கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:06 PM | Best Blogger Tips
அனைவருக்குமே கூந்தல் நன்கு அடர்த்தியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே அதற்காக எத்தனையோ சிகிச்சைகள், செயல்கள் என்று பலவற்றை செய்வார்கள். ஆனால் அனைவருக்குமே இத்தகைய அதிர்ஷ்டம் இருக்காது. தற்போது நிறைய பேர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கூந்தல் உதிர்தல் அதிகமானதால், சிலருக்கு வலுக்கை தலை கூட வந்துவிட்டது. அதுவும் இத்தகைய வலுக்கை பிரச்சனை இளமையிலேயே வந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது. எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது.
இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை முதுமை வயது, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதிகமான மாசுக்கள், அதிகப்படியான கெமிக்கல்களைப் பயன்படுத்துவது என்று பல. ஆனால் இத்தகைய காரணங்களால் ஏற்படும் பிரச்சனையை கட்டுப்படுத்தவோ அல்லது உதிர்தலின் அளவை குறைக்கவோ முடியும். இதற்கு இயற்கை முறைகள் தான் சிறந்தது. அதிலும் ஒருசில ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

இப்போது கூந்தல் உதிர்தலைத் தடுக்கும், அத்தகைய முத்தான பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை முறையாகப் பின்பற்றி, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெற முடியும். சரி, அதனைப் பார்ப்போமா!!!



நெல்லிக்காய் 

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் அதிகம் பயன்படுகிறது. ஏனெனில் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காயை அரைத்து, அதன் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். அதிலும் இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். மேலும் தினமும் நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் நறுக்கிப் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, தினமும் தலைக்கு ஊற்றி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தல் நின்று, கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு மிகவும் நல்லது.



வெங்காயம் 

பச்சை வெங்காயம் கூந்தலுக்கு மிகவும் சிறந்த ஒரு பொருள். அதற்கு தினமும் வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றை, தலையில் தடவி, மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளித்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.



இஞ்சி 

இஞ்சி பலனுக்கு அளவே இல்லை. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, கூந்தலுக்கும் ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. எனவே இஞ்சியின் சாற்றை எடுத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தடைபட்டிருந்த கூந்தல் வளர்ச்சி மீண்டும் நன்கு ஆரோக்கியத்துடன் வளரும்.





செம்பருத்தி 

கூந்தலை ஆரோக்கியத்துடன் வைப்பதிலும், கூந்தல் உதிர்தலைத் தடுப்பதிலும் செம்பருத்தி முக்கியப் பங்கினை வகிக்கிறது. அதிலும் செம்பருத்தியின் இலை மற்றும் பூ இரண்டுமே சிறந்தது. அதற்கு செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். மேலும் இதனை தொடர்ந்து செய்து வருவதால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, நரை முடி வருவதையும் தடுக்கும். அதிலும் செம்பருத்தியின் பூ மற்றும் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்ததை, காய வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும்.



கறிவேப்பிலை 

கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் கறிவேப்பிலையும் மிகவும் சிறந்த பொருள். ஆகவே கறிவேப்பிலையை அரைத்து, அதனை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள ஆன்டி-செப்டிக் பொருள், தலையில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை அழித்து, கூந்தல் வளர்ச்சி அதிகரித்து, பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.





பாதாம் 

பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே இரவில் படுக்கும் போது பாதாமை நீரில் ஊற வைத்து, காலையில் அந்த பாதாமை அரைத்து, பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, சாதாரண நீரில் அலச வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கூந்தலும் அடர்த்தியாக வளரும். வேண்டுமெனில் பாதாம் எண்ணெயை தினமும் கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் உதிர்தல் நின்று, நன்கு வளரும்.


கொத்தமல்லி இலை 

ஆயுர்வேதத்தில் கூந்தல் உதிர்தலைத் தடுக்க கொத்தமல்லியை பயன்படுத்துவார்கள். அதிலும் கொத்தமல்லியை அரைத்து, அதில் சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் செம்பருத்திப்பூ பேஸ்ட் கலந்து, கூந்தலுக்கு தடவினால், கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த முறையை வாரத்திற்கு 1-2 முறை செய்ய வேண்டும். வேண்டுமென்றால், கொத்தமல்லி சாற்றை தலைக்கு குளிக்கும் முன் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தும் குளிக்கலாம்.



லாவண்டர் எண்ணெய் 

ஆய்வுகளில் பலவற்றில் லாவண்டர் எண்ணெயில் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் சக்தி அதிகம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே லாவண்டர் எண்ணெயை வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி, மசாஜ் செய்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தினமும் செய்வதால், கூந்தல் உதிர்தலுக்கு காரணமான மனஅழுத்தமும் குறையும்.




வேப்பிலை 

வேப்பிலையின் நன்மைகளை சொல்லவா வேண்டும். அதிலும் கூந்தல் உதிர்தலில் இதன் நன்மைக்கு அளவே இல்லை. எனவே கூந்தல் உதிர்தல் இருப்பவர்கள், வேப்பிலையை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அந்த இலைகளை எடுத்து அரைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து. 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில், ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள பாக்டீரியா நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.





ரோஸ்மேரி

மூலிகைகளில் ரோஸ்மேரி ஒரு சிறந்த மூலிகைச் செடி. அதிலும் ரோஸ்மேரியின் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பயாடிக் போன்றவை அதிகம் இருப்பதால், அவை மயிர் கால்களை வலுவாக்கி, கூந்தல் உதிர்தலை தடுக்கும். ஆகவே ரோஸ்மேரியின் எண்ணெயை வைத்து, தினமும் மசாஜ் செய்தால், நிச்சயம் கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.




அவகேடோ 

மற்றும் தேங்காய் எண்ணெய் இந்த இரண்டும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இவற்றை தலைக்கு பயன்படுத்தினால், விரைவில் கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். அதற்கு அவகேடோவை அரைத்து காய வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, தினமும் அதனை தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்.




ஆலிவ்


ஆலிவ் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டுமே கூந்தல் உதிர்தலை நிறுத்தி, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். ஆகவே ஆலிவை வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, மென்மையாக வேக வைத்து, பின் அதனை எடுத்து, அரைத்து, அந்த பேஸ்ட்டை கூந்தலுக்கு தடவினால், நல்ல பலனை பெறலாம். இல்லையெனில் ஆலிவ் ஆயிலை தலைக்கு தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், சில நாட்களில் கூந்தல் உதிர்தலில் உள்ள மாற்றத்தை நன்கு அறியலாம்.





கேரட் ஜூஸ் 

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, நிறைய தண்ணீர் மற்றும் காய்கறி அல்லது பழச்சாற்றை குடிக்க வேண்டும். குறிப்பாக, கேரட் ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கும், கூந்தலுக்கும் நிறைய நன்மைகளைத் தருகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்



அதிமதுர இலை


அதிமதுரத்தின் இலை மற்றும் வேர் இரண்டுமே கூந்தலுக்கு நன்மையை தருவது. ஆகவே வாரத்தில் இரண்டு முறை, அதிமதுரத்தின் இலை அல்லது வேரை அரைத்து, சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் தடவி வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.




Via அறிவியல்