‘அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக்
கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக்
கர்மயோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன். பிறகு மனுவின்
வழியாக உலகில் அது பரவிற்று’ என்று சொல்லிக் கண்ணன் தனது அவதார
ரகசியத்தைக் கூறுகிறான். பிறகு கர்மயோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள்
அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறான். கர்மயோகம் ஞானபாகத்தை
உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞானயோகத்தின் பலனையும் அளிக்கும் என்று
கூறுகிறான்.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான். (1)
இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது. (2)
அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன், நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம். (3)
அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி? (4)
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை. (5)
ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன். (6)
பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன். (7)
நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன். (8)
எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான். (9)
விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர். (10)
யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள். (11)
தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ! (12)
குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர். (13)
என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான். (14)
முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய். (15)
‘எது தொழில்; எது தொழிலல்லாதது’ என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய். (16)
தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது (17)
செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான். (18)
எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள். (19)
கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான். (20)
ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான். (21)
தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய் – வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை. (22)
பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான், வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் -அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது. (23)
பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான். (24)
சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர். (25)
வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள். (26)
வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச் செயல்களையும் உயிர்ச்செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள். (27)
விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர். (28)
இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள். (29)
வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.(30)
வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்? (31)
பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய். (32)
பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது. (33)
அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.(34)
அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.(35)
பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய். (36)
நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும். (37)
ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான். (38)
பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான். (39)
அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை. (40)
யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா. (41)
அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில். (42)
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் ‘ஞான கர்ம ஸந்யாஸ யோகம்’ எனப் பெயர் படைத்த
நான்காம் அத்தியாயம் நிறைவுற்றது.