அக்னியை எதிர்கொள்ள அசத்தல் ஜூஸ் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:42 AM | Best Blogger Tips





நீர்மோர்
வெண்ணெய் எடுத்த மோரைத்தான் நீர்மோர் என்கிறோம். நீர்மோரில் உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுதைக் கலந்து குடிக்கலாம்.
பலன்கள்: வயிற்றில் உள்ள தீமை செய்யும பாக்டீரியாவை அழித்து நல்ல பாக்டீரியாவை வளர்க்கும் தன்மை இதில் இருக்கிறது. வயிற்றுப் போக்கு, நீர்க்கடுப்பைப் போக்கும்.

எடை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அருந்தலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு அருந்தலாம்.

நீராகாரம்
மிஞ்சிப்போன சாதத்தில் நீரை விட்டு, மண் பானையில் வைத்துவிடுங்கள். மறுநாள், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தைத் துருவிப் போட்டு உப்பு, சிறிதளவு மோர் சேர்த்து நன்றாகக் கரைத்து அருந்தலாம்.

பலன்கள்: ழைய சாதத்தில் நல்ல பாக்டீரியா வளர்ந்திருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. மிகக் குறைந்த கலோரியே உள்ளது. நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், சோடியம், பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இருப்பதால் உடலுக்கு நல்ல தெம்பையும், குளிர்ச்சியையும் தரும். எல்லோரும் அருந்த ஏற்றது.

பாதாம் பால்
50 கிராம் பாதாமை மிதமான கொதிநீரில் ஊறவைத்துத் தோல் நீக்கி, மிக்சியில் விழுதாக அரைக்கவும். 250 மி.லி. பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, பாதாம் விழுது, சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். தேவையான சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். குளிரவைத்துப் பருகவும்.

பலன்கள்: புரதம், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் இருக்கின்றன. குறைந்த அளவு நார்ச்சத்துக் கிடைக்கிறது. பால் சேர்ப்பதால் சக்தி கிடைக்கும். காலை வேளையில் அருந்துவது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். வளரும் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், வயோதிகர்கள் அருந்தலாம்.

ரோஸ் மில்க்
பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, ரோஸ் எசென்ஸ் () பவுடர், சர்க்கரை சேர்க்கவும். பிறகு ஐஸ் கட்டிகளைச் சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: இதயத்துக்கு மிகவும் நல்லது. பால் சேர்ப்பதால் வைட்டமின் சத்து ிடைக்கும். புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம் இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!

நெல்லிக்காய் ஜூஸ்
நான்கு நெல்லிக்காயை வெந்நீரில் போட்டு துண்டுகளாக நறுக்கி, அதனுடன், சிறு துண்டு இஞ்சி, ஐஸ்கட்டிகளை சேர்த்து அரைக்கவும். தேன் சேர்த்து பருகவும்.
பலன்கள்: ஓர் ஆப்பிளின் பலன் ஒரு நெல்லிக்காயில இருக்கிறது என்பார்கள். ஐந்து கிராம் நெல்லிக்காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சி சத்து, 200 கிராம் ஆப்பிளில் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். பொட்டாசியம், வைட்டமின் சி, தாது உப்புகள் ஓரளவு உள்ளன. குறைந்த அளவு கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் இருக்கின்றன.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அருந்த வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்ற அருமையான ஜூஸ் இது.

ஆப்பிள் மில்க்ஷேக்
ஆப்பிளை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதைவிட்டு, நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு கப் பால் சேர்த்து பருகவும்.
பலன்கள்: இதில அதிக அளவு மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் ஓரளவு இருக்கின்றன. கரையும் தன்மையுடைய ஃபைபர் இருப்பதால் கொலஸ்ட்ராலை குறைக்கும்.

சர்க்கரை நோயாளிகள் அருந்தவேண்டாம். சிறுநீரகம் பழுதடைந்தவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்களுக்கு ஏற்றது.

