நான் மட்டும், ஏன் இப்படி !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:50 PM | Best Blogger Tips
By நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்

கிருஷ்ணா என்றொரு அற்புதமான மனிதர், எழுத்தாளர், இளைஞர், வித்தியாசமானவர். அண்மையில் "ஒய் மீ?' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம் ஆளுநர் கே. ரோசய்யாவால் வெளியிடப்பட்டது. "சரி.... இது என்ன புத்தக விமர்சனமா?' என்ற கேள்வி உங்கள் கண்களில் எழுவது தெரிகிறது. விமர்சனம் இல்லை. வித்தியாசம். கிருஷ்ணாவுக்கு "ஆட்டிசம்'.

"
ஆட்டிசம்' என்ற சொல்லுக்கு "மன இறுக்கம்' என்று தமிழாக்கியுள்ளார்கள். "மதியிறுக்கம்' என்றும் கூறுகிறார்கள்.

ஆட்டிசத்தின் பாதிப்பு ஒருவரைத் தன்னுள்ளே அமிழ்ந்து போகவைக்கும், வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவிடாது, நம் சிரிப்புக்குப் பதில் சிரிப்பு வராது. நம் பார்வைக்கு எதிர்பார்வை இராது, நம் கேள்விக்கு விடை கூற விடாது, திரும்பத் திரும்ப சில செயலைச் செய்யத் தூண்டும், அதீதமான மன இறுக்கம் இருக்கும்.

நமக்கும் வெளி உலகத்துக்கும் இருக்கும் தொடர்பை ஒரு சுவர் தடுத்தால் எப்படி இருக்கும்? அதுபோல என்று சொல்லலாம். புரிதல், உள்வாங்கிக் கொள்ளுதல் நடைபெறும். ஆனால் புரிந்தது என்று வெளி உலகத்திற்குத் தெரியாது.

புரியாமலா இந்தப் புத்தகத்தை கிருஷ்ணா எழுதினார்? உபநிஷத்துகள், தத்துவ நூல்கள் எல்லாவற்றையும் படித்த பின்னர்தான் இந்தப் புத்தகம் வடிவு பெற்றுள்ளது. சுகம் என்பது என்ன, துக்கம் என்ன, மகிழ்ச்சிக்குப் பிறப்பிடம் எது, துயரத்துக்குக் காரணம் எது என்ற ஆழமான தத்துவங்களை எளிதாக விளக்குகிறது.

"
ஆட்டிசம்' என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு என்கிறார்கள். குறை என்பது என்ன? யாருடைய பார்வைக் குறை என்று எடை போடுவது? நாமே ஓர் அழுத்தமான சதுரத்தை வரைகிறோம். அதில் அடைபடாதவர்களை, குறைபாடுடையவர்கள் என்று ஒதுக்குகிறோம்.

இதனால் "ஆட்டிசம்' உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குறைந்தவர்கள், மனநலிவுள்ளவர்கள், "டவுன்'ஸ் சின்ட்ரோம்' உள்ளவர்கள், "செரிப்ரல் பால்ஸி' உள்ளவர்கள் இப்படி எத்தனையோ பேர், செவ்வகங்கள், வட்டங்கள், முக்கோணங்கள் - நம்முடைய சதுரத்துக்குள் பொருந்துவதில்லை. இதனாலேயே வெளி உலகத்தின் பார்வைக்கு வெளியே வாழ்கிறார்கள்.

வட்டங்களின் பார்வையால் பார்த்தால், சதுரம் வித்தியாசமே. ""உருண்டையாக இல்லாமல் நாலு மூலைகள் கொண்ட குறைபாடு உடைய வடிவம்'' என்று வட்டம் சொல்லலாமே! அப்பொழுது சதுரங்கள் குறைபாடு உடையனவா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்தது. உயர் நீதிமன்றத்தின் நூலகத்தின் நூலகர் பதவிக்குப் பலர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் ஒருவருக்கு ஒரு கால் சற்று வித்தியாசமாக இருக்கும், நடப்பது எளிதல்ல. அவரை "ஊனம்' என்று சொல்லி தேர்வுக்குழு தள்ளிவிட்டது.

