வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வது புத்திசாலித்தனம்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:46 PM | Best Blogger Tips

வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வது புத்திசாலித்தனம்


ஒரு தொடர்பு ஏன் உருவானது என்ற காரணத்தை இதோ சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் நிஜக்கதை நமக்குப் புரிய வைக்கும்!
பார்த்திபன் செல்வியை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டான். திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். ரொம்பவும் ஃப்ரெண்ட்லியான தம்பதி, ரொம்பவும் அன்னியோன்யமான தம்பதி என்றெல்லாம் அவர்களைப் பார்த்தவர்கள் புகழ்ந்தார்கள். செல்விக்கு அவள் பணியாற்றிய வங்கியில் உயர் பதவிக்கான பிரமோஷன் கிடைத்து ஹைதராபாத்துக்குப் போக வேண்டி வந்தது.

மனைவிக்கு பிரமோஷன் கிடைத்ததிலும், அவள் அதற்காக ஹைதராபாத்துக்குக் கிளம்பியதிலு ம் ரொம்பவே மகிழ்ச்சிதான் பார்த்திபனுக்கு. அவன் சென்னையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதால் அவனால் ஹைதராபாத்துக்குப் போய் இருக்க முடியவில்லை. திருமணமாகி மூன்றே வருடங்களில் மாசக்கணக்கில் ஏற்பட்ட பிரிவு என்பதால் மனைவியைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அப்படி மனதில் ஆசை தோன்றும்போதெல்லாம் பெரும்பாலும் மாசத்தின் முதல் வார இறுதியில் ஹைதராபாத்துக்கு ரயில் டிக்கெட் எடுத்து மனைவியைப் பார்க்க பறந்துவிடுவான் பார்த்திபன்.
பெரிய விடுமுறையாக வரும்போது செல்வியே சென்னைக்கு டிக்கெட் எடுத்து இங்கே வந்து தங்கிவிடுவாள். அடுத்த மூன்று வருடங்கள் இப்படியாக உருண்டோடிக் கொண்டிருந்தது.

செல்வி பணிபுரிந்த வங்கி புதுப் புது திட்டங்களோடு படு வளர்ச்சியடைந்து வந்த நேரம் அது. செல்வியின் வேலைத்திறனை பார்த்துவிட்டு அவளை அதற்கும் மேற்பட்ட ஒரு பதவி உயர்வுடன் புதுடில்லிக்கு மாற்றியது அந்த வங்கி.

நீங்களும் சென்னை வேலையை ரிசைன் செய்துவிட்டு டெல்லிக்கே வந்துடுங்களேன். அங்கேயே வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்றாள் செல்வி. பார்த்திபனுக்கு அது முடியாது என்று தோன்றியது. தான் வளர நினைக்கும் துறையால் தன் வேலையில் இங்குதான் எதிர்காலம் என்பதால், அவன் அந்த யோசனையை நிராகரித்துவிட்டான்.

நீ சென்னைக்கு மாற்றல் கேட்டுட்டு வரப் பாரு... எனக்கு உன் பக்கத்திலே இருக்கணும் போலருக்கு! என்றான் வாய்விட்டு ஒரு நாள்.

என்னங்க நீங்க? நான் அதுக்கு முயற்சி பண்ணாமலேயா இருந்திருப்பேன்னு நினைக்கிறீங்க? இந்த மூணு வருஷத்தை பல்லைக் கடிச்சுட்டு ஓட்டிட்டோம்னா அப்புறம் நான் அங்கே வந்துருவேன்! என்றாள் செல்வி.

பார்த்திபனால் நினைத்த நேரத்தில் ஹைதராபாத்துக்கு சென்றதுபோல் டெல்லிக்கு எல்லாம் செல்ல முடியவில்லை. பயணமே ஒன்றரை நாள் ஆனது. போக வர மூன்று நாட்கள், அங்கே தங்க மூன்று நாட்கள் என்றால் கூட ஒரு வாரம் தேவைப்பட்டது. அவனுக்கு மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என்று மனதில் ஆசை கிளர்ந்தெழும் நேரங்களில் கூட அவனால் மனைவியைப் பார்க்க முடியாத சூழ்நிலை.

