தேசத்தின் தெய்வம் - ராமபிரான்!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:33 | Best Blogger Tips


ராமபிரான், நமது தேசத்தின் கடவுள். இந்நாட்டில் அன்றாடம் ஆங்காங்கே ராம நாம கோஷமும், ராம பூஜையும் தொடர்ந்து நடந்த வண்ணமுள்ளன. இந்து மதத்தின் அடிப்படை தர்மங்களை தானும் கடைபிடித்து, அகில உலகத்துக்கும் வழிக

ராமபிரான், நமது தேசத்தின் கடவுள். இந்நாட்டில் அன்றாடம் ஆங்காங்கே ராம நாம கோஷமும், ராம பூஜையும் தொடர்ந்து நடந்த வண்ணமுள்ளன. இந்து மதத்தின் அடிப்படை தர்மங்களை தானும் கடைபிடித்து, அகில உலகத்துக்கும் வழிகாட்டியாக என்றென்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் ராமபிரான்.

முக்கியமாக ஸ்ரீ ராம நவமி விழாக்காலத்தில் ஸ்ரீராமசந்திர மூர்த்தியைப் பலவிதமாக வழிபடுகின்றனர். ஸ்ரீமத் ராமாயண பாராயணம், பூஜை, அர்ச்சனை, ஹரிகதா காலஷேபங்கள், சங்கீதக் கச்சேரிகள் முதலியவைகள் அவற்றுள் அடக்கம். ஆனால் இவை எல்லாவற்றையும்விட ஸ்ரீராமபிரானுடைய அருளை மிக விரைவில் பெற வேறு ஒரு "ராம சேவை' இருக்கிறது. அதை எப்பொழுதும் செய்ய அனைவரும் முற்பட வேண்டும். அதுதான் "ராம' நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்பது. இதன் மூலம் ராமபிரானின் அற்புதக் குணநலன்களில் அணுவளவேனும் நம்மிடம் வந்து சேரும்.

சக்கரவர்த்தி திருமகனாகிய ராமன், மானிடனாகத் தோன்றி எவ்வாறு இந்தப் புவியில் வாழ்ந்து காட்டினாரோ, அவ்வாறு கூடியவரை நாமும் "சத்திய நிஷ்டையுடன்' வாழ முயலுவோம். ராம பிரானை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்வதே மனிதப் பிறவியின் ஒரே உயர்ந்த லட்சியம். "ராமன் மனிதப் பிறவி எடுத்ததே மனிதக் குலத்தைத் திருத்துவதற்காகத்தான்' என்று அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர். மேலும், ராம நாமத்தை உச்சரிப்பதால் அளவற்ற ஆற்றலுடைய ஆஞ்சநேயரின் திருவருளுக்கும் பாத்திரமாக முடியும். அனுமன் துணை நின்றால் இந்த அகிலத்தையே வெல்ல முடியுமன்றோ!

ஆதி காவ்யமெனப் போற்றப்படும் வால்மீகி ராமாயணத்தில், பாராயண ஆரம்ப ஸ்லோகமே ""வேதத்தில் அறியப்படும் பரம்பொருளாகிய பரமபுருஷன், தசரதச் சக்கரவர்த்திக்கு திருமகனாய் அவதரித்தார். அவரது கல்யாண குணங்களைக் கூற வேதமே வால்மீகி முனிவரிடமிருந்து ஸ்ரீராமாயணமாய் அவதரித்தது'' என்று மொழிகிறது.

ஸ்ரீமத் ராமாயணக் கதையை முதன் முதலாக ஸ்ரீ நாரத பகவான், வால்மீகி முனிவருக்கு உபதேசித்தார். அவரது உபதேசத்தை முதல் ஸர்க்கமாக அமைத்து ஸ்ரீமத் ராமாயண மகாகாவியத்தை இயற்றினார் வால்மீகி. இவ்விரு மாமுனிவர்களின் திருவாக்கால் முதன் முதலில் வெளியான ராமாயண கதையின் சுருக்கம், ""ஸங்úக்ஷப ராமாயண ஸர்க்கம்'' எனப்படும். இதில் ஸ்ரீ ராமபிரானின் திருக்கல்யாண குணங்கள், நற்பண்புகள் ஆகியன போற்றிப் புகழப்படுகின்றன. அவையாவன:

தன் மேன்மையை நினைத்து இறுமாப்பு இல்லாதவர்.
ஏழை, ஏழ்தலன், கீழ்மகன் என்று எவரையும் எண்ணாது அன்புடைய அனைவருடனும் கலந்து பழகுபவர்.

