பழங்கதைகளைக் கூறும் மல்நாட் வீடுகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:41 | Best Blogger Tips

கர்நாடகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது மல்நாட். இங்குள்ள வீடுகளில் ஒரு சில நாட்கள் வாழ்ந்து விட்டு வந்தாலே போதும் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைத்து விடும்.

கேரளத்திற்கு வயநாடு என்பதுபோல் கர்நாடகத்திற்கு மல்நாட். வாழ்க்கையில் அன்றாடம் ஏற்படும் அனைத்து பிரச்னைகளையும் மறந்து மனதுக்கும், உடலுக்கும் அமைதி தர வேண்டுமானால் மல்நாடிற்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

அடர்ந்த காடுகள், பெருந்தோட்டங்கள், மலைகள், சலசலக்கும் நீரோடை, அருவிகள் என சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை எல்லா வகைகளிலும் ஈர்க்கும் பகுதிதான் மல்நாட். புகைப்பட விரும்பிகளுக்கு மல்நாட் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

மல்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது திரிதஹல்லி. துங்கா நதிக் கரையில் அமைந்துள்ளது இந்த திரிதஹல்லி. திரிதஹல்லி பகுதியைச் சுற்றிலும் ஜோக் அருவி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

திரிதஹல்லி தோன்றியதற்கு ஒரு சுவாரசியமான வரலாற்றுக் காரணம் கூறப்படுகிறது. பருஷர்மா எனும் முனிவர் ஒருவர் தந்தையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு தன் தாயின் தலையை வெட்டி எறிந்துவிடுகிறார். பின்பு அவர் வெட்ட பயன்படுத்திய கோடரியை ஆற்று நீரில் கழுவினார். ஆனால் அந்த ரத்தக்கறை மறையவில்லை. பல்வேறு ஆறுகளில் கழுவியும் அந்தக் கறை மறைவதாகத் தெரியவில்லை. இறுதியில் துங்கா நதியில் கழுவினார்; கறை நீங்கியது. எனவே அந்த இடம் ராம தீர்த்தா என்று அழைக்கப்பட்டது; இறுதியில் திரிதஹல்லி என்று பெயர் மாற்றம் அடைந்தது. முனிவர் கோடரியைக் கழுவின இடத்தில் ராம மண்டபம் கட்டப்பட்டது. இந்த நதியில் நீராடினால் எப்பேர்ப்பட்ட பாவமும் கழுவப்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

மல்நாடின் வீடுகள் கட்டடக் கலைக்கு பெயர் பெற்றது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் இன்றளவும் கட்டடக் கலைக்கு சான்று பகர்கின்றன. வீடுகளின் அச்சாணியாக விளங்கும் தூண்கள் வைக்கோலைக் கொண்டும், மண் பூச்சுகளாலும் உருவாக்கப்பட்டுள்ளன. கூரைகளை உருவாக்குவதிலும் வைக்கோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வீட்டுக் கூரைகளில் ஓடுகள் வேயப்பட்டுள்ளன.

வீட்டுத் தூண்களில் இருக்கும் கலை நயம் பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைக்கும். விட்டங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மரங்களின் அளவு பார்ப்பவரை பயமுறுத்தும். காட்டுப் பலா மரங்கள் அன்றைய காலகட்டத்தில் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவு ஒருவர் தலையில் கூடையுடன் நுழையும் அளவுக்கு நீள அகலம் உள்ளதாக அமைத்திருக்கிறார்கள். வீட்டின் பின்புறமாக கூடையோடு வருபவர்கள் வேளாண்மை நிலத்தில் இருந்துதான் வருவார்கள். அவர்கள் தலையில் வைத்திருக்கும் கூடையோடு எளிதாக வீட்டுக்குள் நுழையும் வகையில் நிலைக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீடுகளில் உள்ள ஜன்னல்கள் தாழ்ந்து அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு காரணம் உண்டு. படுத்து உறங்குபவர்கள் அதே நிலையில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பதற்கும், ஜன்னல் வழியாக வரும் காற்றை அனுபவிப்பதற்கும் ஏற்றவிதமாக தாழ்வாகவே அமைக்கப்பட்டுள்ளன.

சாமியறை, சமையல் அறை, குளியல்அறை, கழிப்பிடம், படுக்கையறை என ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியில் கட்டப்பட்டு இருந்தாலும் இவை அனைத்தும் ஒரே வீட்டின் அறைகள்தான் என்பதை அந்தக் கட்டடக் கலை பறைசாற்றுகிறது.

மல்நாடின் பாரம்பரிய வீடுகளைப் பராமரிக்க பெரும் அளவில் செலவு பிடிக்கிறது. எனவே செட்டிநாட்டில் உள்ள சில வீடுகளைப் போன்று சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வாடகைக்கு விடுகிறார்கள். சுமார் ரு.1,500 செலவில் மல்நாட் வீடுகளில் தங்கலாம். தங்குவது தவிர மல்நாடின் பாரம்பரிய உணவு வகையும் 3 வேளைக்கு வழங்கப்படும். வெளிநாட்டினர் உட்பட பல்வேறு சுற்றுலாப் பயணிகள் இந்த வீடுகளில் தங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒரு முக்கியச் செய்தியும் உண்டு. பெரிய பெரிய தூண்கள், முற்றங்கள், கூடங்கள், நீண்டு அகன்ற திண்ணைகள், வெந்நீர் அறை, சமையல் அறை, கொல்லைப் புறவாயில் உள்ள வீடுகள் வேண்டுமென்றால், சினிமாக்காரர்கள் இங்குதான் வருகிறார்கள். அதே போன்று நீண்ட தெருவில் இருபுறமும் அழகான பழங்கால வீடுகள் வேண்டுமானால் இங்கு கிடைக்கின்றன.

சுற்றுப் பயணம் முடிந்து நம் இருப்பிடம் திரும்பினாலும் மல்நாட்டின் வீடுகளும், இயற்கைக் காட்சிகளும் கண்களை விட்டு அகல மறுக்கின்றன.
 
 


Thanks to FB  Thannambikkai