பெண்ணைப் பெற்றவர் எவ்வளவு ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும்
சென்ற
முறை ஜெ., ஆட்சி செய்தபோது, மளமளவென வளர்ந்தார் ஒரு தொழில் அதிபர்.
நொடிந்து போன, நொடித்துப் போகும் நிலையில் இருந்த தொழில்கள் —
அது, செங்கல் சூளையாக இருந்தாலும் சரி... வாங்கிப் போட்டு வளர்ந்தார்.
வளர்ந்த வேகத்திலேயே வீழ்ச்சியும் கண்டார். வழக்குகள் அவரைத் துரத்த,
போலீஸ் அவரைத் தேட... இப்போது எங்கோ தலைமறைவாக உள்ளார். அப்பேர்பட்டவரிடம், "லயசன் ஆபிசர்' ஆக செயல்பட்ட அன்பரின் அறிமுகம் கடந்த ஆண்டு கிடைத்தது.
தொழிலதிபரின் காசை தண்ணீராகச் செலவு செய்து, இந்தியா முழுவதும், அரசியல்வாதி, அரசுத்துறை அதிகாரி, போலீஸ் என பெரிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட அன்பர் அவர்.
தம் தொடர்புகள் மூலம் பல நல்ல- கெட்ட (நமக்கு கெட்ட–அவர் கூற்றுப்படி நியாயமான!) செயல்களை இன்றும் பலருக்குச் செய்து கொடுக்கிறார்.
தமக்கு என சில கொள்கைகள் வைத்திருப்பதால், சில செயல்களுக்கு போலீஸ், கோர்ட்டு என்று போகாதவர்; தீர்ப்பும் கொடுத்து விடுவார்.
கடந்த வாரத்தில் ஒரு நாள் அவரை சந்திக்க நேர்ந்தது!
"நேத்து முக்கியமான மேட்டர் ஒன்றை... (ஒரு பெரிய குடும்பத்தின் பெயர்!) முடித்துக் கொடுத்தேன். அவர்கள் குடும்ப மானமே கப்பல் ஏறி இருக்க வேண்டியது. என் தலையீட்டால் விவகாரம் சுலபமாய் முடிந்தது!' என்றார்.
"என்ன விவகாரம் ஜீ... சொல்லுங்களேன்!' என்றேன்.
"அந்தக் குடும்பத்து பொண்ணு ஒண்ணு ஒன்பதாம் வகுப்பு படிக்குது... ரொம்ப செல்லம்... சென்னையிலேயே பிரபலமான ஸ்கூலுல படிக்குது. ஸ்கூல் போக, வர அந்தப் பொண்ணுக்கு தனிக் கார்... தனி டிரைவர். ஸ்கூல் நேரம் போக மற்ற நேரங்களில் நடிகைகள் போல மேக்-அப்.
"ஹை–ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷனுடன் கம்ப்யூட்டர்... அந்தப் பெண்ணின் பெட் ரூமில் தனி போன் கனெக்ஷன். மகாராணி போல செல்லம் கொடுத்துள்ளனர் பெற்றோர்; கண்டிப்பே கிடையாது!
"இன்டர்நெட் மூலம் இந்தப் பெண்ணுக்கு வட மாநில ஆசாமி ஒருவன் தோழனாகி உள்ளான். தனக்கு 25 வயது என்று கூறியுள்ளான். இவளுடன் தினமும் இன்டர்நெட்டில் பேசிப் பேசி தன்னை காதலிக்கச் செய்து விட்டான்.
"தினமும் செக்ஸ் சம்பந்தமாகவும் இன்டர்நெட்டில் பேசியுள்ளனர். இந்தப் பெண், தன் உடல் அழகு, அளவுகள்... தன் வயதுக்கு மீறிய வளர்ச்சி... தான் பயன்படுத்தும் உள்ளாடைகள் என்று துவங்கி, அத்தனையையும் பேசியுள்ளாள்.
"செக்ஸ் தொடர்பான இவளின் சந்தேகங்களை அவன் தீர்த்து வைத்துள்ளான். அந்தக் கயவன் அத்தோடு நில்லாமல், இருவரின் பேச்சுக்களையும் (சேட்) பிரின்ட்- அவுட் எடுத்து வைத்துள்ளான். "சமாச்சாரம் இப்படி இருக்க, சென்னை வந்து ஓட்டலில் ரூம் போட்டு தங்கிய அந்த ஆசாமி, மொபைல் போனில் இவளை அழைத்து, தன் ஓட்டல் ரூமுக்கு வரச் சொல்லி இருக்கிறான். "இந்த இரண்டும் கெட்டான் வயசுப் பெண்ணிற்குத்தான் பெற்றோரின் கண்காணிப்பும், கட்டுப்பாடும் கிடையாதே... இதுவும் ஓட்டல் ரூமுக்கு சென்றுள்ளது.
"அங்கு —
"ரூமில் 55 வயது ஆசாமி ஒருவன்... தனக்கு 25 வயது என்று டுபாக்கூர் விட்ட அதே ஆசாமி... முதலில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவன், செக்சில் ஈடுபட முயன்றுள்ளான். இந்தப் பெண் சாமர்த்தியமாகப் பேசி, தான் நாளை வருவதாகக் கூறி இருக்கிறார். தன்னை ஏமாற்ற முயன்றால், இன்டர்நெட் பேச்சுக்களை – பிரின்ட் – அவுட்களை அம்பலப்படுத்தி விடுவதாக பிளாக்மெயில் செய்துள்ளான்.
"அவள் பெற்றோர் மூலமாக விவகாரம் என்னிடம் வந்தது. என் ஆளை அனுப்பி, அந்த 55 வயதுக்காரனுடன் போனில் நைச்சியமாகப் பேசி, ஒரு ஓட்டலில் காபி சாப்பிட அழைப்பு விடச் செய்தேன். அவனும் வந்தான்.
"காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, என் ஆள் என்னிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டு, "பையா... ஆசாமி பாவமாக இருக்கிறான் பார்ப்பதற்கு... என்ன செய்ய?' எனக் கேட்டான். "என்ன செய்யவா? அந்த காபி கோப்பையால அவன் முகத்தை பேத்து, வழக்கமான டிரீட்மென்ட் கொடு!' எனக் கூறினேன்.
"அதேபோல செய்து, ஆசாமியை வேனில் தூக்கிப் போட்டு சேத்துப்பட்டில் ஆள் அரவமில்லாத தெருவில் வேனை நிறுத்தி பேன்டை அவிழ்த்து, தொடையிலும், காலிலும், பிளேடால் 150 கோடு கோலம் போட்டு, "ஊருக்கு ஓடிப் போ... பிளேன் ஏறும்போது இந்த மொபைல் நம்பரில் சொல்லிட்டுப் போ...' என அனுப்பி வைத்தனர் என் ஆட்கள்.
"அதே போல செய்தான் அந்த ஆசாமி... இந்த விஷயத்தைப் போலீசுக்கு கொண்டு போனால் மேட்டர் எப்படி போகும்... எப்போது முடியும்... அதன்பின் கோர்ட்...கேஸ்... இதெல்லாம் எப்போ முடியும்? அந்த குடும்பத்தின் மானம் என்ன ஆகும்? சிம்பிளா மேட்டரை முடிச்சிட்டேன்...' என்றார். அடிதடி, பிளேடு கோல சமாச்சாரங்கள் மனதை என்னவோ செய்தது.
பெண்ணைப் பெற்றவர் எவ்வளவு ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும், கண்காணிக்க வேண்டும் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொண்டால் மகிழ்ச்சியே!
Source: Dinamalar, அந்துமணி பா.கே.ப.,