உண்மையான "கடவுள் துகள்' எது?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:07 PM | Best Blogger Tips
சில மாதங்களுக்கு முன் ஐரோப்பியத் துகள் முடுக்கி ஆய்வகத்தில் "கடவுள் துகள்' எனப்படும் "ஹிக்ஸ் போசான்' என்ற துகளை அடையாளம் கண்டுவிட்டதாகப் பரபரப்புச் செய்திகள் வெளியாயின.

அதற்கும் கடவுளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதைப்பற்றி ஒரு நூலை எழுதியவர், அதன் மர்ம நடத்தைகளால் வெறுப்படைந்து அந்த நூலுக்குக் "கடவுள் சபித்த துகள்' என்றுதான் பெயரிட்டார்.

ஆனால், அந்த நூலைப் பதிப்பித்தவர் "கடவுள் துகள்' என்று பெயரைத் திருத்திவிட்டார். கடவுளுக்கும் அந்தத் துகளுக்கும் "ஸ்நானப்ராப்தி' கூடக் கிடையாது.

ஆனாலும் கடவுளுடன் ஒப்பிடக்கூடிய ஒரு துகள் இருப்பதாகச் சொல்லலாம். அதன் பெயர் "கரும்பொருள்'. கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்கிற வர்ணனை அதற்கு மிகவும் பொருந்தும்.

அது இருப்பதாகத் தத்துவார்த்தமாக முடிவு செய்திருக்கிற விஞ்ஞானிகளால் அதன் பண்புகளைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு இன்னின்ன பண்புகள் உள்ளதாக ஊகிக்கிறவர்களால் அது எங்கே, எப்படி, ஏன் இருக்கிறது என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.

கடவுளைக் கரிய மால் என அழைக்கிறோம். (மால் என்பதற்கு இந்தியில் பொருள் என்று அர்த்தம்!). எங்கும் நிறை பரப்பிரம்மம் ஆன கடவுளைப் போலவே இந்தக் கரிய மாலும் நாமிருக்கும் பிரபஞ்சம் முழுவதிலும் ஒரு சீராக எல்லாத் திசைகளிலும் ஒரே விதமான அடர்த்தியுடன் பரவியிருக்கிறதாக நம்புகிறார்கள்.

காத்தல் பணியாற்றும் கடவுளைப்போல அது நமது பிரபஞ்சத்தைக் கட்டுக் குலையாமல், கட்டமைப்பு மாறாமல் பாதுகாக்கிறது என்றும் சொல்லுகிறார்கள். பிரபஞ்சத்தைப் படைத்ததிலும் அழிக்கப் போவதிலும்கூட அதற்குப் பொறுப்பிருக்கலாம்.

திடீரென்று இந்தக் கரும்பொருளின் மேல் விஞ்ஞானிகளுக்கு அக்கறை பிறந்ததற்குக் காரணம் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிற சர்வதேச ஆய்வு நிலையம் அனுப்பிய தகவல்களும் தரவுகளும்தான்.

2011 மே மாதம் முதல் 2012 ஜூன் மாதம் வரையான காலகட்டத்தில் 25 பில்லியன் காஸ்மிக் கதிர்களை அதிலுள்ள "ஆல்பா காந்த நிறமாலைமானி' என்ற அதி நவீனமான கருவி பதிவு செய்தது. அவற்றில் 6.8 மில்லியன் துகள்கள் எலக்ட்ரான்களும் பாசிட்ரான்களுமாகும்.

"எலக்ட்ரான்கள்' எதிர்மின்னுள்ளவை. அதே அளவில் நேர்மின்னுள்ளவை "பாசிட்ரான்கள்'. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட துகள்களில் 4 லட்சத்துக்கு மேற்பட்ட "பாசிட்ரான்கள்' இருந்தது தான் விஞ்ஞானிகளை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.

ஏனெனில் கடந்த காலத்தில் ஒருபோதும் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் "பாசிட்ரான்கள்' பதிவானதில்லை.

கரும்பொருள் துகள்கள் ஒன்றையொன்று மோதி அழித்துக்கொண்டதால் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் "பாசிட்ரான்கள்' தோன்றியிருக்கும் என்று ஆய்வர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.

