ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சக்தி உண்டு!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:53 | Best Blogger Tips
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சக்தி உண்டு. நாம் கடவுளாவதும், சாத்தானாவதும் நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளால் தான் என்ற உண்மையை நாம் முதலில் உணர வேண்டும். மனம் - எண்ணத்தின் பிறப்பிடம்; எண்ணம் - வார்த்தைகளின் தாய்; வார்த்தை - செயலின் உந்து சக்தி; செயல் - மனிதனின் விதி எழுதும் பிரும்மம். இதைப் புரிந்து கொண்டால் வெற்று வார்த்தைகள் வாயில் இருந்து வராது.

வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் விழிப்பு உணர்வு தேவை. வார்த்தைகளின் விளைவை அறியாமல் விரயமாக்கினால்... அவை, நமது வாழ்க்கையின் முதுகில் ஏறி அமர்ந்து, அவற்றின் போக்கில் நம்மை வழி நடத்தும். வார்த்தை நம்மைப் பள்ளத்தில் தள்ளும். பார்த்துப் பயன்படுத்தினால் இமயத்தில் ஏற்றும். வாழ்வின் உயர்வும் தாழ்வும், மனிதர்களின் உறவும் பிரிவும் வார்த்தைகளால் தான் வரையறுக்கப்படுகின்றன.

குரு ஒருவர் சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். அவரை இடைமறித்த சீடன் ஒருவன், “கடவுள்... கடவுள் என்று சொன்னால் அந்த வார்த்தைகள் என்னைப் புனிதப்படுத்துமா? பாவம்... பாவம் என்று சொன்னால் அது என்னைப் பாவியாக்குமா? என்ன அபத்தமான அறிவுரை இதுД என்றான்.

உடனே குரு, “முட்டாளே, உட்கார்Д என்று உரத்துக் குரல் கொடுத்தார். சீடனுக்குச் சினம் பொங்கியது. குருவென்றும் கருதாமல் வன்மையாக வசை பாடினான் சீடன்.

உடனே, கோபத்தின் பிடியிலிருந்து விடுபட்டு அமைதியானவர்போல் பாவனை செய்த குரு, “மன்னித்துவிடு சீடனே. உன் மனதைப் புண்படுத்தியதற்கு வருந்துகிறேன். நீ என்னை மன்னித்தால்தான் என் நெஞ்சுக்கு நிம்மதிД என்று உடைந்த குரலில் சொன்னார். அந்தக் கணமே சீடன் சினம் தணிந்து, தனது தவறை மன்னிக்கும்படி பணிவுடன் வேண்டி நின்றான்.

நேரம் கடந்தது. குரு மௌனத்தைக் கலைத்தார். “சீடனே, உனது கேள்விக்கு நீயே விடையானாய். முதலில் நான் பயன்படுத்திய வார்த்தைதான் உன்னை நிலை இழக்கச் செய்தது. பின்னர் நான் சொன்ன சொற்களே உன்னைச் சமாதானப்படுத்தின. ஆக, நமது நடத்தையை வார்த்தைகயே நிர்ணயிக்கின்றன என்பதை இனியாவது நம்பு” என்றார் குரு. இதைச் சீடன் அங்கீகரித்து தலையசைத்தான்.

 
Thanks to FB  Thannambikkai