மரணத்தின் விளிம்பில்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:14 | Best Blogger Tips

மரணத்தின் விளிம்பில் யாருமே அதிக நேரம் தங்கி விடக் கூடாது என்று அருணாச்சலத்திற்குத் தோன்றுகிறது.

ஏனென்றால் வாழ்ந்த விதத்தையும், நடந்து முடிந்தவைகளையும் இந்த நேரத்தில் அசை போட மட்டுமே மனிதனால் முடிகிறது. ஆனால் எதையும் சரி செய்யவோ மாற்றவோ அவகாசம் இல்லை.

"ஆஸ்பத்திரியில் வைத்துப் பயன் இல்லை. வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்கள்" என்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னதால் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அதிக பட்சம் மூன்று நாட்கள் இருப்பார் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் கண்களை மட்டும் திறந்து பார்க்கவும், சுற்றிலும் மற்றவர்கள் பேசவும் கேட்கவும் மட்டுமே முடிந்த ஒருவருக்கு ஒவ்வொரு கணமும் யுகமாகக் கழியும் அந்தக் கொடுமையை அருணாச்சலம் மட்டுமே அறிவார்.

மனைவி, மகன், மகள் மூவருக்கும் அவர் மரணத்தில் துக்கம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதையும் மீறி உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்கிற கவலை மேலோங்கி இருந்தது.

ஏகப்பட்ட சொத்தை சுயமாக சம்பாதித்திருந்த அவர் உயிலை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவரானதால் கடைசி உயிலில் தங்கள் நிலை என்ன என்கிற கவலையை அவரருகில் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அது காதில் விழ விழ மனம் ரணமாகிக் கொண்டே இருந்தது. மனிதனை விட பணம் பிராதானமாகும் போது பாசமென்ன, பந்தமென்ன?

"அந்த நாசமாப் போன வக்கீல் இந்த நேரமாய் பார்த்து சிங்கப்பூர் டூர் போயிட்டார். அவர் திங்கள் கிழமை தான் வருவாராம்" -இது மகன். இன்று வியாழக் கிழமை. திங்கட்கிழமை வரை காக்க அவனுக்குப் பொறுமையில்லை.

"அப்பா எனக்கு கண்டிப்பா ஒரு வீடு எழுதி வைப்பார்னு நாங்க ஹவுசிங் லோன் கூட போடாமல் இருக்கோம். உயில்ல என்ன எழுதி இருக்கார்னு உங்கிட்ட ஏதாவது சொல்லியிருக்காராம்மா?" இது மகள்.

"உயிலைப் பத்திக் கேட்கறப்ப எல்லாம் இப்ப எப்படியிருக்காரோ அப்படியே தான் இருப்பார். எந்த முக்கியமான விஷயத்தை என் கிட்ட வாய் விட்டுச் சொல்லியிருக்கார்" - இது மனைவியின் புலம்பல்.

குடும்பம் தான் இப்படி என்றால் வந்து விட்டுப் போன அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்கள், அவர் கம்பெனி ஊழியர்கள் என எல்லோருமே ஒரு சம்பிரதாயத்திற்கு வந்தது போலத் தான் அவருக்குப் பட்டது.

உறவினர்கள் மெல்லிய குரலிலும், சுற்றி வளைத்தும் உயில் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். நண்பர்கள் அனைவரும் தொழில் சம்பந்தப்பட்டவர்கள். ஆகவே அவர்களும், ஊழியர்களும் அவர் கம்பெனி வாரிசான மகனிடம் நல்ல பெயரெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பக்கத்து கோயில் பூசாரி பார்க்க வந்தவர் "விஷ்ணு சஹஸ்ரநாமம் காதில் விழுந்துண்டிருந்தா நேரா வைகுண்டத்துக்கே போவான்னு ஐதீகம். அதனால தெரிஞ்சவா சொல்லுங்கோ, இல்லைன்னா கேசட்டாவது போடுங்கோ" என்று சொல்லி விட்டுப் போனார்.

"ஏண்டா கேசட் இருக்கா?" என்று அவர் மனைவி மகனிடம் கேட்க அவன் இல்லை என்றான். அதோடு அந்த விஷயம் மறக்கப் பட்டது. இல்லாவிட்டால் ஒன்று வாங்கிக் கொண்டாவது வா என்று அவளும் சொல்லவில்லை. வாங்கிக்கொண்டு வர அவனும் முயற்சிக்கவில்லை.

