''ஐயோ, வலி உயிர் போகுதே...''
-
கை, கால்களில் தைலம் தேய்த்தபடி, வலி தோய்ந்த வார்த்தைகளால் அலறும்
பெண்களை விளம்பரங்களில் மட்டும் அல்ல... பல வீடுகளிலும் பார்க்கிறோம்.
சமையல் அறை தொடங்கி அலுவலகம் வரை பலவித பணிகளாலும் பம்பரமாகச் சுழலும்
பெண்களைப் பெரிதாக வருத்துவது மூட்டுவலிதான்.
''ஆண்களைக்
காட்டிலும், பெண்களே அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்!'' என வேதனையோடு
சொல்லும் கோயம்புத்தூர், கங்கா மருத்துவமனையின் ஆர்த்தோபீடிக் மற்றும்
ஸ்பைன் சர்ஜரி துறைத் தலைவரும் பேராசிரியருமான ராஜசேகரன், கொஞ்சம்
விரிவாகவே பேசினார்.
''ஆர்த்தோவின் முக்கியமான நோய்... 'ஆர்த்ரைட்டீஸ்' எனப்படும்
மூட்டுவலிதான். நம் தொடையையும், காலையும் இணைக்கும் பகுதியான மூட்டுப்
பகுதியில்தான் 'கார்டலெஜ்' (carilage) எனும் ஜவ்வு உள்ளது. அன்றாட
வாழ்க்கைச் சூழல், செயல்பாடுகள், மாற்றங்களால் அந்த ஜவ்வு தேய
ஆரம்பிக்கும். அப்போது மூட்டு வலி, மூட்டு வீக்கம், இடுப்பு வலி ஏற்படும்.
இதுதான் ஆரம்ப அறிகுறி. இந்த வலி அதிகரிக்கும்போது, அன்றாட வேலைகளைக்கூட
நம்மால் செய்ய முடியாது. கால் வளைந்து போகும். இந்த அறிகுறிகள்
தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்!'' என்றவர், மூட்டுவலி
வருவதற்கான காரணங்களை அடுக்கினார்.
''உடல்
பருமனாக இருப்பவர்களுக்கு மூட்டு வலி வர வாய்ப்பு அதிகம். ஒரே இடத்தில்
அதிக நேரம் உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்
கொள்ளாமல், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனச் சாப்பிடுவது, தேவையான
நடைபயிற்சி இல்லாதது போன்றவையும் இதற்கு காரணமாகிவிடுகின்றன. கூடவே,
எலும்புகளும் தசையும் வலுவிழக்கவும் செய்கின்றன.
மரபணு
ரீதியாக இளவயதினருக்குக்கூட மூட்டுப் பிரச்னைகள் வரக்கூடும். இதை 'மூட்டு
வாதம்' (ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ்) என்பார்கள். இது பரம்பரை நோய். இதன்
காரணமாக மூட்டுவலி, வீக்கம் ஏற்பட்டு நடப்பதே சிரமமாகிவிடும்!'' என்றவர்
மூட்டுவலியைத் தடுக்கும் முறைகள் குறித்து தொடர்ந்தார்.
''சிறு
வயதிலிருந்தே தினமும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் வேகமாக நடைபயிற்சி
செய்ய வேண்டும். அதற்காக ரன்னிங், ஜாக்கிங் என்று அதிகமான உடற்பயிற்சி தேவை
இல்லை. சாதாரண நடை பயிற்சியே போதுமானது.
மூட்டுவலியின்
அறிகுறிகள் தெரிந்தால்... சம்மணம் போடுவதையும் குத்தங்கால் போட்டு
அமர்வதையும் தவிர்க்க வேண்டும். மாடிப்படி ஏறக்கூடாது. வெஸ்டர்ன்
டாய்லெட்டைப் பயன்படுத்துவது நல்லது.
தினமும்
சத்தான உணவுகளைச் சேர்ப்பது நல்லது. குறிப்பாக கால்சியம் அதிகமான உணவு,
கீரை, மீன் உணவுகளை உட்கொள்வது அவசியம். காலை, மாலை இருவேளையும் பால்
குடிப்பது நல்லது.