அந்தப் பாசிட்ரான்களின் ஆற்றல் வரம்புகளிலிருந்து கரும்பொருள் துகள்களின் நிறைகளையும் ஆற்றல் நெடுக்கங்களையும் கணக்கிடும் முயற்சியில் அவர்கள் முனைந்திருக்கிறார்கள்.

அது சரி. இந்தக் கரும்பொருள் என்பது என்ன? இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்து ""அடேயப்பா, எவ்வளவு நட்சத்திரங்கள்!'' என்று வியக்கிறோம்.

வெறுங்கண்ணால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் விண்மீன்கள் வரை பார்க்க முடியும். அதிநவீனக் கருவிகள் மூலம் பல்லாயிரம் கோடி விண்மீன்களையும் ஒளிவீசும் விண்பொருள்களையும் பதிவு செய்ய முடியும். அவற்றில் பெரும்பாலானவை பல கோடி கோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருப்பவை.

பிரபஞ்சம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்குப் பிரும்மாண்டமானது. அதிலுள்ள பொருள்களில் 10 முதல் ஒரு சதவீதம்வரைதான் ஒளியையோ வேறு விதமான கதிர்களையோ வெளியிட்டுத் தமது இருப்பை வெளிக்காட்டிக் கொள்கின்றன.

மீதமுள்ள 90 - 99 சதவீதப் பொருள்கள் எந்தவிதமான கதிர்களையும் வீசாமல் கம்மென்றிருக்கின்றன. அவற்றைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனால், அவை பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. அவைதான் "கரும்பொருள்' (டார்க் மேட்டர்) என அழைக்கப்படுகின்றன.

விஞ்ஞானிகள் பூமியில் பல வகையான பிரும்மாண்டமான துகள் முடுக்கிக் கருவிகளைப் பயன்படுத்திப் பல நூதனமான துகள்களை உருவாக்கி அவற்றின் பண்புகளை ஆய்வு செய்தார்கள். எனினும் அவற்றில் எதுவும் கரும்பொருளாக இருக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகத் தோன்றவில்லை.

பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி விண்வெளியில் உலா வருமாறு அனுப்பப்பட்டிருக்கிற விண்ணாய்வு நிலையங்களும் "ஹப்பிள்' போன்ற ஒளியியல் தொலைநோக்கிகளும், கீழ்ச்சிவப்பு மற்றும் புற ஊதா, "எக்ஸ்' கதிர் போன்ற கதிர்களைப் பதிவு செய்யும் தொலைநோக்கிகளும் கரும் பொருளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

கண்ணுக்குப் புலனாகும் விண்பொருள்களின் சில விசித்திரமான நடத்தைகள் காரணமாகவே அவற்றைச் சுற்றிலும் ஏதோ வகையான, கருவிகளுக்குப் புலப்படாத பொருள்களிருக்கக்கூடும் என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.

எடுத்துக்காட்டாக "காலக்சிகள்' எனப்படும் உடுமண்டலங்கள் அதிவேகமாகச் சுழலுகின்றன. அவற்றிலிருக்கும் விண்மீன்களின் நிறையைக் கணக்கிட்டுப் பார்க்கிறபோது உடுமண்டலங்களில் உருவாகிற மைய விலக்கு விசைகளைச் சமாளிக்கும் அளவுக்குப் போதுமானதாக அது இல்லையென்று தெரிகிறது.

அந்த உடுமண்டலங்கள் சிதைந்து சிதறியோடாமல் இருக்கத் தேவையான அளவு நிறையைக் கண்ணுக்குத் தெரியும் விண்மீன்களோடு கண்ணுக்குத் தெரியாத பொருள்களும் பங்களிப்பதாகக் கற்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றால் உருவாகும் நிறையீர்ப்பு விசைதான் உடுமண்டலங்கள் உருவழியாமல் பாதுகாக்கிறது.

அதேபோல உடுமண்டலக் கொத்துகளிலும் கண்ணுக்குத் தெரிகிற பொருள்களின் நிறையைவிடப் பல மடங்கு அதிக நிறையிருந்தால் மட்டுமே அவை கொத்துகளாக நீடித்திருக்க முடியுமென்ற நிலைமையுள்ளது. அந்தக் கூடுதலான நிறையைக் கரும்பொருள்தான் வழங்குவதாயிருக்க வேண்டும்.

