எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.
இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.
வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.
அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.
அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.
Via
FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.