அவர் "பேராண்மை மனு' தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் கூறியது என்னவென்றால், "அவருக்கு ஊனம் என்று ஒதுக்கிய நம் மனங்களில்தான் ஊனம்; அவர் முற்றிலும் தகுதியுள்ளவர்' என்பதுதான். அவர் வெற்றி பெற்றார். இது வட்டங்களின் பிழையன்று, முக்கோணங்களின் பிழையன்று, செவ்வகங்களின் பிழையன்று, இது நாமாகிய "சதுரங்களின்' பிழையே.

மனிதநேயத்தின் அடையாளமே அனைத்து வித்தியாசங்களையும் உள்ளடக்கி சமமாகப் பார்ப்பதுதான். இதுவே ஜனநாயகத்தின் அடையாளமும் ஆகும். ஜனநாயகத்தில் அனைவரும் சமம், அனைவருக்குமானது ஜனநாயகம்.

ஜாவேத் அபிதி என்பவர் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக உழைப்பவர். எங்கும் சக்கர நாற்காலியில்தான் செல்வார். அவர் கூறுவார் ""நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் நாட்டு மக்கள் அனைவரின் திறமையும், அறிவுத்திறனும் ஒன்றாகத் திரண்டு செயல்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளைச் செயலற்ற கற்களாக இருக்க விட்டோமானால் நம் நாடு அந்தப் பயனில்லாத பாரங்களையும் அல்லவா இழுக்க வேண்டும்?'' என்று.

மாறாக அவர்கள் ஒவ்வொருவரையும் சுதந்திரமாகப் பிறரைச் சாராது செயல்படும் மனிதர்களாக உருவாக்க நம் அரசமைப்புகளும் சமூகமும் ஒத்துழைக்க வேண்டும்.

அன்று அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், ஆட்டிசமுள்ள பல குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். விஷால் என்ற சிறுவன் "ஆடிஸ்டிக் சாவந்த்' என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் "ஆட்டிசமுடையவர் - அறிவாளியும்கூட'. அதாவது ஒரு குறிப்பிட்ட கலையோ, திறமையோ அவர்களுக்கு எல்லோரையும்விட மிகக்கூடுதலாக இருக்கும்.

விஷாலுடைய தாயார், தன் மகன் எழுதிய புத்தகத்தை என்னிடம் பெருமையுடன் காட்டினார். முத்துமுத்தான கையெழுத்து. படிக்காமலே விஷாலுக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரியுமாம். எட்டு வயதுக்கு அப்பாற்பட்ட விஞ்ஞான அறிவு, ஏன் எண்பது வயதுக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான அறிவு, விஷாலைப் போன்றவர்களைக் குறைபாடு உடையவர்கள் என்று எப்படி அழைக்க முடியும்? ஆனால், அவர்கள் நிச்சயமாக வித்தியாசமானவர்கள்.

ஐஸ்வர்யாவை அங்கு சந்தித்தேன். ஐஸ்வர்யாவுக்கு "ஜிக்சா பசில்கள்' (குறுக்கெழுத்துப் புதிர்கள்) எவ்வளவு கடினமாக இருந்தாலும், அலட்சியமாக பூர்த்தி செய்ய முடியும். யோசிக்கக்கூட வேண்டாமாம், அவள் மூளையில் அந்த சிறுசிறு துண்டுகளை எப்படி இணைத்துப் படத்தை அமைக்க வேண்டும் என்று அப்படியே உதிக்குமாம். ஐஸ்வர்யாவின் பெற்றோர் சொல்கிறார்கள், ""ஐஸ்வர்யாவுக்குக் கடினமான புதிரெல்லாம்... பூ, ஆனால் ஐஸ்வர்யாவே ஒரு புதிர்'' என்று.

"
அய்ஷிஸ் பசில்ஸ்' என்ற இணையதளத்துக்குச் சென்று பாருங்கள். ஐஸ்வர்யாவின் திறமை நம்மை வியக்க வைக்கிறது. இந்தத் திறமைசாலியான, அதீத அறிவுள்ள, அன்பான, அழகான ஐஸ்வர்யாவைச் சுற்றியும் ஆட்டிச சுவர் உள்ளது.

