அறிவு !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:59 PM | Best Blogger Tips
மக்களை மாக்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது எது? சிந்தனை செய்யும் அறிவு; நல்லது, தீயது என்று பிரித்தறியும் பகுத்தறிவு; இதற்குத் தூண்டுகோலாய் இருப்பவை நூல்கள். அன்று முதல் இன்றுவரை இதற்கு மனிதகுலம் தலைவணங்குகிறது. முடியரசாயினும், குடியரசாயினும் ஆளுவோர் இவற்றைக் கண்டு அஞ்சுகின்றனர்.

"சூரியனே மறையாத குடியேற்ற நாடுகளை' இழப்பதற்குக் கவலைப்படாத மாபெரும் இங்கிலாந்து பேரரசு, மாமேதை ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களை இழந்திடச் சம்மதிக்காத நிலை கூறுவது என்ன? சாகாத இலக்கியங்கள் ஒரு நாட்டின் மதிப்புமிகு கருவூலங்கள்; செல்வங்கள் ஒருநாள் அழிந்து போகும்; இவை அழியாதவை.

அந்த ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளே (ஏப்ரல், 23) உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1995-ஆம் ஆண்டு ஐ.நா. அவையின் கல்வி, கலாசார நிறுவனம், உலக மக்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக இந்த நாளைக் கொண்டாடும்படி அறிவுறுத்தியது.

1445-ஆம் ஆண்டில் ஜெர்மனியில் புத்தகம் அச்சிடும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை கூடன்பர்க், உலகத்தில் சிறந்த 10 சாதனையாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.

புத்தகங்கள் உருவாக புதிய முறையைக் கண்டுபிடித்த ஜெர்மனியில்தான் ஏராளமான புத்தகங்களும் அழிக்கப்பட்ட சோகங்களும் அரங்கேறின. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது ஜெர்மனி புத்தக எதிர்ப்பிலும், எரிப்பிலும் முனைந்து நின்றது. நாஜிகளின் கொள்கைகளுக்கு எதிரான புத்தகங்கள் பொது இடங்களில் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. ஹிட்லர் காலத்தில் இப்படி எரிப்பது "தேசியத் திருவிழாவாக'க் கொண்டாடப்பட்டன எனலாம்.

உலகில் தலைசிறந்த நாகரிகமாகப் போற்றப்படும் கிரேக்க நாகரிகம் சிந்தனையின் பிறப்பிடமாக இருந்தது. கிரீஸ் நாட்டின் முதல் நூலகம் பிஸிஸ்டிராடஸ் என்ற கிரேக்கரிடம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் 28 நூலகங்கள் இருந்தனவாம்.

நினிவா என்ற இடத்தில் இருந்த ஆசிய நாட்டு நூலகத்தில் 10 ஆயிரம் களிமண் பட்டயங்களின் வடிவில் நூல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. உலகம் போற்றும் அரசியல் தத்துவமேதை பிளேட்டோ ஏராளமான நூல்களைச் சேமித்து வைத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. மற்றோர் அரசியல் மேதை அரிஸ்டாடில் தாம் உருவாக்கி வைத்திருந்த நூலகத்தை தம் சீடருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இந்தியாவில் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் நாகார்ஜுனன் என்ற அரசன் உருவாக்கிய நூலகம் "நாகார்ஜுன வித்யா பீடம்' என்பதாகும். இப்போதைய ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இருந்திருக்கிறது. கி.பி. 399 முதல் 414 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பாஹியான் என்னும் சீனப் பயணி தனது நூலில் நாகார்ஜுன வித்யா பீடம் பற்றியும், அன்றைய இந்தியாவில் பல புத்த மடாலயங்களில் நூலகங்கள் செயல்பட்டு வந்தது பற்றியும் எழுதியுள்ளார்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் 68,700 பனை ஓலைகளில் எழுதப்பட்ட நூல்களும், 36,058 (பாபிரஸ்) புல் சுருள்களில் எழுதப்பட்ட நூல்களும் இருந்தனவாம். அவற்றுள் 3,100 பனை ஓலைகள் மட்டும் நமக்குக் கிடைத்துள்ளன.

சமண சமயம் சார்ந்த அரும்பெரும் திருமறைகள் தொகுக்கப்பட்டு, உரைகளும் எழுதப்பட்டன. இத்தகைய தொலை நூல்களைச் சேர்த்து வைத்த இடங்கள் "ஞான பண்டாரங்கள்' எனப்பட்டன. நூலக இயக்கத்திற்குப் பங்காற்றிய மற்றொரு சமயம் புத்த மதமாகும். பௌத்த மத நூலகத்திற்கு "செழுங்கலை நியமம்' என்று பெயர். சைவக் கோயில்களின் ஒரு பகுதியில் "சரசுவதி பண்டாரம்' என்ற பெயரில் நூலகங்கள் இருந்தனவாம்.

தமிழ்நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகங்கள், 2,500-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள், 31 மாவட்ட மைய நூலகங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 12,000 கிராமப்புற உள் நூலகங்களும் அரசினால் உருவாக்கப்பட்டுள்ளன.

வளமான நிலமே செழிப்பாகப் பயிர்கள் வளர உதவும். நலமான நூலகத் துறையே எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் வளரத் துணை செய்யும். புதிய சிந்தனையும், புதிய நூல்களும் மலர்ந்து மணம் வீச உதவும்.

ஆயிரம் மலர்கள் மலரட்டும்; ஆயிரம் கருத்துகள் வளரட்டும்; அப்போதுதான் வீட்டுக்கொரு நூலகம் வேண்டும் என்ற கோரிக்கையும் வெற்றி பெறும்.

 


Thanks to FB  Thannambikkai