ஒருபுறம், குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்வதை பார்க்கும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றொரு புறம், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல், வேலை பார்ப்பதை பார்க்கும் போது வருத்தம் ஏற்படுகிறது.
இக்குழந்தைகளின் மனதிலும் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். வறுமை, பெற்றோர் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால், அந்த குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறி விடுகிறது. இப்படிப்பட்ட குழந்தை தொழிலாளர் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "வீட்டு வேலைகளில், குழந்தை தொழிலாளர் இல்லா நிலையை உருவாக்குவது' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து.
குழந்தைக்கான வாய்ப்பே மறுப்பு:
உலகளவில் 21.5 கோடி குழந்தைகள், முழுநேர தொழிலாளர்களாக உள்ளனர். பள்ளிக்கு செல்ல முடியாமலும், மற்ற குழந்தைகளை போல விளையாட முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். பெரும்பாலானோருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. குழந்தைகளாக இருக்க இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களிலும், கொத்தடிமைகளாகவும் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர். போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இக்குழந்தைகளை ஈடுபடுத்துகின்றனர்.
வயது என்ன:
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), எந்த வயதில் வேலைபார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், லேசான வேலை பார்க்கலாம் (அவர்களது கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்).
எங்கு அதிகம்:
இந்திய அரசும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம் என தெரிவிக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வின் படி, உலகளவில் குழந்தை தொழிலாளர் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா (16 கோடி குழந்தை தொழிலாளர்) முதலிடத்தில் உள்ளது. நிலக்கரி சுரங்கம், விவசாயம், தீப்பெட்டி. செங்கல் சூளை, டெக்ஸ்டைல், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில், வார விடுமுறையின்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்கின்றனர்.
எது தீர்வு:
பெரும்பாலான குழந்தைகள், குடும்ப சூழ்நிலை காரணமாகத் தான், கட்டாயமாக வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். முதலில் இவர்களின் பெற்றோர் வருமானத்துக்கு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். வறுமை ஒழிந்தால், குழந்தைகள் கல்வி கற்பது அதிகரிக்கும். குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றலாம்.
வறுமையின் சிவப்பில் சிவந்த பிஞ்சு கைகள்:
பட்டாம் பூச்சிகளாய் சிறகடித்து பறக்க வேண்டிய வயதில், பள்ளிக்கு சென்று படிக்கும் காலத்தில், சிறைப் பறவைகளாய் வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர், பல குழந்தைகள். காரணம், வறுமை இவர்கள் முகத்தில், சிவப்பு சாயம் பூசி தன் வெற்றியை கொண்டாடுகிறது. பேனா பிடிக்க வேண்டிய பிஞ்சு கைகள், கரித்துணிகளை வைத்து கொண்டு ஓட்டல், ஒர்க்ஷாப், கட்டட வேலை, சாலையோர கடைகளில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. மனதில், ஆயிரம் ஆசைகளை சுமந்து கொண்டு, பள்ளிக்கு செல்லும் மற்ற குழந்தைகளை, இவர்கள் ஏக்கத்துடன் பார்ப்பது யாருக்கு தெரியும்...? இதனால், சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டு, தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர். பல இடங்களில், குழந்தை தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து, கொத்தடிமைகளாகவும் நடத்தப்படுகின்றனர். இதுவும், சமுதாயத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கும் ஒரு தீண்டாமைதான். தொடர் புள்ளிகளாக தொடரும், குழந்தை தொழிலாளர் முறைக்கு, முற்றுப்புள்ளி வைப்பது யாரோ?
மதுரையில் பணிபுரியும் 12 வயது சிறுவன் கூறியது:அம்மாவிற்கு சரியான வேலையில்லை; அப்பா, வேலைக்கு போக சொன்னா போகமாட்டேங்கிறாரு. வேலைக்கு போனாலும், வாங்குற காசுல குடிச்சிட்டு வர்றாரு. அம்மா பூ கட்டுறாங்க, அந்த வருமானத்துல குடும்பம் நடத்த முடியல. அதான் வேலைக்கு வந்துட்டேன். இந்த கடையில, 2 வருடமா வேலை பார்க்குறேன்; மாசம், ஆயிரம் ரூபாய் தறாங்க. கடைய சுத்தம் பண்றது, பொருட்கள எடுத்து கொடுக்குறது என் வேலை. காலையில 9 மணிக்கு வந்தா, "நைட்' 10 மணியாகும் வீட்டுக்கு போக! புது பேக் மாட்டிகிட்டு எல்லாரும் பள்ளிகூடம் போகுறத பார்த்தா, எனக்கும் பள்ளிகூடம் போகனும்ணு ஆசை வரும். ஏதோ, என் காச வைச்சு சாப்டுறோம். ஓரளவுக்கு எழுத்து கூட்டி, இங்கிலீஷ் படிப்பேன். இப்படி பேசிக்கொண்டே, தன் வேலையை தொடர்ந்தார். இவரை போல, படிக்காமல், குடும்பத்திற்காக, உழைத்து கொண்டிருக்கும் "ஏகலைவன்கள்' இருக்க தான் செய்கிறார்கள். இந்த குழந்தை தொழிலாளர்கள் உருவாகிறார்களா, உருவாக்கப்படுகிறார்களா? என்பதே சமூகத்தின் முன் நிற்கும் கேள்வி!