ஆரஞ்சு ஜூஸ்
இரண்டு ஆரஞ்சு பழத்தின் தோல், கொட்டை நீக்கி, மிக்ஸியில் போட்டு சர்க்கரை சேர்த்து அரைக்கவும். ஐஸ் கட்டிகள் சேர்த்து தண்ணீர்விட்டு மீண்டும் அடித்து அருந்தவும்.
பலன்கள்: இதில் வைட்டமின் சி, மாவுச்சத்து இருப்பதால் எனர்ஜி கிடைக்கும். கால்சியம், பாஸ்பரஸ், சிறிதளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண், தோல், எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும். பொட்டாசியம் சிறிதளவே இருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

கொத்தமல்லித் தழை ஜூஸ்
ஒரு கட்டுக் கொத்தமல்லி இலையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். இதனுடன் சிறிதளவு இஞ்சி, தேவையான அளவு வெல்லம் சேர்த்து ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு மிக்சியில் அரைக்கவும். வடிகட்டிப் பருகவும்.

பலன்கள்: எலுமிச்சை சேர்ப்பதால் வைட்டமின் சி சத்து கிடைக்கும். பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் கரையாத ஃபைபர் மற்றும் பொட்டாசியம், கால்சியம், சோடியம் ஓரளவு இருக்கிறது. நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கக்கூடியது.

சிறுநீரகக் கோளாறு இருப்பவர்களுக்கு இந்த ஜூஸ் ஆகாது, மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது.

புதினா எலுமிச்சை ஜூஸ்
இரண்டு கொத்துப் புதினாவைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். ஒரு பச்சை எலுமிச்சம்பழத்தின் தோலைத் துருவிக் கொள்ளவும். தேன், தேவையான சர்க்கரை, மூன்று எலுமிச்சம்பழத்தின் சாறு, ஒரு சிறிய அன்னாசிப் பழத் துண்டு இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் குளிர்ந்த தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனுடன், பச்சை எலுமிச்சம்பழத் தோல் துருவலைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய புதினாவையும் கலக்கிப் பருகவும்.

பலன்கள்: புதினாவில் அதிக அளவு ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு நல்லது. பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி இதில் இருக்கிறது. இதில் கரையாத ஃபைபர் இருப்பதால் மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்.

ரத்த சோகை, ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்றது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்! நுங்கு பதநீர்

நான்கு ஐந்து நுங்குகளைச் சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்து, பதநீருடன் கலந்து, சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தலாம். பதநீர் கிடைக்கவில்லை எனில் இளம் நுங்காகப் பார்த்து வாங்கிச் சாப்பிடலாம்.

பலன்கள்: பதநீரில் குளுகோஸ், கால்சியம் மிக அதிக அளவு இருக்கின்றன. நுங்கில் பொட்டாசியம், சோடியம், தாது உப்புகள் இருக்கின்றன. நுங்கைத் தோலுடன் சாப்பிடுவதால் நார்ச்சத்து உடலில் சேரும். அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. நுங்கு, பதநீரைப் 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். கிராமங்களில் மட்டுமே பதநீர் கிடைக்கும். ஆனால், சென்னையில், காதி கிராஃப்டில் பதநீர் விற்கப்படுகிறது.

சிறுநீரக இயக்கத்தில் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!



வெள்ளரி ஜூஸ்
நான்கு பிஞ்சு வெள்ளரிக்காய், கைப்பிடி அளவு கொத்தமல்லியை அரைத்து, சிறிது மோர், தண்ணீர், சிட்டிகை உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்: அதிக அளவு நீர்ச்சத்து இதில் இருப்பதால் நா வறட்சியைப் போக்கும். பசியைத் தூண்டி, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். பொட்டாசியம் அதிக அளவு இருக்கிறது. சோடியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. பித்தத்தைக் குறைக்கும். வயிற்றுப் புண், உப்புசம், குடல் புண்ணை சரியாக்கும். இருமல், கபம் இருந்தால் வெள்ளரியை வாங்கி அப்படியே சாப்பிடலாம்.

சிறுநீரகம் பழுதடைந்தவர்கள் தவிர்க்கவேண்டும். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது.

புதினாமல்லி ஜூஸ்
அரைகட்டுப் புதினா, கால்கட்டுக் கொத்தமல்லி இவற்றைச் சுத்தம் செய்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறை எடுத்து, தேவைக்கு ஏற்ப வெல்லம், சிறிதளவு சாட் மசாலா கலந்து அரைக்கவும். துணியில் வடிகட்டிப் பருகவும்.