இப்படி அதற்கடுத்த மூன்று வருடங்கள் உருண்டோடிய நிலையில், செல்வி தன் குடும்பச் சூழலை எடுத்துச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் ஒரு வழியாக சென்னைக்கே மாற்றல் கிடைத்து வந்துவிட்டாள். வந்த பிறகுதான் அவளுக்கு சில அதிர்ச்சிகள் தெரிய வந்தன. பார்த்திபன் வீட்டில் மிகக் குறைவான நேரம் செலவழிக்கிறான் என்று வந்த முதல் சில நாட்களிலேயே புரிந்து கொண்டாள் செல்வி. என்ன, ஏது என்று விசாரித்தபோது அவன் அலுவலகத்திலேயே அவனுடன் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தது.
அந்தப் பெண் சுதா, ஏதோ பிரச்னையால் டைவர்ஸ் ஆகி கணவனை விட்டுப் பிரிந்து வாழ்பவள். ஒரு ஆணின் அன்பான வார்த்தைகளுக்காக மனசுக்குள் ஒரு ஏக்கம் வைத்துக் கொண்டிருந்த சுதாவும், தன் மனைவியின் அணைப்புக்கும் கவனிப்புக்கும் தவித்துக் கொண்டிருந்த பார்த்திபனும் டக் கென்று ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.

கடந்த ஒரு வருடமாக போய்க் கொண்டிருந்திருக்கிறது இந்த விஷயம். அலுவலகத்துக்கு இது தெரிய வந்ததுமே, சுதாவின் வேலையை ரிஸைன் செய்ய வைத்து அவளுக்கு ஒரு தனி ஃப்ளாட் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்து அங்கேயே தினமும் தங்கவும் ஆரம்பித்துவிட்டான் பார்த்திபன்.விஷயம் தெரிய வந்ததுமே பதறி, எரிமலையாகக் கோபப்பட்டாள் செல்வி. அவனைப் போட்டு உலுக்கியெடுத்துவிட்டாள்.


"த்தூ என்ன மனுஷன் நீங்க? அப்படியென்ன பொம்பளை ஆசை வந்து ஆட்டிப் படைச்சிடுச்சு உங்களை? கொஞ்சநாள் பொறுத்துக்க முடியலியா? நான் வேலை விஷயமா போனாலும் எனக்காக மட்டுமா போனேன்? நம்ம குடும்பத்துக்கு சம்பாத்தியம் அதிகமா வரணும்னுதானே போனேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே! என்று அழுதாள்.

இதற்கிடையில் சுதா மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற விஷயம் தெரிய வந்ததும் நொறுங்கிப் போய்விட்டாள் செல்வி.

செல்வியின் பெற்றோர், பார்த்திபனின் பெற்றோர் என யாராலும் பார்த்திபன் செல்வி-பார்த்திபன் பிரிவை தடுக்க முடியவில்லை.

பார்த்திபன் -செல்வி - சுதா... இவர்கள் மூவரில் யாரைத் தவறென்று சொல்வீர்கள் நீங்கள்?

மூவருக்குமே அவர்களை அவர்கள் நியாயப்படுத்த ஒரு சூழல் இருக்கிறது!

மனைவி பேர்ல எத்தனை ஆசை வச்சிருந்தேன். அவளைப் பார்க்க முடியலியே... அவளோட இருக்க முடியலியேன்னு எத்தனையோ துடிச்சேன். பிரிஞ்சிருக்க முடியாம இங்கேயே மாத்திட்டு வந்துடுன்னு எத்தனையோ எடுத்துச் சொன்னேன். நானும் ஒரு மனுஷன்தானே? என்று பார்த்திபன் நியாயப்படுத்தலாம்.

