மதம் 2 ! தமிழர்களின் சமயம், தெய்வ வழிபாடு, குலத்தெய்வம் வழிபாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 6:22 PM | Best Blogger Tips

Picture

                   தனிமனிதனைக் கடந்து உணர்த்தி நிற்கும் அண்டத்தை அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே சமயம் ஆகும். '"சமயம்" என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை அமைத்துக்கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கருதுகோள்.எல்லாத் தமிழரும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்தவர்கள் அல்லர். தமிழர்களின் சமயம் நோக்கிய அணுகுமுறையை, சிந்தனைகளை, நடைமுறைப் போக்குகளை, வரலாற்றை தமிழர் சமயம் என்ற இக்கட்டுரை விளக்க முயலும். தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள்.சங்கத் தமிழர்கள் உலகாயத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும்,தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்து உள்ளார்கள்.பெளத்தம், சமணம், இந்து ( சைவம், வைணவம், சாக்தம்), இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். முருகன், அய்யனார், கண்ணகி, பன்றி வீரன் போன்ற "சிறுதெய்வ" வழிபாடும் தமிழர்களிடம் பரவி இருக்கின்றது. நாயன்மார்கள் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளை பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றிச் சிறப்புற்றவையே. இன்று திருக்குறளை பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை (Agnosticism), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.

                                    20ம் நூற்றாண்டு - பெரியாரின் உலகாயதம் பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கமும் திராவிடக் கழகமும் தமிழர்களின் சமயக் கொள்கைகளை தீர்மானித்த காரணிகளில் முக்கிய பங்கு வகித்தன; வகிக்கின்றன. பெரியாரின் சயம நோக்கை சோ. ந. கந்தசாமி இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்று ஆய்வு நூலில் பின்வருமாறு விளக்குகின்றார். மரபுவழிப்பட்ட உலகாயதர் கூறியவற்றுள் இம்மை, மறுமை, பிறவிச் சுழற்சி என்பன இல்லை என்ற கருத்தைப் பெரியார் ஏற்றுக்கொண்டார். புரோகிதரின் புரட்டுக்களையும் உடன்படவில்லை. கடவுள் இல்லை என்று தான் உலகாயதர் கூறினர். எனின், மூன்றுபடி மேலே சென்று "கடவுள் இல்லை, இல்லவே இல்லை; கடவுளைப் படைத்தவன் முட்டாள்; கடவுளை வணங்குபவன் சர்வமுட்டாள்" என்று முழங்கினார். இங்ஙனம் ஆத்திரம் அடைந்து உள்ளம் கொதித்துப் பேசியதற்குக் காரணம் உண்டு. கடவுள் பெயரினால் செய்யப்படும் பாதகங்களை அவர் ஏற்க விரும்பவில்லை. மூடப்பழக்க வழக்கங்கள், நாள், நட்சத்திரம், இராகுகாலம் பார்த்தல், கண்மூடித்தனமாக எதையும் நம்புதல், பொருளற்ற சடங்குகள், சமுதாய அநீதிகள், வருணக் கோட்பாடு, ஏற்றத்தாழ்வுகள் என்பன முன்னேற்றப் பாதையின் தடைகள் (Impediments) என்றும், இவையாவும் சமயத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் நடைபெறுவதால் சமயமும் கடவுளும் தேவையில்லை என்றும் இதே காரணத்தினால் இதிகாச புராணங்கள் வேதாகமங்களும் விலக்கத்தக்கவை என்றும் கூறினார். அறவழிப்பட்ட சினத்தினால் (Righteous anger) கடவுள் இல்லை என்பதைத் தாரக மந்திரமாக ஒலித்தார்...பெரியார் ஒழுக்கத்தை பெரிதும் வலியுறுத்தினார்.

                     
 தமிழர்களின் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. தங்களின் மூதாதயர்களை நினைவில் நிறுத்த இந்த வழிபாடு செய்யப்படுகிறது.

பெரியசாமி ஒரு கிராம காவல் தெய்வம்.சங்கிலி கருப்பு,  முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணனை அழைக்கின்றனர். சோழிய வெள்ளாளர், கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆகிய சமூகங்களின் குலதெய்வமாக மாசி பெரியண்ணன் வணங்கப்படுகிறார்.கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசி குன்றில் இவரது கோவில் அமைந்துள்ளது. இவர் காசியிலிருந்து வந்த சிவரூபமாக எல்லோரும் வணங்குகின்றனர். மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது.கோனார், தேவர், பறையர், நாடார் ஆகிய சாதிச் சமூகக் குடும்பங்கள் சிலவற்றின் குலத் தெய்வமாக சுடலை மாடன் வணங்கப்படுகிறார். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது.
கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம். கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு. கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.
மதுரை வீரன் ஒரு கிராம காவல் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் சில கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரை வீரன் வழிபாடு ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
இசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம். இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி ,சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர். இசக்கி அம்மன் பள்ளர்,கோனார், நாடார் ஆகிய சாதிச் சமூகங்களின் குலத் தெய்வமாகும். இசக்கி அம்மன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
                         
                                   குலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள்.தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருப்பதாக அறிந்து வியந்து போகிறேன்.இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கின்றார்கள். சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விட்னுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு மக்களிடையே பெருகி வருகிறது. மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிபினைந்த வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும்.

Via (சித்தர்கள்) angelinmery