மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நோய்கள் அதிகம் தாக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இயற்கையானது சீசனுக்கு தகுந்த காய்கறிகளையும் பழங்களையும் விளைவிப்பது மனிதர்களுக்காகத்தான். இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இனிப்பு நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இந்த சீசனில் அதிகம் கிடைக்கும். இதில் உயர்தர வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சரும வறட்சியை தடுத்து சருமத்தை பளபளப்பாக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாதாரணமாக வேகவைத்து சாப்பிடலாம். சூப் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.
நார்ச்சத்தான காலிஃப்ளவர்
குறைந்த கலோரிகளைக் கொண்ட காலிஃப்ளவரில் வைட்டமின் சி, கே சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்து, போலேட், பொட்டாசியம் அடங்கியுள்ளது. இது நோய் வரும் முன் தடுக்கும் காய்கறியாகும். காலிப்ஃவர் கூட்டு, பொரியல், மஞ்சூரியன் செய்து சாப்பிலாம்.
நோய் எதிர்ப்புக்கு டர்னிப்
வைட்டமின் சி சத்தும் பொட்டாசியமும் அடங்கிய டர்னிப் கிழங்கு சுவையானதோடு சத்தான காய்கறியாகும். இது கிழங்கு வகை காயாக இருந்தாலும் குறைந்த அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உள்ளது. உருளைக்கிழங்கிற்கு பதிலாக டர்னிப்பை சாப்பிடலாம். சாம்பார், கூட்டு வைத்து சாப்பிடலாம்.
கால்சியம் சத்தான வெங்காயத்தாள்
உணவில் சுவை கூட்ட உதவும் வெங்காயத்தாள் அதிக சத்து நிறைந்தது. இதில் கால்சியம், பொட்டாசியம், போலிக் அமிலம் காணப்படுகிறது. இதயநோய், புரஸ்டேட் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. காய்கறி சூப், முட்டை ஆம்லெட் போன்றவற்றுடன் மிக்ஸ் செய்து சாப்பிடலாம். வாசனையோடு சத்துக்களும் எளிதில் சேறும்.