அன்று தன்னுடைய புத்தகத்தின் வெளியீட்டு விழா என்று கிருஷ்ணாவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் ஆட்டிசத்தின் மன இறுக்கத்தின் காரணமாக அமைதியாக உட்கார முடியவில்லை. இருபுறமும் கிருஷ்ணாவின் பெற்றோர் கிருஷ்ணாவைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

விஷாலுடைய தாயார் என்னிடம் சொன்னார் ""அவனைத் தடவிக் கொடுத்தால் மிக அழகாக எழுதுவான்'' என்று. அந்த அன்பான ஸ்பரிசம் ஆட்டிசத்தின் இறுக்கத்தைத் தளரச் செய்து அமைதிப்படுத்தும்போல் தெரிகிறது. பல பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியின்பொழுது தங்களுடைய குழந்தைகளைத் தடவிக் கொடுப்பதைப் பார்த்தேன்.

வந்தவர்கள் எல்லோரும் பளிச்சென்று உடையணிந்து அழகாக இருந்தார்கள். அவர்கள் சதுரங்களில்லை, உண்மைதான். ஆனால், அவர்களுக்கும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் ஆசை இருக்கும். அது அவர்கள் உரிமையும்கூட. வாழுவது என்பது வெறுமனே மூச்சுவிடுவது மட்டுமல்ல, அது "முழுமையாக வாழ்வது' என்று நமது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன.

நம் அரசியல் சாசனத்தின் "21-ஆவது பிரிவு - வாழும் உரிமை' என்பதை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உரிமையைப்பெற அரசு எல்லா உதவியும் செய்ய வேண்டும். அது சமூகத்தின் பொறுப்பும்கூட. ஆனால் இந்த உரிமை சதுரமல்லாதவர்களுக்குக் கிடைக்கப் பல தடைகள் உள்ளன. நம் கண்களில் அவர்கள் புலப்படுவதில்லை, மாறானவர்களை நம்முலகத்தில் இருப்பவர்களாகவே நாம் நினைப்பதில்லை.

அங்கு ஒரு தாயார் என்னிடம் சொன்னார் ""எங்களைப் பற்றியும் எழுதுங்கள்'' என்று. இதோ எழுதுகிறேன். இந்த வித்தியாசமான குழந்தைகளின் பெற்றோருடைய வாழ்க்கையும் வித்தியாசமானதுதான்; ""எல்லோரையும்போல'' என்ற சொற்கள் அவர்கள் அகராதியில் இல்லை.

ஆட்டிசம் உள்ள 15 வயது பிள்ளையின் தந்தை சொன்னார். ""ஒரு நாள் என் குழந்தை எனக்கு ஜுரம் என்றான். அன்று நாங்களிருவரும் அப்படி மகிழ்ந்தோம்'' என்று, நான் தடுமாறிப் போனேன். ஜுரம் என்று குழந்தை சொன்னால் சந்தோஷமா? இல்லை, அதற்கில்லை. வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள விடாத மன இறுக்கச் சுவரில் ஒரு சிறு விரிசல், ஒரு துளி வெளிச்சம். அந்த வெளிச்சம் தெரிந்ததால் கூத்தாடுகிறார்கள் தந்தையும் தாயும்.

ஆட்டிசத்தின் தாக்கம் 1-2 வயதில்தான் தெரியும் என்கிறார்கள். அதன் பின் அந்தப் பெற்றோர்களின் வாழ்க்கை வேறு தடத்தில், வேறு தளத்தில் செல்லும். அவர்களும் கிருஷ்ணா கேட்ட கேள்வியை இறைவனிடம் கேட்பார்கள். "ஒய் மீ' என்று. ""எனக்கு ஏன் இப்படி...?'' பிறகு நம்மால் ஒரு வித்தியாசமான குழந்தையை வளர்க்க முடியுமா? என்ற சந்தேகத்துடன் அந்தப் பயணம் தொடங்கும். எங்களால் முடியும் என்கிற மனத்துணிவுடன் எல்லாம் என் குழந்தைதான் என்ற பாதையில் உறுதியுடன் நடக்கிறார்கள்.

