கரூர் மாவட்டம்!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:08 PM | Best Blogger Tips

2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.வடக்கில் நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களையும், கிழக்கில் பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் ஈரோடு மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.


கரூர் மாவட்டத்தின் பிற முக்கிய இடங்கள்,

கல்யாண வெங்கடராமசாமி கோயில்:

தென் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடராமசாமி கோயில் தாந்தோணி மலையில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்று. கரூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோயிலுக்குப் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். தெய்வீகம் ததும்பும் ஆலயம்.

பசுபதீஸ்வரர் கோயில்:

புண்ணிய சிவத் தலங்கள் ஏழில் ஒன்று கரூர். இந்தப் பெருமையைப் தேடித்தந்தது பசுபதீஸ்வரர் கோயில். இங்கு சிவபெருமான் ஐந்தடி உயர லிங்க வடிவில் சுற்றுச் சிற்பங்களுடன் பிரும்மாண்டமாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும் ரங்கமாதா சிற்பமும் வேலைப்பாடுகளில் தனித்தன்மை மிக்கவை.

மற்ற கோயில்கள்:

புகளுர் வேலாயுதம்பாளையம் குன்றில் உள்ள கோயிலில் சுப்ரமணியர் எழுந்தருளியுள்ளார். இது கரூருக்கு வடமேற்கில் அமைந்துள்ளது. கரூரின் இதயப் பகுதியில் மாரியம்மன் கோயில் பெரும் புகழ்பெற்றது. இந்த அம்மனுக்கு வருடா வருடம் மே மாதம் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கும்பம் எடுப்பார்கள். இந்த கும்பங்கள் கோயிலில் இருந்து அமராவதி ஆற்றுக்கு எடுத்து செல்லும் வண்ணமயமான காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இறைவனுக்கு கும்பம் எடுப்பது தமிழர்களிடம் ஆதி முதல் தொடர்ந்து வரும் ஆன்மிகச் சிறப்பு.

பேருந்து கட்டுமானத் தொழில்:

ஆயிரம் சொன்னாலும் கரூரை பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரம் என்று சொல்வதற்கு ஈடாகாது. நகருக்கு உள்ளும் சுற்றுப்பகுதிகளிலும் பெரிய மற்றும் சிறியபேருந்து கட்டுமானத் தொழிற்சாலைகள் பரவலாக உள்ளன. இவை தமிழ்நாட்டின் தேவையை நிறைவு செய்வதுடன் பிற மாநிலப் பணிகளையும் மேற்கொள்கின்றன. பேருந்துகளின் கடைசியில் சிறிய பகுதியைப் பார்த்தால் புரியும். அது பிறந்த இடம் கரூராகத்தான் இருக்கும். கரூரையும் பேருந்துகளையும் பார்க்க மறந்து விடாதீர்கள்.

புகளுர் காகிதத் தொழிற்சாலை:

மரக்கூழ் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை நம் நாட்டிலேயே மிகப்பெரியது இதுதான். எண்பதுகளின் தொடக்கத்தில் கரூருக்கு அருகேயுள்ள புகளுரில் தொடங்கப்பட்டது இத்தொழிற்சாலை. கரும்புச் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே தலைமையான இடத்தில் இருக்கிறது. இது 1996 முதல் செயல்படுகிறது. காகிதங்களின் தாயகம்.

இந்நகரத்தில் அனைத்து வாகனங்களுக்குத் தேவையான செயின் தொழிற்சாலையும் உள்ளது.

கரூர் நகருக்கு அருகே சிமெண்ட் தொழிற்சாலையும் உள்ளது. பளிங்குக்கல் நகரம் என்று கூறும் அளவில் தோகை மலையில் கிடைக்கும் வண்ண பளிங்குக் கற்கள் உலகளவில் புகழ்பெற்றுள்ளன.

தமிழக அரசின் கல் குவாரி தொழிற்சாலை மிகப் பிரபலமானது.ஏற்றுமதி தரத்தில் இங்கு கொசுவலை உற்பத்தி செய்யப்படுகின்றன.பாரம்பரியத் தொழிலான ரத்தினக்கல் வியாபாரத்திற்கும் இந்நகரம் பெயர் பெற்றுள்ளது.

ஈஐடி பாரி:

சர்க்கரை உற்பத்தியில் உலகளவில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஈஐடி பாரி நிறுவனம் இதற்கு முன்னோடியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் 1842 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்று மிகப்பெரும் சர்க்கரை ஆலையாக இயங்கி வருகின்றது. தரம் வாய்ந்த உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டு கரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் ஆலை இது.

செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம்

கரூர் மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு தொழிற்சாலை செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன். இந்த சிமெண்ட் ஆலை கரூரில் புரியூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1968 ஆம் ஆண்டு சிமெண்ட் உற்பத்தியை தொடங்கியது. இன்று இந்நிறுவனம் வளர்ச்சியடைந்த சிமெண்ட் உற்பத்தி மட்டுமல்லாது உருக்குத் தொழிற்சாலை பின்னலாடை தொழில் மற்றும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று வருடத்திற்கு 8500 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டித் தருகிறது.