்பதே இல்லை., பேய், பூதம், அடிவயிற்றில் வலியுடன் கூடிய வாய்வு, கெர்ப்பப்பூச்சி, கிரக சஞ்சார பலன்கள், வேறு சில நோய்கள், வாதசூலை போன்றவகளால் கர்பம் தரிப்பதில் சிரமம் உண்டாகும் என்றும் அதை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் கூறுகிறார்.

நாககள்ளி வேரை நன்கு அரைத்து புனைக்காயளவு எடுத்து, அத்துடன் பசுவெண்ணெய் பாக்களவு சேர்த்து மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அந்த மூன்று நாளும் புளி, புகை, உப்பு ஆகியவற்றைத் தவிர்த்து பசும்பால் கலந்த சோறு சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

வேப்பம் பூ, சீந்தில்தண்டு, கோரைக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பண எடை வீதம் எடுத்து, அதனை சேர்த்து இடித்து அத்துடன் ஒரு உழக்கு நெய் சேர்த்து காய்ச்சி காலை மாலை இரண்டு வேளையும், மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்பட வில்லை.

பெருங்காயம், இந்துப்பு, புளியமரத்தின் பட்டை ஆகியவை சம எடை எடுத்து கற்றாழைச் சாற்றில் நன்கு அரைத்து புனைக்காயளவு உருட்டி, அதைப் பெண்கள் மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அத்துடன் வாய்வு, கெர்ப்பப்பூச்சி, தோடம், விடக்கிரம் ஆகியவையும் தீரும் என்கிறார். இதற்க்கும் எந்த பத்தியமும் சொல்லப்பட வில்லை.

இவை தவிர கிரக சாரத்தின் பலன்கள் காரணமாக கர்ப்பம் தரிக்காது போனால் அதற்கான பரிகாரங்களையும் கூறியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.

அடுத்த பதிவில், தாய்மை அடைந்த பெண்களுக்காக சித்தர்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.