தான் வருத்தமற்றவர்; மற்றவர்களை வருத்தப்பட வைக்காதவர்.

தந்தை சொற்படி நடப்பவர்.

சரணமடைந்தவனைக் காப்பவர்.

சாத்திரங்கள் விலக்கிய செயல்களைச் செய்யாதவர்.

அதர்மத்தை புறக்கணிப்பவர்.

சகோதரர்களிடம் அன்பும், பாசமும் மிக்கவர்.

பிறர் செய்த சிறு உதவியையும் மறவாதவர்.

தான் செய்த பெரிய உதவியையும் நினைக்காதவர்.

பெரும் துன்பத்திலும் - பொய் சொல்லாதவர்.

நினைத்ததை நடத்தும் வல்லமை உடையவர்.

குல மரபிலிருந்து வழுவாதவர்.

சத்ரு - மித்ர பேதமில்லாதவர்.

எல்லா சாத்திரமும் அறிந்தவர்.

மற்றவர்கட்கு எப்பொழுதும் ஆனந்தத்தை அளிப்பவர்.

சலியாத தைரியம் உடையவர்.

கோபத்தை வென்றவர்.

மிகுந்த அழகுடையவர்.

கம்பீரமானவர்.

மற்றவரிடம் இல்லாத குற்றங்களை ஏறிட்டுக்
கூறாதவர்.

எப்பொழுதும் அடியார்களைக் காப்பவர்.

சத்ருக்களுக்கு காலாக்னி போன்றவர்.

பொறுமையில் பூமிக்கு ஒப்பானவர்.

எல்லாம் அறிந்தவர்.

சிறந்த வாக்கு வன்மை உள்ளவர்.

சொன்ன சொல் தவறாதவர்.

அடியார்க்கு வசப்பட்டவர்.

துன்பங்களைக் கண்டு சபிக்காதவர்.

கொடை வள்ளல்.

அறவழியில் நடப்பவர்.

தர்ம தேவதை போன்றவர்.

ராமபிரான் ஒரு குணக் குன்றாகத் திகழ்ந்தார் என்பதை "தியாகபிரும்மம்' ""மும்மூர்த்துலு'' என்று தொடங்கும் கீர்த்தனையில், வர்ணித்துள்ளார். ""ராவண வதத்திற்குப் பிறகு, சீதை அக்னி பிரவேசம் செய்து மீண்டபின் மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் கூடிவிட்டார்கள். பிரம்மா ராமனைப் பார்த்து "நீ எல்லா உலகிற்கும் கர்த்தாவான நாராயணன் அல்லவோ? சீதா தேவி உம்முடைய பிராட்டி லட்சுமியன்றோ?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ராமன், "ஆத்மானாம் மானுஷமன்யே ராமம் தசரதாத்மஜம்' என்று பணிவோடு பதிலளிக்கிறார். இதன் பொருள், "நான் ஒரு சாதாரண மானிடன்; தசரத சக்கரவர்த்தியின் மகன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்' என்பதாகும். அப்போது, "ராமன் பரம்பொருளா அல்லது வெறும் மனிதனாகிய அரச குமாரன்தானா' என்ற சந்தேகம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஏற்பட்டதாம். அவர்கள் தங்களுடைய குணங்களையும், ராமனுடைய குணங்களையும் ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து தங்களுடைய குணங்களே எடை குறைவாக இருப்பதைக் கண்டு தங்களுடைய சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டு மகிழ்ந்தார்களாம்'' என்கிறார் ராம பக்தராகிய தியாகராஜர்.

அப்படிப்பட்ட கலியுகக் காவல் தெய்வமான ராமனின் புகழை வாழ்நாள் முழுதும் போற்றுவோம்! ராம பிரானின் நற்பண்புகளில் ஏதேனும் சிலவற்றையாவது கடைப்பிடிப்போம் என்று வரும் ஸ்ரீராமநவமி நன்னாளில் சபதம் ஏற்போம்.