அர்ஜுன விஷாத யோகம்
குருக்ஷேத்திரப் போர் நடக்கையிலே, கண்ணில்லாத திருதராஷ்டிர ராஜன், தான் அங்கு செல்லக் கூடாமையால் அஸ்தினாபுரத்தில் தனதரண்மனையில் இருந்துகொண்டே போர்க்களத்தில் நடக்கும் செய்திகளைத் தனக்குச் சொல்லும்படி சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமிக்கிறான்.வேதவியாசரருளால் ஞானதிருஷ்டி பெற்றவனாய் சஞ்ஜயன் போர்க்களத்துச் செய்திகளைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். கண்ணனுக்கும் பார்த்தனுக்கும் போர்த் தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பாஷணையை சஞ்ஜயன் கூறுவதாகச் சமைக்கப்பட்ட பகவத்கீதைக்கு இந்த முதலத்தியாயம் பாயிரமாகக் கருதத்தகும்.
திருதராஷ்டிரன் சொல்லுகிறான்: சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்? (1)
சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்: (2)
குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்! (3)
இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்; (4)
திருஷ்ட கேது; சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்; (5)
வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர். (6)
இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள். இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன். (7)
நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்; (8)
இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்; பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர். (9)
(எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை. வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது. (10)
நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர். (11)
(அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை யூதினான். (12)
அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று. (13)
பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை யூதினர். (14)
கண்ணன் பாஞ்சஜன்யத்தை யூதினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான் (15)
குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர். (16)
வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும், (17)
துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். ‘பூமிக்குத் தலைவனே!’ (18)
அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது. (19)
அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான். (20)
அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக” என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!) (21)
“சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?” (22)
“கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான். (23)
சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான். (24)
பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான். (25)
அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான். (26)
அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்: (27)
அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு, (28)
என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. (29)
காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது. (30)
கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில் எனக்கு நன்மை தோன்றவில்லை. (31)
கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவதென்னே? (32)
யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள். (33)
குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும் (இங்குளர்). (34)
மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ? (35)
ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தையடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும். (36)
ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது. மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி? (37)
அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும், (38)
ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன? (39)
குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே? (40)
கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது. (41)
அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள். (42)
வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன. (43)
ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம். (44)
அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்! (45)
கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.” (46)
சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான். (47)
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் ‘அர்ஜுன விஷாத யோகம்’ எனப் பெயர் படைத்த
முதல் அத்தியாயம் நிறைவுற்றது.