மௌனம் ஆயுதம்....!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:01 | Best Blogger Tips
ஒரு பெரிய ஜென் துறவி. பார்ப்பதற்கு நோஞ்சான் மாதிரி இருப்பார். ஆனால் மல்யுத்தத்தில் கை தேர்ந்தவர்.

அதே ஊரில் இன்னொரு மல்யுத்த வீரரும் இருந்தார். அவர் பெரிய கோபக்காரர்.

யார் மேலாவது ஆத்திரம் வந்தால் அப்படியே தூக்கி வீசிவிடுவார். தினந்தோறும் யாரிடமாவது வம்புச் சண்டை போடாமல் அவருக்குத் தூக்கமே வராது.
இந்தக் கோபக்காரருக்கு, நம்முடைய ஜென் துறவியைப் பார்த்துப் பொறாமை. ‘அந்த ஆள்கிட்டே என்ன இருக்கு? எல்லோரும் அவர் கால்ல போய் விழறீங்களேÐ’ என்று ஆதங்கப்பட்டார்.

அவர் எவ்வளவுதான் புலம்பினாலும், மக்கள் கேட்கவில்லை. துறவியைப் பார்க்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதைப்பார்த்துக் கடுப்பான கோபக்காரர், துறவி வீட்டு வாசலில் போய் நின்றார். ‘நீ தைரியமான ஆம்பிளையா இருந்தா வெளியே வா. என்னோட சண்டை போடுÐ’ என்று தொடை தட்டினார்.

துறவி மெல்லப் புன்னகை செய்தார். ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
அவரோடு இருந்த சிஷ்யர்களுக்கெல்லாம் ஆவேசம் பொங்கியது. ‘குருஜி, நீங்க தான் பெரிய மல்யுத்த வீரராச்சே. வெளியே போய் அந்தாளைப் போட்டுத் தள்ளிட்டு வாங்கÐ’ என்று அவரைத் தூண்டினார்கள்.
அப்போதும் துறவி இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவர் பாட்டுக்குத் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் வெளியே கத்திக்கொண்டிருந்த ஆளுக்கு, கத்திக் கத்தித் தொண்டை வற்றிவிட்டது. இனிமேல் சத்தம் போட்டுப் பிரயோஜனம் இல்லை என்று மூட்டையைக் கட்டிவிட்டார்.
இப்போது துறவி பேசினார். அதுவும் மூன்றே வார்த்தைகள். ‘எப்படி என் மல்யுத்தம்?’. 

 


Thanks to FB  Thannambikkai