தம்பதிகளுக்காக...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:38 | Best Blogger Tips
னிதனின் வாழ்க்கைக்காலம் சராசரியாக 60 வருடங்கள். அதற்குமேல் வாழ்வது அவர்களின், உடல் மற்றும் மன வலிமையைப் பொறுத்திருக்கிறது.
பெண்கள் 20 -25 வயதிற்குள்ளும்  ஆண்கள் 25 - 30 வயதிற்குள்ளும்  திருமணம் செய்கிறார்கள். அதே நேரத்தில்..இன்றைய நாகரீக வேகத்தில்  பெண்களும் சரி ஆண்களும் சரி 30 வயதுக்கு மேல் விவாகரத்து என்ற ஆபத்தான ஒரு தீர்வில் போய் நிற்கிறார்கள்.
எல்லாத் திருமணங்களும் விவாகரத்து என்ற ஒரு ஆபத்தான தீர்வில் போய் நிற்கவில்லை என்றாலும்....

எதற்காக இந்த விவாகரத்து என்று சற்று ஆராய்ந்தோமானால்...?

புதிதாக மணமான தம்பதிகள் விவாகரத்துப் பெற்றாலும் பரவாயில்லை. ஏனென்றால், சரியான புரிந்துணர்வு இல்லையென்று கூறலாம். ஆனால், திருமணம் ஆகி மகிழ்ச்சியோடு வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்று அவர்களும் கல்லூரி, பள்ளி என்று போக ஆரம்பித்த பின் விவாகரத்துப் பெறுவது ஆபத்தான தீர்வு தானே?
இதற்கான காரணங்களை ஆராய்ந்தால், சிறு விஷயங்களாகத் தான் இருக்கும்.
முதலாவது, ஒரு பெண்ணும், ஆணும் திருமண பந்தத்தில் ஆரம்பிக்கும் போது, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அவ்வளவாகத் தோன்றாது. அன்றைக்குள்ள மகிழ்ச்சி, புதிதாகக் கிடைக்கும் சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை மாயலோகத்தில் வைத்திருக்கும்.பிள்ளைகள் பிறக்கும்போதும் அப்படித்தான். பெருமிதமாக உணர்வார்கள். கணவன் / மனைவி செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்கு மனம் வராது.

சிறிய குடும்பமாக இருக்கும்போது, பணத்துக்கு பெரியளவில் வேலை இருக்காது.
குழந்தை வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பித்ததும் முதலில் வருகின்ற பெரும் செலவு திக்குமுக்காடச் செய்து விடும்.

இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கூடவே மன அழுத்தமும் உண்டாகிறது.
இங்கு ஆண்களின் நிலை கொஞ்சம் மாறுபடுகின்றது. அவர்கள்   நண்பர்களிடம் எந்த விஷயங்களையும் மறைப்பதில்லை.
அப்படி எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும்போது, அதுவரை மனதிற்குள் இறுகிக்கிடந்த விஷயங்கள் யாவும் வெளியேறி மனம் இலகுவாகிவிடும். ஆனால் பெண்களுக்கு அது முடியாத ஒன்று. பொதுவாகப் பெண்களைப் பற்றிய கருத்துகளில் ஒன்று எந்த ஒரு ரகசியத்தையும் காப்பாற்ற முடியாதவர்கள் என்பது. அதன் காரணமோ அல்லது பொறாமை மனப்பான்மை காரணமோ, எவ்வளவு தான் நெருங்கிப் பழகினாலும், தங்கள் கவலைகள், குறைகள் எதையும் வெளிக்காட்டுவதில்லை. இதனாலேயே பெண்கள் அதிகளவு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள்.

ஆண்கள் எல்லாவற்றையும் மறந்து சந்தோஷமாக இருக்கும்போது, பெண்களுக்கு அதைப் பார்த்து கோபம் உண்டாகின்றது.
பொறுமை காணாமல் போய், சிறிய விஷயங்களுக்குக் கூட கடுமையான வார்த்தைகள் வெளிவருகின்றன.
மனம் கொந்தளிக்கும்போது, கணவர், பிள்ளைகளின் மீது காரணமற்ற கோபங்கள் உண்டாகி, குடும்பத்தில் மகிழ்ச்சி காணாமல் போய்விடுகின்றது.
இந்த நிலைமைகள் தொடரும்போது தம்பதிகளுக்கு விவாகரத்து ஒன்று தான் சரியான தீர்வு என்ற நினைப்பு உறுதியாகின்றது.
இந்த நிலை எதற்காக?


ஆண் நண்பர்களே!
எட்டு மணி  நேரத்தை உங்கள் முதலாளிக்காகச் செலவிடுகின்றீர்கள். இரண்டு மணி நேரத்தை நண்பர்களுக்காகச் செலவிடுகின்றீர்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தை உலகச் செய்திகள், விளையாட்டுகளுக்காகச் செலவிடுகின்றீர்கள்.
மனைவிக்காக எத்தனை நிமிடங்கள் ஒதுக்கியிருக்கின்றீர்கள்?


பெண் தோழிகளே!
எட்டு மணிநேரம் அலுவலக வேலை. ஆறு மணிநேரம் வீட்டில் வேலை. இரண்டு மணிநேரம் குழந்தைகளைக் கவனிக்கும் வேலை.
உங்கள் சந்தோஷங்களுக்காக எவ்வளவு நேரம் கொடுத்திருக்கின்றீர்கள்?

இருவரும் இயந்திரம் போல ஓடிக்கொண்டேயிருந்தால், மன நிம்மதி எங்கிருந்து வரும்?
விவாகரத்து ஒன்று தான் தீர்வு என்றால், ஏனைய தம்பதிகள் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்?
அதற்குக் காரணம் பொறுமையான நடவடிக்கைகள் தான்.
சில நிமிடங்கள் கணவன்/ மனைவி இருவரும் கலந்து பேசுங்கள்.
கடந்த காலங்களின் இனிமை நினைவுகளைச் சற்று திருப்பிப் பாருங்கள்.
நகைச்சுவைத் துணுக்குகள் படித்து நன்றாகச் சிரியுங்கள்.
இதில் எல்லாம் மனதின் அழுத்தம் குறையவில்லையா?
நன்றாக மனம்விட்டு அழுதுவிடுங்கள்.
அந்தக் கண்ணீரில், நீங்கள் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் கரைந்து மனம் ஒருநிலைப்பட்டுவிடும்.
கோபத்தில் எடுக்கும் தீர்மானங்கள் எப்போதுமே சரியானதாக அமைவதில்லை.
விவாகம் செய்வது வாழ்க்கையை முழுமையாக்குவதற்கு!
விவாகரத்து செய்து மகிழ்ச்சிகளைக் குறைத்து விடாதீர்கள்!