வாழ்க்கையில் அவிழ்க்க முடியாத சிக்கல்களுக்கெல்லாம் மூல காரணம்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:57 | Best Blogger Tips
ஒன்றை நினைத்து, நினைத்ததை அடைந்து, அடைந்தது கசந்து, கசந்தபின் மறந்து, அடுத்ததை அடைய ஆசைப்படும் மனம்தான் வாழ்க்கையில் அவிழ்க்க முடியாத சிக்கல்களுக்கெல்லாம் மூல காரணம்.

ஒரு நாள் தன் சீடர்கள் முன், கையில் ஒரு துணியுடன் வந்து அமர்ந்தார் புத்தர். எதுவும் பேசாமல் அந்தத் துணியில் ஐந்து முடிச்சுகளைப் போட்டார். பின்பு தலைநிமிர்ந்து சீடர்களைப் பார்த்தார்.

‘முடிச்சுகள் இல்லாமல் முன்பிருந்த துணியும், முடிச்சுகள் உள்ள இப்போதைய துணியும் ஒன்றா? வேறு வேறா?’ என்றார். அவரின் அணுக்க நெருங்கிய சீடர் ஆனந்தர், ‘முன்பிருந்த துணி சுதந்திரமானது. இப்போதுள்ள துணி, சுதந்திரம் இழந்து அடிமையாகிவிட்டது’ என்று பதில் தந்தார்.

உடனே புத்தர், ‘எல்லோரும் இயல்பாக இருக்கும்போது கடவுள்கள் தாம். ஆனால், சிக்கலில் சிக்கி அடிமையாகிறார்கள்’ என்றார். பிறகு ‘இந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.

சாரிபுத்தன் என்ற சீடன், ‘எவ்வாறு முடிச்சுகள் போடப்பட்டன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்க இயலாது. முடிச்சு போடப்பட்ட முறை தெரிந்தால், அவிழ்ப்பது எளிது. நினைவின்றி மனம் போடும் முடிச்சுகள் அவிழ்க்க முடியாதவைÐ’ என்று விளக்கினான்.

‘விழிப்பு உணர்வு இன்றி மனம், ஆசை வலையைப் பின்னும் அதுபோட்ட முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் வாழ்க்கையைச் சிக்கலாக்கும்’ என்றார் புத்தர். நமது வாழ்க்கைச் சிக்கல்களுக்கு, நம் மனதில் தோன்றும் ஆசைகளே அடித்தளமாகிறது.

‘நன்றாக வேயப்படாத கூரை வீட்டில் மழைநீர் புகுவதுபோல், பண்படாத மனதில் ஆசைகள் புகுந்து அலைக்கழிக்கின்றன’ என்கிறது தம்மபதம். ‘யார் விழிப்புற்றவனோ, பொருந்திய மனத்தை உடையவனே, அவனது புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல் வசப்படுகின்றனÐ’ என்று விளக்கம் தருகிறது கடோபநிஷதம்.

 
Thanks to FB  Thannambikkai