
மற்ற விஷயங்களைத் துறந்து கடவுளையே தியானம் செய்பவன் எத்தகைய கொடிய பாவியாயினும் நல்லோன் என்றே கருதப்பட வேண்டும். கடவுளிடத்திலேயே மனத்தைச் செலுத்த வேண்டும். கடவுளையே நேசிக்க வேண்டும். கடவுளையே வணங்க வேண்டும். இப்படி இருப்பவன் கடவுளையே அடைவான்.
கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய். (1)
ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது. (2)
பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர். (3)
அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என்நிலை. (4)
(மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்றும் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்குப் பார், பூதங்களைத் தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது. (5)
எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்துகொள். (6)
குந்தி மகனே, கர்ப்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கர்ப்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன். (7)
என் சக்தியில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் பூதத் தொகுதி முழுவதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன். (8)
தனஞ்ஜயா, என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா. அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன் போல் அமர்ந்திருக்கிறேன். (9)
என் மேற்பார்வையில் சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே, இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது. (10)
மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர். (11)
வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, அசுர, மோகினி சக்திகளாவன – அவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்). (12)
பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள். (13)
திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள். (14)
வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள். (15)
நான் ஓமம்; நான் யாகம்; நான் ‘ஸ்வதா’ என்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய்; நான் தீ; நான் அவி. (16)
இந்த உலகத்தின் அப்பன் நான்; இதன் அம்மா நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர். (17)
இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன், இதன் கரி, இதனுறையுள், இதன் சரண், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை. (18)
நான் வெப்பந் தருகிறேன்; மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா, உள்ளதும் யான்; இல்லதும் யான். (19)
சோமமுண்டார், பாவமகன்றார், மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேட்டு வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள். (20)
விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார். (21)
வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன். (22)
அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர். (23)
நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார். (24)
தேவ விரதிகள் தேவரை எய்துவார்;
பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்;
பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்;
என்னை வேட்போர் என்னை எய்துவார். (25)
இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான். (26)
நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய். (27)
இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய். (28)
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன். (29)
மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின், (30)
அன்னவன் விரைவிலே அறவானாவான்,
நித்திய சாந்தியு மெய்துவான்.
குந்தி மகனே; குறிக்கொள்!
என தன்பன் சாகமாட்டான். (31)
பாவிகளென்னைப் பணிவாராயினும்,
மாதரேனும், வைசியரேனும்,
சூத்திரரும் பரகதி பெறுவார். (32)
அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த
அந்தணரும் ராஜரிஷிகளும்
எனக் கன்பராயின், என்னே! ஆதலால்;
நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
என்னை வழிபடக் கடவாய். (33)
மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய். (34)
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் ‘ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்’ எனப் பெயர் படைத்த
ஒன்பதாம் அத்தியாயம் நிறைவுற்றது.