இரத்தம் கண்டுதல் அல்லது கட்டிபடுதல்
இரத்தமானது இரத்தம் குழாய்க்கு வெளியே உறைந்து கட்டி படுவதாகும். மருத்துவத்தில் hematoma எனப்படும்
விழுதல் அடிபடுதல் போன்றவற்றின் போது பொதுவாக ஏற்படுகிறது. வெளிக்காயங்கள் இல்லாதிருந்தாலும் இரத்தக் குழாய் சேதமுற்று குருதியானது அருகில் உள்ள திசுக்களுக்குள் கசியும்போது குருதி உறைந்துவிடும்.
கசிவு அதிகமாக இருந்தால் உறையும் இரத்தமானது கட்டிபோலத் திரளும். நாளம், நாடி மயிர்துளைக் குழாய்கள் என எந்தவிதமான இரத்தக் குழாய்கள் சேதமுறுவதாலும் இவ்வாறு கண்டல் ஏற்படலாம். பாராதூரமான அடிபடிதலில்தான் இரத்தம் கண்ட வேண்டும் என்றில்லை.
மிகச் சாதரண தும்மலின் வேகம் சிலரின் நாசி இழையங்களைத் தாக்குவதால் இரத்தக் கசிவு ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு.
இரத்தம் தொடர்ந்து வெளியேறுவதைத் தடுக்கவே குருதி உறைதல் உதவுகிறது. மிகக் குறைந்தளவு இரத்தம் மட்டுமே வெளியேறிய குருதி உறைந்தால் அது ஒரு சிறிய சிவத்த புள்ளி போலவே தோன்றும். அதனை மருத்துவத்தில் Petechiae என்பார்கள்.
அதிகம் வெளியேறி கட்டிபோலத் தோன்றினால்தான் அதை கண்டல் எனச் சொல்கிறோம்.
இரத்தக் குழாய்கள் சேதமுறுவதால் குருதிப் பெருக்கும் ஏற்படலாம். அதன்போது குருதி உறையாமல் தொடர்ந்து வெளியேறிக் கொண்டேயிருக்கும். இதனை மருத்துவத்தில் Hemorrhage என்பார்கள்.
ஏன் ஏற்படுகிறது.
பொதுவாக ஏதாவது விபத்துத்தான் காரணமாக இருக்கும். விபத்து என்பது வீதி விபத்துப்போல தீவிரமானதாக இருக்க வேண்டும் என்றில்லை. தடக்கி விழுதல், தலை கால் போன்ற அங்கங்கள் மேசை கட்டில் போன்றவற்றில் அடிபடுதல் போல மிகச் சாதாரணாகக் கூட இருக்கலாம்.
இப்பொழுது பலர் குருதி உறைதலைத் தடுப்பதற்கான மருந்துகளை உபயோகிக்கின்றனர். இருதய நோயுள்ளவர்கள், இருதய நோய் எற்பட வாய்ப்புள்ளவர்கள் ஆகியோர் குறைந்த அளவில் அஸ்பிரின் மாத்திரைகளை (Aspirin 75mg or 100 mg) உட்கொள்கின்றனர். வேறு சிலர் Clopidogril 75 mg உபயோகிக்கின்றனர். வேறு சிலர் Warfarin உபயோகிக்கின்றனர். பக்கவாதம் வந்த சிலர் Persantine உபயோகிக்கின்றனர்.
இவை யாவுமே இரத்தம் உறைதலைக் குறைக்கினறன. குருதியின் உறையும் தன்மையைக் குறைக்க செய்வது அவர்களது பிரச்சனைகளுக்கு மிக அவசியமானதே. ஆனால் அதன் விளைவாக இவர்களுக்கு சிறிய விபத்தினால் கூட இரத்தக் கசிவு ஏற்படலாம். கண்டலும் ஏற்படலாம். எனவே அவதானமாக இருப்பது அவசியம்.
அறிகுறிகளும் மாற்றங்களும்
கண்டல்கள் பொதுவாகக் கடும் வேதனையைக் கொடுப்பதில்லை. வீக்கமும் சிறியளவு வலியும் இருக்கலாம். இருந்தபோதும் சில இடங்களில் ஏற்படும் கண்டல்கள் அதிக வலியைக் கொடுக்கும்.
ஆரம்ப நிலையில் தொடுகைக்கு கடுமையானதாகத் தோன்றும் கண்டல்கள் சிறிது சிறிதாக மெதுமையடைந்து மறைந்து போகும். வீக்கத்திற்கு ஏற்ப மறைவதற்கு ஒரு நாளோ பல நாட்களோ எடுக்கலாம்.
அளவு குறைந்து செல்லும்போது அதன் வடிவமும் நிறமும் மாறுவதுண்டு. கடும் நீலம் அல்லது கத்தரி நிறமாக இருந்தது பின் சற்று மஞ்சள் பூத்து, பிறவுண் நிறமாகி இறுதியில் வழமையான தோல் நிறத்தை அடையும்.
சில வேளைகளில் கண்டல் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாறுவதுமுண்டு. உதாரணத்திற்கு முற் கூறிய பெண்ணிற்கு நெற்றியில் தோன்றிய கண்டல் பின்னர் புவியீர்ப்பு விசை காரணமாக கீழ் நோக்கி நகர்ந்து கன்னத்திற்கும் பின்னர் கழுத்திற்கும் இறங்கியது.