பெற்றோர்களை கண்காணிக்க முடியவில்லை:
குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சி.ஜிம் ஜேசுதாஸ், மதுரை:கடந்தாண்டு அக்., முதல் டிச., வரை, 21 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளோம். அதில், புதூர் பகுதியில் வேலை செய்த ஒரு சிறுமியை மீட்டு, சேலத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்தோம். இவர்களில், பெரும்பாலானவர்கள் 14 வயதுக்கு கீழ் தான் உள்ளனர். தொழிலாளர் நலச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தில், 14 வயது வரையுள்ளவர்களை மட்டுமே, மீட்க முடிகிறது. ஆனால், இளம்சிறார் நீதிச் சட்டம் மூலம்,மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுக்கு மேற்பட்ட, இரண்டு சிறுவர்களை மீட்டு, அவர்களது பெற்றோர்களை வரவழைத்து, ஒப்படைத்தோம். ஒத்துழைப்பு இல்லை:மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், கல்வி அளிப்பதற்கு, மதுரையில் கருமாத்தூர், காதக்கிணறில் தங்கும் மையங்கள் உள்ளன. ஆனால், பெற்றோர் ஒப்புதலுடன்தான் இங்கு, கல்வி பயில முடியும். மீட்கப்பட்ட குழந்தைகளை, தங்களுடன் வைத்துக் கொள்ளும் பெற்றோர், பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். பெற்றோரின் ரேஷன் கார்டு மற்றும் இருப்பிட சான்றிதழை சரிபார்த்த பிறகே, குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்கிறோம். ஆனால், ஒருமாதம் கழித்து முகவரி தேடிச் செல்லும் போது, இடம்பெயர்ந்து விடுகின்றனர். வேறு எங்காவது குடியேறி, குழந்தைகளை மீண்டும் வேலைக்கு அனுப்புகின்றனர். இதுதான், இத்திட்டத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்னை. இவர்களை கண்காணிப்பதற்கு, குழந்தைகள் நலக் குழுவில் ஆட்களும் இல்லை. குறிப்பிட்ட இடைவெளியில், குழந்தைத் தொழிலாளர்களின் நிலையை கண்காணிக்க வேண்டும். இடம்பெயர்ந்தாலும், அதுகுறித்த தகவல்கள் கிடைக்க வேண்டும். இதற்கென, தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும். குழந்தைகளின், பெற்றோருக்கு நிரந்தர வேலை வாய்ப்பை உறுதி செய்தால் தான், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முழுமை பெறும்.
ஏன் உருவாகிறார்கள் :
குழந்தை தொழிலாளர்கள் குறித்து, ஆய்வு செய்த, மதுரை "எவிடன்ஸ்' அமைப்பின், நிர்வாக இயக்குனர் கதிர்: டீ கடை, ஓட்டல், ஒர்க்ஷாப், பட்டாசு ஆலைகள், மிட்டாய், முறுக்கு கம்பெனிகளில், குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இத்தொழிலுக்காக, அவர்கள் கடத்தப்படவும் செய்கின்றனர். வறுமை, பெற்றோர் சரியில்லாமை, சமூக அந்தஸ்து இன்மை, பாதுகாப்பற்ற தன்மை போன்ற காரணங்களால், குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர். குழந்தை விரும்புகிற மாதிரியான கல்வித் திட்டம் இல்லாததும், ஒரு காரணம். அதேசமயம், குறைந்த சம்பளம் வழங்குவதற்காக குழந்தை தொழிலாளர்களை, சில நிறுவனங்கள், முதலாளிகள் ஊக்குவிக்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, கட்டாய கல்வியை ஊக்குவிப்பது; குழு அமைத்து தொடர்ந்து கண்காணிப்பது; சமூக பாதுகாப்பு அளிப்பது போன்ற காரணங்களால், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்கலாம். இதுகுறித்து, அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தால், உண்மை நிலை தெரியும்.
Via ஆரோக்கியமான வாழ்வு