முழுப் பிரபஞ்சத்தையே எடுத்துக்கொண்டால் அதன் அடர்த்திதான் அதன் வடிவத்தை நிர்ணயிக்கிறது. பிரபஞ்சம் கிட்டத்தட்ட தட்டையான தட்டு வடிவத்தில் இருப்பதாக இன்று வரை கண்டறியப்பட்ட தகவல்களும் தரவுகளும் தெரிவிக்கின்றன.

ஆனால், பிரபஞ்சத்தில் புலனாகும் பொருள்களின் நிறைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட அடர்த்தி பிரபஞ்சத்தைத் தட்டையாக வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. ஆகவே பிரபஞ்சம் முழுவதிலுமே அதன் தட்டைத் தன்மையைப் பராமரிக்கிற அளவுக்கு நிறையுள்ள கரும் பொருள் பரவியிருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.

இவ்வாறு பிரபஞ்சத்தையே ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்த கரும் பொருள்களுக்குச் சில இலக்கணங்களை விண்மீனியல் விஞ்ஞானிகள் வரையறுத்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தின் கட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பைப் பராமரிக்க உதவுகிற அளவுக்கு அவை நிறைமிக்கவையாக இருக்க வேண்டும்.

அவை மற்றவகைத் துகள்களுடன் வேதி வினைகளோ, இயற்பியல் வினைகளோ செய்து இணையவோ உடையவோ கூடாது. ஆனாலும் அவை தமக்குள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு எலக்ட்ரான், பாசிட்ரான் ஆகிய துகள்களாக உரு மாறலாம். ஆல்பா காந்த நிற மாலை மானி பதிவு செய்த உபரி பாசிட்ரான்கள் கரும்பொருள் துகள்களின் மோதல் காரணமாக உருவாகியிருக்கலாமெனக் கருதுகிற விஞ்ஞானிகள் கரும்பொருள் என்ற கருத்து மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாக உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

அடுத்து அந்தத் துகள்களின் ஆக்கக் கூறுகள் யாவை என்று கண்டறிய முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலான அறிவியலார்கள் கரும்பொருள் நுண்ணிய துகள்களாகப் பரவியுள்ளதாகக் கருதுகின்ற போதிலும் ஒரு சிலர் அவை சாதாரணமான அணுக்கூறுகளாலானவை எனவும் அவை வியாழனுக்குச் சமமான பருமனில், பெரும் செறிவும், நிறையும் கொண்ட இறுகிய பொருள்கள் எனவும் கருதுகிறார்கள்.

அவை பல கோடிக்கணக்கில் உடுமண்டலங்களின் வெளி விளிம்புகளில் நிலை கொண்டிருக்கலாம். அவற்றைக் கண்ணாலோ கருவிகளாலோ பார்க்க முடியாது. அவற்றின் நிறையீர்ப்புப் புலம் மகத்தான வலுக்கொண்டதாயிருக்கும். அவற்றுக்கு "மாச்சோ' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

மாச்சோக்களைக் கண்டுபிடிக்க முயன்று வரும் பெர்க்லி பல்கலைக்கழக ஆய்வர்கள் அவற்றுக்குப் பின்னாலுள்ள விண்மீன்களிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் மாச்சோக்களின் நிறையீர்ப்புப் புலத்தால் வளைக்கப்படும் எனவும் அந்தப்புலம் அந்த ஒளிக்கற்றைகளை ஒரு குவிலென்சைப் போலக் குவித்துச் சிறிது நேரம் அந்த விண்மீன்கள் சற்றே கூடுதலான பொலிவுடன் தோன்றச் செய்யும் எனவும் கருதுகிறார்கள்.

இந்தக் கருத்துகளைச் சரிபார்க்க சிலியிலும் ஆஸ்திரேலியாவிலும் சேர்ந்தாற்போல 30 முதல் 40 லட்சம் வரையான விண்மீன்களைப் பதிவுசெய்யவல்ல தொலைநோக்கிகள் நிறுவப்பட்டு அந்த விண்மீன்களின் பொலிவுகளில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா எனக் கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவ்வாறான விளைவுகள் ஏதும் புலப்படவில்லை.

கடவுளைப் போலவே கருந்துகள்களையும் மனக்கண்ணால் மட்டுமே தரிசிக்க முடியும் போலிருக்கிறது!


 
 


Thanks to FB  Thannambikkai