சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:21 PM | Best Blogger Tips

 

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதாவது புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம் நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு:

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு:

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின்(ஹீமோகுளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய:

சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

நன்கு பசியைத் தூண்ட:

பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு:

ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்து தான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

முதியோர்களுக்கு:

வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.




Via  இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்