அதேபோல்தான், வேதனைகள் நிறைந்த வாழ்க்கையின் பக்கங்களை சந்தித்த சுதா, தன் மேல் அக்கறையாகவும் ஆசையாகவும் பேசிய ஒரு ஆணை ஏற்றுக் கொண்டதையும் நியாயம் என்றே சொல்வாள்.

தனக்கு வரும் பிரமோஷன்கள் தன்னையும் தன் குடும்ப அந்தஸ்தையும்தானே உயர்த்தப் போகிறது என்ற நம்பிக்கையில் பிரிந்திருப்பது பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையை செய்து வந்த செல்விக்கும் அவள் செய்தது நியாயமாகத்தான் படுகிறது.

இந்த நிஜ சம்பவம் சொல்லும் பாடம் இதுதான்!

கணவனும் மனைவியும் நீண்ட நாட்கள் பிரிந்திருக்கும் சூழலைத் தவிர்ப்பது நல்லது.

கணவனையோ மனைவியையோ பாதை தவறச் செய்வதில் மிகப் பெரிய ஒரு காரணம் இது!

இதுபோன்ற காரணங்களால், தம்பதியர் பாதை மாறிய இன்னும் எத்தனையோ சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது நேரில் பார்த்திருப்பீர்கள்!

நார்மலான ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கையை பெரும்பாலும் நிர்ணயிப்பது அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் தேவைகள்தான்! இந்த தேவை'கள், பணம், அன்பு, அக்கறை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்! மேலே சொன்ன சம்பவத்தில் அந்தக் கணவனைத் தவறச் செய்தது உடல் தேவைதான்! ஆறுதல் மொழிகள் தேவை என்ற விஷயம் சுதாவை தவற வைத்தது.

ஆண்களும், பெண்களும் இத்தனை பலவீனமாகவா இருக்கிறார்கள் என்று சண்டைக்கு வர வேண்டாம்! நார்மலான ஆண், பெண் என்று நான் சொன்னதை கவனத்தில் கொள்ளுங்கள்!

நம்மைச் சுற்றித்தான் தன் தங்கையின் திருமணம் முடிய வேண்டும் என்பதற்காக, காதலிக்கும் வாய்ப்பு வந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் எத்தனையோ அண்ணன்கள் இருக்கிறார்கள்.... அக்காக்கள் இருக்கிறார்கள்.

தன் தாயை அல்லது தந்தையை அல்லது தன் தாய் தகப்பனில்லாத சகோதர சகோதர்களையோ கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவோ தங்கள் சந்தோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மனைவியை வீட்டில் விட்டு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் கணவர்களும் இருக்கிறார்கள். கணவரின் உணர்வுக்கு அப்படியே அருமையாக ஒத்துழைக்கும் மனைவிகளும் இருக்கிறார்கள்.

தன் துணையை இழந்த ஒரு நிலையில் இரண்டாவது திருமண வாய்ப்பு வந்தும், தன் சின்ன வயதுக் குழந்தைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வு காரணமாக அந்த வாய்ப்பைத் தவிர்க்கும் எத்தனையோ தகப்பன் அல்லது தாய் இருக்கிறார்கள்.

இதுபோன்ற இயல்பு கொண்டவர்களும் நம்மோடுதான் இருக்கிறார்கள்தான். பாதிக்கப்பட்ட கணவனோ, மனைவியோ, இதுபோன்ற ஒரு சிலரை உதாரணம் காட்டி தன் துணை பாதை தவறிப் போனதுக்காக சண்டையிடுவதும் உண்டு!

ஆனால் நாம் ஒரு அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்! நம்மில் பலர் சராசரி மனிதர்கள்தான். சூழலும், தேவையும் ஒரு சராசரி மனிதனை புரட்டிப்போடும். அப்படிப்பட்ட ரிஸ்க்கை ஏன் உங்கள் பர்சனல் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்?

எது ஒருவரை சுலபமாக கவிழ வைக்கும் ஆபத்து என்று பாயிண்டைப் புரிந்துகொண்ட பின் அந்த ஆபத்து நிகழவிடாமல் தடுத்து வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்.