குடும்பத்திற்காக ஏகப்பட்ட சொத்தை சேர்த்து விட்டு விடை பெறப் போகும் இந்தத் தருணத்தில் தன் குடும்பத்திடம் இருந்து அவர் இதை எதிர்பார்க்கவில்லை. பணத்தையும், சொத்துக்களையும் சம்பாதித்தவர் மனிதர்களை சம்பாதித்து வைக்கவில்லை என்பதை உணர்கிறார்.

சொர்க்கம் நரகம் என்று சொல்லப்படுவதெல்லாம் செத்த பிறகு போகும் இடங்கள் அல்ல, இந்தக் கடைசி கணங்களில் ஒவ்வொருவனும் எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்க்கும் மன நிலையே என்று அவருக்குத் தோன்றுகிறது.

"சார் எப்படியிருக்கார்" என்று அவரது டிரைவரின் குரல் கேட்க கண்களைத் திறந்தார். அவரது டிரைவரின் மகனும் கூட நின்றிருந்தான்.

நான்கு வருடங்களுக்கு முன்பு ப்ளஸ் டூவில் மாவட்ட முதலிடம் வந்த மாணவன் அவன். அப்போது என்ன படிக்க வைக்கப் போகிறாய் என்று டிரைவரைக் கேட்ட போது "அவன் இன்ஜீனியர் படிக்க ஆசைப் படறான். அதெல்லாம் நமக்கு முடியுமா எசமான். ஏதோ டிகிரி படிக்கட்டும்னு இருக்கேன்" என்று டிரைவர் சொன்னார்.

அத்தனை நல்ல மார்க் வாங்கிய பையன் ஒரு சாதாரண பட்டப் படிப்பு படிக்கப் போவது பொறுக்காமல் "இன்ஜீனியருக்கே படிக்க வையுப்பா. படிக்கறதுக்கு ஆகற செலவை நான் பார்த்துக்கறேன். அக்கௌண்டண்ட் கிட்டே சொல்லி வைக்கறேன். தேவையானதை சொல்லி வாங்கிக்கோ" என்று சொன்னார்.

எத்தனையோ செலவாகிறது இது பெரிய விஷயமல்ல என்று அவர் அன்று நினைத்தார்.....

அவர் மனைவி சொன்னாள். "டாக்டர் கையை விரிச்சுட்டார். வீட்டுக்கு எடுத்துகிட்டு போக சொல்லிட்டார்.." அதைக் கேட்ட டிரைவரும், டிரைவரின் மகனும் லேசாகக் கண்கலங்கினார்கள்.

"என் மகனுக்குக் காலேஜ் கேம்பஸ் இண்டர்வ்யூல டாட்டா கம்பெனியில வேலை கிடைச்சுடுச்சும்மா. மாசம் ஆரம்பத்திலயே 25000 சம்பளம். எல்லாம் சார் போட்ட பிச்சை. அதான் சாரு கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டு போக கூட்டிகிட்டு வந்தேன்"

அந்த இளைஞன் அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவன் முகத்தில் நன்றியுணர்வு நிறைந்திருந்தது. டிரைவரும் கண்கலங்க அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்.

அருணாச்சலம் அவர்கள் இருவரையும் ஒரு கணம் நிறைந்த மனதுடன் பார்த்தார். அந்த இளைஞனின் வெற்றியும், அவன் நன்றியுணர்வும் அந்தக் கடைசி தருணத்தில் மனதுக்கு இதமாக இருந்தது.

அவரும் ஓரிரண்டு மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்த வாழ்க்கையில் செய்த சாதனைகள், சேர்த்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட அந்த மாணவன் படிக்க அவர் செய்த சிறிய உதவி மட்டுமே அர்த்தமுள்ள செயலாக அவருக்கு அப்போது தோன்றியது.

வாழும் போது பெரிதாகப் பட்ட எல்லா விஷயங்களும் மரணத்தின் விளிம்பில் நின்று பார்க்கையில் அற்பமாகத் தெரிந்தது

அந்த இளைஞனைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அந்தக் கணத்தில் மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. வாழ்க்கையைத் திரும்பவும் வாழ முடிந்திருந்தால் இது போல் மேலும் பல நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்பது தான் அவரது கடைசி நினைவாக இருந்தது.



Via Thannambikkai