காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விக்கு கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி.ரமணிகாந்த் பதிலளிக்கிறார்.
நான் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன், நான் மூச்சு விடும் போது ஒரு விதமான விசில் சப்தம் வருகிறது. இதனால் வகுப்பறையில் மாணவர்களின் கேலிக்கு ஆளாகிவிடுகிறேன். இதை சரிசெய்ய முடியுமா?
பதில்: மூக்கு முதல் குரல் நாண் வரை அடைப்போ அல்லது குறுகலாவோ இருந்தால் சில விதமான சப்தங்கள் வரலாம். எந்த பகுதியில் அடைப்பு உள்ளது என்பதனை பொறுத்து தான் தெளிவாக கூறமுடியும். இதற்காக பயப்படவேண்டிய அவசியம் இல்லை இதனை எளிதாக சரி செய்ய இயலும்.
காது கேளாமை என்பது பிறவி கோளாறா? மரபணு கோளாறா அல்லது விபத்து, அதிர்ச்சி போன்றவற்றால் ஏற்படுகிறதா?
நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று காரணங்களாலும் காது கேளாமை, கேட்டலில் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.பாதிப்புகளின் அளவை பொறுத்து அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது செயற்கை காது கேட்கும் கருவியை பொருத்தியும் இதனை சரிசெய்யலாம்.
சைனஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெஸ் என்ற சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் பலன் என்ன யாருக்கு பொருந்தும்?
பொதுவாக இந்த அறுவை சிகிச்சை இ.எஸ்.எஸ் என்று கூறப்படுகிறது. காதில் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. மருந்துகள் மூலம் பலன் இல்லாவிடில் சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு பாதிப்பை பொறுத்து செய்யப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்ட யாருக்கு வேண்டுமானலும் இந்த சிகிச்சை செய்யலாம்.
காதில் எதனால் சீழ் வடிகிறது? இதனை எவ்வாறு சரி செய்யவேண்டும்?
காதில் சீழ் வடிவதற்கான காரணத்தை கண்டறிந்து தான் முறையான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இது ஆரம்ப கட்டத்தில் இருப்பின் மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த இயலும். காதில் சீழ் வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நாட்கள் வரை மருந்துகளை உட்கொள்ளவேண்டும். மூக்கு தண்டு வடபாதிப்பு, சைனஸ் தொல்லை, டான்சில்ஸ், அண்ண சதைப் பிரச்னை போன்ற தொல்லைகளும் உடனிருந்து காதில் சீழ் வடிவது நெடுநாளாக இருந்தால் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும். ஒரு சிலருக்கு காதில் இருக்கும் சவ்வு கிழிந்து கூட சீழ் வரலாம். இவர்களுக்கு அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனரே சரியா?
வேக்ஸ் எனப்படும் திரவப்பொருள் பொதுவாக அனைவரின் காதுகளிலும் இருக்கும். இது காற்றில் உள்ள வாயுக்களினால் ஒரு சிலருக்கு திடப்பொருளாக மாறி கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தங்கி விடுகிறது. குளிக்கும் போது இயல்பாகவே வெளிவந்து விடுகிறது. ஒரு சிலருக்கு இது வெளிவராமல் கட்டி போன்று ஆகிவிடுகிறது. இவர்கள் மட்டும் மருத்துவர்களை அணுகி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இதனை தாமாக சுத்தம் செய்வது காதுகளின் உட்பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. காதுகளில் சோப்பு தண்ணீர், உடலில் தேய்த்துக்குளிக்கும் மாவு போன்றவை போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மூக்கடைப்பிற்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரேவின் காரணமாக புற்றுநோய் ஏற்படுமா?
பதில்: இல்லை, அதன் காரணமாக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புஇல்லை. பொதுவாக ஸ்பிரே இரண்டு வகைகளில் உள்ளது. ஸ்டிராய்டு, அலர்ஜி, சதை வளர்ச்சி போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரே வகைகள், மற்றொன்று சளிக்காக பயன்படுத்துவது. முதல் வகையை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தொடர்ந்து பயன்படுத்தலாம். இரண்டாம் வகையை ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே பயன்படுத்தவேண்டும் அல்லது அதற்கு அடிமையாகிவிடுவோம். அதை தவிர புற்றுநோய் என்பது மூக்கு பொடி பயன்படுத்துவதால் வரலாம்.
கர்ப்ப காலத்தின் போது காது, மூக்கு, தொண்டை, ஆகிய பகுதிகளில் பிரச்னை ஏற்பட்டால் அதற்கான மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்று கூறுகின்றனரே ஏன்?
காது, மூக்கு, தொண்டை மட்டும் அல்ல கர்ப்ப காலங்களில் எவ்வித மருந்துகளையும் உண்பதை தவிர்க்கவேண்டும். மருந்து எடுக்கும் போது அது நேரடியாக கருவில் உள்ள கருவை பாதிக்கும். மருந்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். என் தொழில் காரணமாக அதிகபட்ச நேரம் நான் செல்போன் பயன்படுத்தவேண்டிய சூழல் உள்ளது. இயர் போன் மூலம் பேசினால் பாதிப்புகளை தவிர்க்க முடியுமா?
செல்போன் பயன்பாட்டின் மூலம் இதுபோன்ற பாதிப்பு வரும் என்பதை உறுதியாக கூற இயலாது. இது பற்றிய ஆய்வு எதுவும் இன்னும் முழுமையடையவில்லை.ஆனால், அதிக நேரம் செல்போனில் பேசுவது கட்டாயம் கேட்கும் தன்மையை குறைத்து பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். இதில் இயர் போனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். அப்படியே பயன்படுத்தினாலும் ஒலி அளவை குறைத்து வைத்துக்கொள்வது பாதிப்புகளை குறைக்கும்.
Via அறிவியல்