பிரதோஷ விரத மகிமை
பிரதோஷ காலம், சூர்யஷ்த்தமனத்தோடு ஆரம்பிக்கிறது. பிரதோஷ காலம், பரமேஸ்வரனை தியானம் செய்வதற்குத் தகுந்த காலமாகும். ஈஸ்வரன், உயிர்களை தன்வசப்படுத்திக் கொள்ளும் காலம், இது மிகவும் விசேஷமாகும்.
இந்த காலத்தில் உலகம் ஒடுங்குகிறது, மனசும் ஈஸ்வரனிடம் ஒடுங்க அதுவே நல்லநேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம். சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம். வில்லைவிட்டு அம்பு சென்றுவிட்டாலும், மந்திர உச்சாடன பலத்தால் அந்த அம்பை உபச்ம்ஹாரம் செய்வது போல், ஈஸ்வரன் தான் விட்ட சக்தியை எல்லாம் தன் வசப்படுத்திக் கொகிறான்.
பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால் வேறொரு உயிரும் இல்லாத நேரமாக அது அமையும். உதயத்தில் சிருஷ்டியும், பிரதோஷகாலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. ராத்திரி ஆரம்பத்தைத்தான் பிரதோஷகாலம் என்கிறோம். அதனால் தான் இரவு நித்யப்ரலய காலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவொருநாளும் நித்ய சிருஷ்டியும் நித்ய பிரளயமும் நடக்கின்றன.
அந்தக் காலம் தான், சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்கு தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்ய பிரளய நேரத்தில் நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம், அதில் லயித்து விடுகிறது. அப்போது சஞ்சாரம் செய்யும் பூதப்பிசாசுகள் கூட அந்த நர்த்தனத்தில் லயித்து, யாருக்கும் உபத்திரவத்தைக் கொடுக்கமாட்டா. அது கண்கட்டு வித்தை போல் நடக்கிறது. கூத்தாடி யாருடைய கண்களையும் கட்டுவதில்லை. ஆனால் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நம் மனசையும் கண்களையும் வேறொன்றில் ஆகர்ஷித்து விட்டு, தான் செய்வதைச் செய்துவிடுகிறான்.
உஷாக்காலத்தில் ஹரி ஸ்மரனையும், சாயங்காலத்தில் சிவநாம ஸ்மரனையும் உகந்தாவை. நடராஜ மூர்த்தியின் நாமாவை உச்சாடனம் செய்வதற்கு பிரதோஷ் வேலைதான் சிறந்தது.
இப்படி சிவனை வழிபடுவதற்குத்தான் கோவில்களைக் கட்டினார்கள். சிவ பஜனை செய்வதற்கு எல்லோருக்கும் அவரவர் வீட்டில் வசதி இருக்காது. அதற்காகத்தான் பெரும் சிவன் கோயில்களைக் கட்டினார்கள். பிரதோஷ வேளைகளில், பரமேஷ்வரன் உலக சக்தி முழுவதையும் தன்வசம் ஒடுக்கிக் கொண்டு, நர்த்தனம் செய்யும் வேளையில், நாம் ஈஸ்வரனையே வழிபட்டுக் கொண்டு இருக்கவேண்டும்.
சாண்டில்ய முனிவர் ஒருமுறை பிரதோஷம் பற்றி கூறுகையில், பிரதோஷ வேலையில் சிவபெருமானைப் பூஜிப்பதற்கு முன் நந்தி தேவரைப் பூஜிப்பதே மிகவும் உத்தமமாகும். இவ்வாறு நந்திதேவரை முதலில் பூஜை செய்வதற்கான காரணகாரியங்களை சிவபெருமான், உமா மகேஸ்வரியிடம் கூறியதை இங்கு காண்போம்.
