மனைவியை அதிகமாக கோபப்பட வைப்பது எது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 AM | Best Blogger Tips

திருமணமானவர்களுள் ஆண்கள் அனைவரும் தன் மனைவியை ஒரு பெரிய இராட்சசி என்று சொல்வார்கள். ஏனெனில் எப்போது பார்த்தாலும் மனைவிகள் அனைவரும் அவர்கள் கணவர்களை கோபத்தால் திட்டிக் கொண்டே இருப்பதால், ஆண்கள் பலர் தன் மனைவிகளை பற்றி மனதில் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு உங்கள் மீதுள்ள பாசம் தான் காரணம். அதனால் தான் அவர்கள் உங்களுடன் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

மேலும் உண்மையான பாசம் இருக்குமிடத்தில் தானே கோபம் இருக்கும். பாசம் யார் மீது வைத்துள்ளோமோ, அவரிடம் தானே உரிமையோடு கோபம் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக மனைவிகள் எப்போதும் தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் எப்போதும் பிரச்சனையை உருவாக்கி கோபப்பட வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை. அவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு நிச்சயம் கணவர்களது செயல்களால் தான் இருக்கும். இப்போது கணவர்களது எந்த மாதிரியான செயல்கள் மனைவிகளுக்கு கோபத்தை உண்டாக்குகின்றன என்று பார்ப்போமா!!!

* ஆண்கள் அதிகமாக சம்பாதித்து நன்கு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் சாம்பாதித்தால் மட்டும் சந்தோஷம் வந்துவிடுமா என்ன? சந்தோஷம் வருவதற்கு வேலை செய்யும் நேரங்களில் வேலை செய்து, மற்ற நேரங்களில் மனைவியுடன், குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். அதைவிட்டு, அலுவலகங்களிலேயே செலவழித்தால் யாருக்கு தான் கோபம் வராது. அதிலும் எப்போதாவது வேலை இருந்தால், அதைப் புரிந்து கொண்டு மனைவி கோபப்படமாட்டாள். ஆனால் அளவுக்கு மீறி போனால், கண்டிப்பாக பத்திரகாளியாகத் தான் மாறுவாள்.

* வேலைக்கு செல்லாத மனைவியிடம் மாலை நேரத்தில் வெளியே செல்லலாம் என்று சொல்லிவிட்டு, செய்யவில்லை என்றால் கோபப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் நாள் முழுவதும் வீட்டிலேயே தான் இருக்கிறார்கள். அத்தகையவர்களை வாரத்திற்கு ஒரு நாள் தான் வெளியே அழைத்து செல்வதாக சொல்லியிருப்பீர்கள், அதைக்கூட சரியாக செய்யாமல் இருந்தால், கோபம் வராதா என்ன? ஆனால் உண்மையில் அதிக வேலையின் காரணமாக களைப்பாக உள்ளது என்று அழைத்து செல்ல முடியவில்லை என்றால், அதைப் புரிந்து கொண்டு பேசாமல், அன்புடன் வீட்டிலேயே சந்தோஷமாக இருப்பார்கள். அதைவிட்டு பொய் கூறினால், நிச்சயம் அவர்களது கோபத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

* வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால், அவர்கள் எப்போதும் கணவர்களது சம்பளத்தை எதிர் பார்க்க மாட்டார்கள். ஆனால் வேலைக்கு செல்லாதவர்கள் என்றால் அவர்கள் குடும்பத்தை சரியாக நடத்துவதற்கு கணவரிடம் பணத்தை எதிர் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் எந்த ஒரு சிறு செலவிற்கும் அவர்கள் தன் கணவனை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை. சிலசமயங்களில் அவர்கள் தரமுடியாது என்று சொல்லி, பணம் கொடுப்பதற்கு மறுப்பார்கள். அதிலும் மனைவிகள் தேவையில்லாத செலவிற்கு கேட்டு கொடுக்காமல் இருந்தால் பேசாமல் இருப்பார்கள். ஆனால் முக்கியமான செலவிற்கு கேட்டு கொடுக்கவில்லையென்றால், அந்த நேரத்தில் வரும் கோபத்திற்கு அளவே இருக்காது.

* கூட்டுக் குடும்பத்துடன் இருக்கும் போது, அதாவது மாமனார், மாமியாருடன் இருக்கும் போது, கணவர்கள் செய்யும் ரகளைக்கு அளவே இருக்காது. ஏனெனில் நாள் முழுவதும் மனையானவள் வீட்டு வேலை செய்து, பின் இரவில் படுக்கும் போது தன் கணவரிடம் அன்று நடந்ததை சொல்லி நியாயம் கேட்க வேண்டும் என்று இருக்கும் போது, கணவர்கள் மனைவியிடம் இருக்கும் நியாயத்தை பொருட்படுத்தாமல், அவர்களது அப்பா, அம்மாவிற்கே எப்போதும் சாதகமாக பேசினால், கோபம் வந்து பிபி எகிறும் அளவிற்கு பேசுவார்கள்.

ஆகவே கணவர்மார்களே! மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு உங்கள் திருமண வாழ்க்கையை நன்கு மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள்.