ஆபிரகாம் லிங்கன் எனும் வரலாற்றின் இணையற்ற நாயகன் நினைவு தினம் இன்று (ஏப்.15)
வீட்டின் வறுமையால் படிக்க மிகவும் கடினப்பட்ட இவர், கடன் வாங்கி புத்தகங்களை படித்தார். அப்பாவிடம் இருந்து நேர்மையை கற்றிருந்தார். எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்.
வழக்கறிஞர் தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதை தன் கொள்கையாக அவர் எப்பொழுதும் கொள்ளவில்லை. ரொம்பவும் அமைதியான இவரின் மனைவியுடன் உறவில் கொஞ்சம் கசப்பிருந்தது. காரணம், அவரின் முதல் காதலியின் மரணம். இன்றும் "உறவினால் அல்ல பிரிவினால் லிங்கனை மணந்த ஆன் இங்கே உறங்குகிறாள்" என்கிற வரிகள் அவள் கல்லறையில் இருக்கின்றது.
மனைவி ஒரு நாள் ஹாயாக சுடு சூப்பை முகத்தில் ஊற்ற, துடைத்து விட்டு வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார் மனிதர். தொடர்ந்து பல தோல்விகளை வாழ்க்கையில் சந்தித்த இவர், தற்கொலை எண்ணம் கொண்டிருந்தவராகவும் இருந்தார். எண்ணற்ற உடல் உபாதைகள் அவரை வாட்டி எடுத்தன. அவரின் வலிகளை மறைத்துக்கொள்ள தன் அழுகையை மறைக்கவே அவர் சிரித்துக்கொண்டே இருந்தார் என்று அவரின் உதவியாளர் குறிக்கிற அளவுக்கு அவர் வாழ்க்கையில் சோகம் சூழ்ந்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்றபொழுது ஆட்சிக்கு வந்தால் அடிமை முறையை முற்றிலும் நீக்குவதாக உறுதி தந்தார். ஒரு சிறுமியின் கடிதத்தை படித்து அதில் ஒல்லியான முகவாட்டம் கொண்ட அவர் தாடி வளர்த்துக்கொண்டால் பெண்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற கருத்தை ஏற்றுக்கொண்டு அப்படியே செய்தார்.
ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர், "லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது"என நக்கலாக சொல்ல, "அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும்"என்றார் அமைதியாக.
அவர் நியூ ஆர்லியன்ஸ் நகரில் வசித்த போது அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர் விலைக்கு விற்கப்படுவதையும், இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டு இருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப் படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது பதினைந்துதான். வென்றதற்கு பின் கறுப்பின மக்களை விலங்குகளைவிட கேவலமாக நடத்தி கொன்று குவித்து சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார். கொதித்து எழுந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவை விட்டு விலகி போர் தொடுத்தன. போர்களங்கத்தில் தன் பிள்ளையை இழந்தார். நாடே தத்தளித்தது. அப்பொழுது எல்லா கறுப்பின மக்களும் இனி அடிமைகள் இல்லை என அறிவிப்பு வெளியிட தெற்கு மாகணங்களில் இருந்த கறுப்பின மக்களும் இவருக்கு ஆதரவாக போரில் குதிக்க நாடு ஒன்றுபட்டது.
கெட்டிஸ்பர்க் உரையில் தான் ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது என விளக்கம் தந்தார். தேர்தல் வந்தது. மீண்டும் வென்றார். மக்களுக்காக முழுக்க உழைத்த அந்த மாமனிதர் அதை பெருமிதமாக நினைக்கவில்லை/ 'முட்புதர்களை அகற்றி முட்கள் இருந்த இடங்களில் பூக்கள் மலரச்செய்தான் லிங்கன்' என்று வரலாறு என்னைக்குறிப்பிட்டாலே போதும் என்றார்.
அவரை ஜான் பூத் எனும் நாடக கலைஞன் Our American Cousin நாடகம் பார்த்த பொழுது சுட்டுக்கொன்றான். அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்னமே அவருக்கு கனவாக வந்திருந்தது. மீளா தூக்கத்தில் ஆழ்ந்தார் அடிமைகளை ரட்சிக்க வந்த அந்த தலைவன்.
''நான் வெல்வதை விட உண்மையாக இருக்கவே வேண்டும்; நான் மாபெரும் வெற்றிகளை பெறுவதைவிட என் அகவெளிச்சதின்படியே வாழ விரும்புகிறேன் .நியாயத்துக்காக யாரேனும் நின்றால் அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்" என்ற அவரின் நினைவு நாள் இன்று.
- பூ.கொ.சரவணன்