ஒருமுறை பூவுலகில் மக்களிடையே ஏற்ப்பட்ட இறைபக்தியின்மையும், அதனால் மக்களிடையே அறியாமை, அநீதி, துஷ்ட செயல்கள் போன்றவை கூடிகொண்டிருப்பதை நாரத முனிவர் சிவபிரானிடம் கூறியதற்கு, அவரும் தனக்கு நிகரான சக்தி கொண்ட இரண்டாம் சிவனாம் நந்திதேவரை, பூவுலகிற்கு அனுப்பி யாம் அதை சரி செய்வதாகக் கூறினார். இதைக் கேட்ட பார்வதி தேவி. நந்திதேவர் எந்த வகையில் உங்களுக்கு நிகரானர்வர் என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு பரவேச்வரன்,
"தேவி! நந்திதேவன் தனது தூய்மையான பக்தியால், தவத்தால் எனக்கு நிகரானவன், உண்மையைச் சொன்னால் ....நானே நந்திதேவன், அனாதியே தோன்றியவன். தர்ம வடிவானவன், நான்மறைகளையும் தன் நான்கு பாதங்களாக அடைந்தவன். எங்கும் நிறைந்துள்ள எனக்கே, இந்த நந்திதேவன் வாகனமாகி என்னை எக்காலமும் சுமப்பதால் எனக்கு ஈடானவன். வேதங்கள் அனைத்தும் புகழ்ந்தேற்றும் உன்னதமானவன். எனவே இந்த நந்திதேவரை துதிப்பவர்க்கு, பக்தி, செல்வமும்,காரியசித்தியும்,
எம்பெருமான் கூறியதைக் கேட்டு பரமேஸ்வரி, மனம் நெகிழ்ந்துருகி, நீங்கள் கூறுவது உண்மைதான், ஒழுக்கம், உண்மை, நியாயம், ஞானம், மோட்சம், உறுதியான பக்தி, சிவநேசம் ஆகிய அனைத்தும் ஒருங்கினந்தவரும், ஈரேழு உலகங்களிலும் எங்கும் பரவியிருப்பவருமான தங்களையே சுமக்கின்ற வலிமையைப் பெற்றவருமாகிய, அனைத்து சிறப்புகளும் பெற்றவரான நந்தி தேவரைத் தங்களுக்கு ஈடானவரென சொல்வது சாலப் பொருந்தும் என்று கூறினார்.
எனவே, இத்தகைய மேன்மைகளுக்கும் பெருமைகளுக்கும் உரியவரான நந்திதேவரை இரண்டாம் சிவன் என்ற முழுநம்பிக்கையுடன், புனிதமான பிரதோஷ வேலையில் வழிபடுவதால் அளவிட முடியாத அளவு புண்ணியத்தையும் நன்மையையும் நாமும் நம் அடுத்த தலைமுறையும் பெற்று சிறந்து விளங்கலாம்.
பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேஸ்வரரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் திருநடனம் புரிவதாக ஐதீகம். ஒவ்வொரு நாளும் மாலை நான்கரை மணி முதல் ஆறு மணி வரை உள்ள காலம் பிரதோஷ நேரமாகும். இது `தினப் பிரதோஷம்' எனப்படும். சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை.
அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் அதற்கு அவ்வளவு மகிமை உண்டு. பிரதோஷ நேரத்தில் நாம் எந்த அபிஷேகப் பொருளைக்கொண்டு நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன்கள் உண்டு. அவை...
பால் - நோய் தீரும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும்
தேன் - இனிய சரீரம் கிட்டும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
நெய் - முக்தி பேறு கிட்டும்
இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
எண்ணெய் - சுகவாழ்வு கிட்டும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
நீங்களும் மேற்கண்ட பலன்களை பெற வேண்டும் என்றால், அந்த பொருட்களை பிரதோஷ பூஜைக்காக இயன்ற அளவு வாங்கிக்கொடுப்பது நல்லது. இன்று பிரதோஷ காலம் வரை .... சிவபெருமானை நினைத்து விரதம் மற்றும் மௌன விரதம் இருந்து ....சிந்தையில் சிவனையே நினைத்து சித்தத்தை அவன்பால் செலுத்தி விரதம் இருங்கள்..... நீண்ட மன அமைதியையும் ...அன்பையும் ....ஆரோக்கியத்தையும் பெறுங்கள்.....
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே !
பட்டினதடியார் சொல்லுவதை கேட்டு நடப்பவர் பாக்கியவான்கள்....
-நமச்சிவாய தில்லை அருள்