சில வகை இரத்த கண்டல்கள்
நகதின் கீழ்ப் பகுதியில் குரதிக் கசிவு ஏற்பட்டால் கடினமான நகம் ஒருபுறமும், மறுபுறம் எலும்பும் அழுத்துவதால் கண்டல் விரிவடைவதற்கு இடம் அளிக்காது. இதனால் ஏற்படும் அழுத்தம்; கடும் வலியை ஏற்படுத்தும்.
மூக்கில் அடிபட்டால் சில வேளை அதன் நடுவில் இருக்கும் மென்சவ்வான இரத்தத்தில் கண்டல் ஏற்படலாம். இது பெரிதாகவும் இரு பக்க நாசியையும் அடைக்குமளவு பெரிசானால் மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படுவதுண்டு. இதை அவசரமாக மருத்துவரிடம் காட்டி அகற்ற வேண்டும். இல்லையேல் குருதி ஓட்டம் தடைப்பட்டு மூக்கின் மென்சவ்வு பழுதடைந்துவிடும். மூக்கு சப்பையாகிவிடும்
இதேபோல காது மடலிலும் மென் சவ்வுகள் உள்ளன. அங்கும் கண்டல் ஏற்பட்டால் அதற்கான குருதி ஓட்டம் தடைப்பட்டும். உடனடியாகக் காது மருத்துவரிடம் காட்டி கண்டலை அகற்றுவது அவசியம். இல்லையேல் காது சளிந்து வளைந்துவிடும்.
மலவாயிலிலும் கண்டல் ஏற்படலாம். குதத்திற்கு அருகில் உள்ள இரத்தக் குழாய்கள் வெடிப்பதால் திடீரென வலியுடன் கூடிய கட்டி நாவல்பழக் கலரில் ஏற்படும். வலியைக் குறைப்பதற்கான பூச்சு மருந்து மாத்திரைகளை உபயோகிக்க சில நாட்களில் தானே தணிந்துவிடும். கடும் வலியாயின் மயக்கம் கொடுக்காமலே, விறைப்பதற்கு ஊசி போட்டு கண்டல் இரத்தத்ததை அகற்றுவதன் மூலம் குணப்படுத்தலாம்.
தலையில் அடிபட்டால் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவார்கள். காரணம் மண்டையில் கண்டல் பட்டால் அது மூளைக்குள் ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா என்ற பயம்தான். வெளியில் ஏற்படும் கண்டல்கள் மூளைக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆயினும் தலையில் பட்ட அடியால் மண்டை ஓட்டின் உட்புறம் ஏதாவது இரத்தக் கசிவு அவ்வது உறைதல் ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானதே.
தலையில் அடிப்பட்ட பின்னர் மயக்கம், கடுமையான தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் சேர்ந்திருந்தால் தாமதிக்காது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
நீங்கள் செய்யக் கூடியவை
ஆயினும் ஆபத்த சாதாரண கண்டல்களை நீங்களாகவே குணப்படுத்தலாம். இதற்கான மருத்துவத்தை RICE எனக் குறியீடாக் கூறுவார்கள்.
R என்பது Rest யைக் குறிக்கும். ரெஸ்ட் என்பது மூடிக் கட்டிக் கொண்டு படுத்துக் கிடப்பது என அர்த்தப்படாது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக வேலைப் பளுவைக் கொடுக்காமல் சற்று ஆறுதல் கொடுப்பதாகும்.
I என்பது Ice யைக் குறிக்கும். கண்டல் பட்ட இடத்தின் மேல் சிறிது ஐஸ்கட்டியை ஒரு பையினுள் வைத்து டவல் துணியால் கட்டிவிடலாம்.
ஆயினும் அவ்வாறு ஐஸ்கட்டியை 10 நிமிடங்களுக்கு அதிகமாக ஒரே தடவையில் வைக்கக் கூடாது.
தேவைப்படால் 10 நிமிடங்களின் பின் எடுத்து விட்டு சற்று நேரம் கழிய மீண்டும் வைக்கலாம்.
அத்துடன் வலியைத் தணிக்க பரசிட்டமோல் மாத்திரைகளைக் கொடுக்கலாம். அஸ்பிரினை அவ் வேளையில் தவிர்ப்பது நல்லது.
C என்பது Compression யைக் குறிக்கும். துணியால் அல்லது பன்டேஜ்சால் அதன் மேல் கட்டுவதானது வீக்கம் அதிகரிக்காமல் இருக்க உதவும்.
E என்பது Elevation யைக் குறிக்கும். அடிபட்ட இடத்தைத் தொங்கவிடாது உயர்த்தி வைத்தால் விக்கம் வேதனை விரைவில் குறையும்.
இறுதியாகச் சொல்வதானால் பெரும்பாலான கண்டல்கள் ஆபத்தற்றவை. இருந்தபோதும் அவை ஏற்படாமல் இருப்பதற்கு நாம் அவதானமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் இளைஞர்கள் விளையாட்டின் போது விழுந்து காயம் படுவதற்கான சாத்தியம் அதிகம்.
அதேவேளை முதியவர்கள் சமநிலை தளும்பலாலும், காலில் ஏற்படும் விறைப்புத் தன்மைகளாலும் விழுவதற்கும் காயம் படுவதற்குமான சாத்தியம் அதிகம். அத்துடன் அவர்கள் குருதி உறைதலைத் தடுக்கும் மருந்துகளையும் உபயோகிக்க நேர்வதால் காயங்களும் கண்டல்களும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.