அயராது முயற்சி செய்த பின் கிருஷ்ணா ஒரு நாள், "ஆப்பிள்' என்று சொன்னது ஒரு சாதனை மைல்கல். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்தும் கிருஷ்ணாவுக்கு தாயார் படித்துக் காண்பித்தார்கள், கிருஷ்ணாவிடம் எதிரொலி எதிர்பார்க்காமல். பிரமிக்க வைக்கிறார்கள் அங்கு வந்த பெற்றோர்கள். அவர்களிடம் நான் கண்டது அசாத்திய உறுதி, உற்சாகம், மனோதிடம், ஆக்கப்பூர்வமான வீர்யம்.

கிருஷ்ணாவின் தாயார் "ஃப்ரம் எ மதர்ஸ் ஹார்ட்' என்ற புத்தகத்தில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தன்னைப் போன்ற பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்று.

இந்தத் தளராத முயற்சி எல்லோருக்கும் வருமா என்று எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தபோது மூச்சை அடைத்தது. ஆனால், அன்று நான் சந்தித்த பெற்றோர் எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள்.

ஆண்ட்ரூ சாலமன் என்பவர் "ஃபார் ஃபிரம் த ட்ரீ' என்ற புத்தகத்தில் வித்தியாசமான குழந்தைகளைப் பற்றியும் பெற்றோரைப் பற்றியும் எழுதியுள்ளார். அவர் சொல்கிறார், இந்த வித்தியாசம் நிகழும் சில குடும்பங்களில் நெருக்கமான அன்பால் பிணைகின்றனர். சிலர் தம்மைப் போன்ற அனுபவமுடையவர்களுடன் சேர்ந்து ஒருவரையொருவர் தாங்குகிறார்கள். சிலர் தாங்களே "ஆர்வலர்கள்' ஆக மாறி தன்னார்வ அமைப்புகள் நடத்துகிறார்கள். உலகத்தோருக்கு தங்கள் நிலைமை, தங்கள் உரிமைகளை, எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ள உழைக்கிறார்கள், போரிடுகிறார்கள். புரிதல் என்பது முதல்படி, பிறகு மற்றதெல்லாம் வரும்.

குவாங்க் என்று ஒரு மலேசியப் படம். 14 நிமிடம்தான். இணையதளத்தில் பார்க்கலாம். குவாங்க் என்பவருக்கு ஆட்டிசம். அவருடைய சகோதரர்தான் படத்தின் இயக்குநர். அவர் இப்படத்தை தன் சகோதரருக்கும் உலகில் உள்ள எல்லா ஆட்டிசம் உள்ளவர்களுக்கும் அர்ப்பணம் செய்துள்ளார்.

அந்த இரு சகோதரர்களைப் பற்றிதான் படம். இருவரும் அவரவர்களாகவே நடிக்கிறார்கள். குவாங்கிற்கு ஒலியும் இசையும் உயிர். அவர் செவிகளில் நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களின் அலைவரிசையும் (நாம் ஆறு கட்டை ஐந்து கட்டை என்று சொல்கிறோம் இல்லையா, அது) துல்லியமாகக் கேட்கும். ஒரு கண்ணாடிக் கோப்பையில் தட்டினால் "பி' நோட்டு கேட்க வேண்டும். அந்தக் கோப்பையைத் தேடுகிறார் குவாங்க்.

அண்ணாவோ அரும்பாடுபட்டு ஒரு வேலைக்கு சிபாரிசு செய்து அவரை அங்கு அனுப்புகிறார். போகும் வழியில் ஒரு பெண்மணி ஒரு சாக்குமூட்டையை இழுத்துச்சென்று குப்பையில் போடுகிறார். அந்த மூட்டையில் ஒரு பொருள் அப்படி இழுக்கும்பொழுது "பி' நோட்டை ஒலிக்கிறது. அவ்வளவுதான் நேர்காணல் காற்றோடு போகும். அந்த மூட்டையைத் தோண்டி துழாவி அந்தக் கோப்பையை பொக்கிஷம்போல எடுப்பார். முகத்தில் அப்படி ஒரு பரவசம், 'பி' "பி' என்று கூவிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவார்.

அண்ணாவுக்குக் கோபம் கனல் தெறிக்கும். "அறிவு கெட்டவனே', "தண்டச்சோறு' எல்லாம் பிரவாகமாக வரும். குவாங்கிற்கு ஒன்றுமே கேட்காது. ம் ஹும். தன்னறைக்குச் செல்வார். அப்புறம் வெளிவரும் ஒரு தெய்வீக நாதம். அண்ணாவின் முகம் இளகும். உதடுகள் துடிக்கும். நமக்கும்தான். நம் மனதில் வலியும் உவகையும் சேர்ந்து பொங்கும்.

சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையில்லாமல் தன் கருமமே கண்ணாக இருப்பவரை "ஏகாக்ர' சித்தன் என்கிறோம். அப்பொழுது "ஆட்டிசம்' உள்ளவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களா? மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலையில் உள்ளவர்களா? அப்படியும் ஓர் ஆராய்ச்சிக்குழு கூறுகிறதாம்.

அவ்வளவு தொலைவுக்கு நாம் செல்வானேன்? எல்லா குழந்தைகளுக்கும் என்ன மனித உரிமைகளுண்டோ அது இவர்களுக்கும் வேண்டும். அது கிடைத்தால் போதும். ஐஸ்வர்யா, விஷால், கிருஷ்ணா போன்றோரைப் பார்த்தால் நமக்கு ஒன்று புரிகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அது வெளிவர வேண்டும்.

ஆட்டிசம் உள்ளவர்களும் பள்ளிக்கூடம் செல்ல, வேலைக்குச் செல்ல, பொது இடங்களுக்குச் செல்ல மற்றும் வாழ்க்கை என்னவெல்லாம் நமக்குக் கொடுக்கிறதோ அவை அனைத்தையும் அவர்களும் பெற வேண்டும். பெற்றோருக்கு நமக்குப்பின் என்ற கேள்வி உலுக்கும். அந்தக் கேள்விக்கு சமூகம் விடைபகர வேண்டும்.

இவர்களுக்காக "தேசிய அறக்கட்டளைச் சட்டம்' என்ற சட்டம் உள்ளது. அது நன்றாகச் செயல்பட வேண்டும். அதைப்பற்றி நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலைநாடுகளில் வித்தியாசமான குழந்தைகளுக்குப் பலவிதமான ஆதரவு அமைப்புகள் உள்ளன.

ஆட்டிசத்தின் தாக்கம் ஒரே மாதிரி இல்லை என்று இந்தத் துறையின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது வெவ்வேறு மாதிரி வெளிப்படுகிறது. அதன் தீவிரமும் ஒன்றேபோல இல்லை. சிலருக்கு லேசான தாக்கம் இருக்கும். சிலருக்குக் கூடுதலாக இருக்கும். அவரவர்கள் திறமைக்கேற்ப வசதிகள் மேலைநாடுகளில் உள்ளன.

சிலர் பஸ்ஸில் வேலைக்குச் சென்று வருகிறார்கள். வீட்டில்கூட நிறைய வேலைகள் செய்ய முடியும். அவர்களுக்கு ஒரே சீரான பணிநிரல் முக்கியம். ஒரே சீராக இருக்காவிட்டால் இறுக்கம் கூடும். மேலைநாடுகளிலிருக்கும் வசதிகளைப் பார்க்கும்பொழுது சிறிது சிறிதாகவேனும் நம் நாட்டிலும் அதுபோல வரவேண்டும் என்று தோன்றும்.

ஆட்டிசம் பற்றி எல்லோரும் அறிந்துகொள்ளுவதற்கு அரசும் மருத்துவமனைகளும் சமூக அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோர்கள் காலதாமதமில்லாமல், ஆட்டிசமுள்ள குழந்தைகளுக்கு என்னவெல்லாம் உதவி, உந்துதல் கொடுக்க முடியுமோ அது நடக்கும்.

மருத்துவரீதியாக நான் ஆட்டிசத்தைப் பற்றி எழுதவில்லை. மனிதநேயரீதியாகச் சொல்கிறேன். நம் பார்வைக்குள், "யாவரும் கேளிர்' என்று அனைவரையும் அடைக்க வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சிறு கற்களைச்  சேர்த்து பாலங்களை அமைக்கலாம். வித்தியாசங்களின் பூங்கொத்து தானே ஓர் ஆரோக்கியமான சமுதாயம். அதில் யாரும் ""நான் மட்டும்... ஏன்'' என்று ஏங்கக்கூடாது!

Thanks to FB  Thannambikkai