முக்கியமாக
வயதுக்கேற்ற உடல் எடை இருக்க வேண்டும். அதிக எடை ஆபத்தைத்தான்
ஏற்படுத்தும். மூட்டுவலி வருவதுபோல் தோன்றினால், முதலில் உங்களது எடையில்
10 சதவிகிதம் குறைத்துவிட்டாலே போதும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த
நோயாளிகள், எடையைக் கட்டுப்பாடாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
மூட்டுக்கு சூடு உத்தடம் கொடுக்கலாம். இது நல்ல கை வைத்தியம்.
மருத்துவரின்
ஆலோசனைப்படி 'மூட்டு பெல்ட்' Knee Belt முட்டியில்
பொருத்திக்கொண்டால்... மூட்டுகள் அசையாமல் இருப்பதுடன் வலியும் குறையும்.
தரமான ஆயில் மசாஜ் செய்வது, தினமும் யோகா மற்றும் பிசியோதெரபி முறைகளைக் கடைபிடித்தால் தசைகள் உறுதியாக இருக்கும்.
மூட்டுவலிக்கு
மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வலி நிவாரணி
மாத்திரைகளை சாப்பிடுவதால் வயிற்றில் புண், அல்சர், கிட்னி பாதிப்புகள்
வரலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ராஜசேகரன், அடுத்து சொன்னதுதான் முக்கிய
மாகக் கவனிக்க «வண்டியது.
''குடும்பம்
மற்றும் அலுவலகப் பணிகளால் மூட்டுவலிக்கு ஆளாகும் பெண்கள், 'வலி என்
விதி' என்று அசமந்தமாக இருந்துவிடுகிறார்கள். ஆரம்பத்திலேயே மூட்டுவலியைச்
சரிசெய்யாமல் விட்டால், இறுதியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே
தீர்வு என்றாகிவிடும். இந்த சிகிச்சை செய்வதற்கு சுமார் 1.25 லட்சம்
ரூபாய் செலவாகும். 'கடைசி காலத்தில் எதுக்கு இந்த ஆபரேஷன்... நான் என்ன
ரன்னிங் ரேஸுக்கா போகப் போறேன்?' என்கிற சலிப்பில் குடும்பப் பெண்கள்
அதனையும் தவிர்த்துவிடுவதுதான் பெரிய சோகம். விளைவு, கழிப்பறைக்குப்
போகவேண்டும் என்றால்கூட அடுத்தவரின் உதவி தேவை என்று நிலைமை
மோசமாகிவிடும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 25 முதல் 30 வருட
காலங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம்.
இப்போது
எல்லாம் 40 வயதினருக்குக்கூட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
செய்யப்படுகிறது. திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்ய
நேரிட்டாலும், குத்தங்கால், சம்மணமிட்டபடி உட்காருவதற்கு என்றே சிறப்பு
உபகரணங்கள் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால், வளைந்திருந்த
கால்கள் நேராகும். கால்கள் அதிக எடை தெரியாமல் லைட்டாக இருக்கும். வலி
என்பதே இருக்காது!'' எனச் சொல்லும் ராஜசேகரன்... முத்தாய்ப்பு அறிவுரையாக
இப்படி முடிக்கிறார் -
''நமக்கு
'மூடு' எந்த அளவுக்கு முக்கியமோ... அந்த அளவுக்கு மூட்டு முக்கியம்.
'மூடு' சரி இல்லை என்றால்கூட அடுத்த சில நிமிடங்களில் சகஜமான மனநிலை
உருவாகிவிடும். ஆனால், மூட்டு சரி இல்லை என்றால்... அடுத்தடுத்து
துரத்தும் பிரச்னைகள் அதிகமாகிவிடும். அதனால், ஆரம்ப வலி வருகிறபோதே
அக்கறையாக செயல்பட வேண்டும்!''