பலன்கள்: மல்லி, புதினாவுக்கு உரிய சத்துக்கள் சேரும்.
எல்லோரும் அருந்தலாம்.

வெள்ளைப் பூசணி ஜூஸ்
500 கிராம் வெள்ளைப் பூசணியைத் துருவிக் கொள்ளவும். இதனுடன், சிறிதளவு சீரகத்தூள், தேவையான உப்பு, ஓர் எலுமிச்சம்பழத்தின் சாறு சேர்த்துக் குளிர்ந்த நீர் விட்டு மிக்சியில் அரைத்துப் பருகவும்.

பலன்கள்: குறைந்த அளவு கலோரி, அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் புரதம், வைட்டமின் சி இதில் இருக்கின்றன.

எடை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் வாரத்துக்கு இரண்டு, மூன்று நாட்கள் மோர் சேர்த்து இரண்டு டம்ளர் குடிக்கலாம். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டாம். இதய நோயாளிகள் குடிக்கலாம். மற்ற எல்லா வயதினரும் தினமும் ஒரு டம்ளர் குடிப்பது நல்லது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!

கொய்யாப்பழ ஜூஸ்
கொய்யாப் பழத்தை வெட்டும்போது, புழுக்கள் இருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். பழத் துண்டுகளுடன் தேவையான சர்க்கரை, பால் சேர்த்து அரைத்து, சிறிது வெனிலா எசென்ஸ், ஐஸ்கட்டிகள் சேர்த்து அருந்தவும்.

பலன்கள்: நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, சர்க்கரை ஓரளவு இருக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது, மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!

சர்பத்
எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் 200 மி.லி பால் சேர்த்து நன்றாக மிக்சியில் அடிக்கவும். ஒரு ஸ்பூன் கிரேப் எசன்ஸ், நன்னாரி எசன்ஸ், ஐஸ் கட்டிகளைச் சேர்த்து கலந்து பருகலாம்.

பலன்கள்: நன்னாரி உடலுக்கு அதிகக் குளிர்ச்சியையும், சக்தியையும் தரக்கூடியது. அதிக அளவு தாது உப்புகள் இதில் இருக்கின்றன. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைக்கும். சோர்வை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
கிர்ணி ஜூஸ்
ஒரு கிர்ணிப் பழத்தைத் தோல்நீக்கி, நறுக்கி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்துப் பால் சேர்த்து, ஐஸ் கட்டிகளைப் போட்டுப் பருகவும்.

பலன்கள்: அதிக அளவு பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட் இருக்கிறது. அதிகமான சக்தியைக் கொடுக்கும். ஓரளவு நார்ச்சத்தும், குறைந்த அளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கந்தகம் போன்றவையும் இருக்கின்றன.

எல்லோருக்கும் ஏற்றது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
கேரட் ஜூஸ்
350 கிராம் பிஞ்சு கேரட்டை சுத்தம் செய்து துருவவும். இதனுடன் தேவையான சர்க்கரை, ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறு சேர்த்துக் குளிர்ந்த தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். மெல்லிய துணியில் வடிகட்டிப் பருகவும்.

பலன்கள்: சர்க்கரை, பீட்டா கரோட்டீன் அதிகம் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது. ஃபோலிக் ஆசிட் இருப்பதால் ரத்தவிருத்திக்குப் பயன்படும். இதில் இருக்கும் கரையும்தன்மை உடைய ஃபைபர், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டது. எலும்பு வளர்ச்சிக்கும், எனர்ஜியை கொடுக்கவும் ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால், உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையின் அளவு குறையும்போது மட்டும் குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் தினமும் அருந்துவது நல்லது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
ஸ்ட்ராபெரி ஜூஸ்
பழங்களிலிருந்து கொட்டையை எடுத்துவிட்டு, பால், தேன் சேர்த்து கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு மிக்சியில் அரைத்து பருகவும்.

பலன்கள்: இதில் கார்போஹைட்ரேட் அதிக அளவு இருக்கிறது. ஓரளவு வைட்டமின் ி, சிறிதளவு பீட்டா கரோட்டீன், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை இருக்கின்றன. நல்ல எனர்ஜியை கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும். எல்லோரும் அருந்தலாம்.
Thanks to FB Karthikeyan Mathan