முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன.
1. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத் திற்கும், எக்ஸ்பி, விஸ்டா, விண் 2007 ஆகியவற்றிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?
விண் 8 சிஸ்டம் முற்றிலும் மாறுபட்ட முழுமையான செயல்பாட்டினைத் தருகிறது. விண் 2007க்கு முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இதனை ஒப்பிட்டால், இதில் கிடைக்கும் அனுபவம் புதுமையாகவே இருக்கும். ஆனால், விண் 2007 சிஸ்டத்தில் பழகியவர்களுக்கு மாறுதலான பயன்பாடுகள் ஓரளவேதான் இருக்கும். ஏனென்றால், விண்டோஸ் 2007 சிஸ்டத்திற்கு மக்களிடம் கிடைத்த பேராதரவினால், அதில் இயங்கும் பல்வேறு கூறுகளை, விண் 8 சிஸ்டத்திலும், மைக்ரோசாப்ட் அமைத்துள்ளது. யூசர் இன்டர் பேஸ் மற்றும் ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவை மட்டுமே முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
2. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும் லினக்ஸ் சிஸ்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
புரோகிராமிங் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் இரண்டும் வேறுபடுகின்றன. விண்டோஸ் 8 சிஸ்டத்தின், செயல் இயக்க குறியீடுகளை மற்றவர்கள் அறிய முடியாது. ஆனால், லினக்ஸ் இயக்கக் குறியீடுகள், “திறவூற்று’ என அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் அமைப்பில் உருவாக்கப்பட்டது. இதனைப் பெற்று, யார் வேண்டுமானாலும், தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். லினக்ஸ் பல்வேறு நாடுகளில், பல மாறுபட்ட வடிவமைப்பில் கிடைக்கின்றன. இதனால், அதில் இணைந்து செயலாற்ற ட்ரைவர் புரோகிராம்களைத் தேடிப் பெற வேண்டும். மேலும், இதனைக் கற்றுக் கொண்டு இயக்குவது சற்று காலம் எடுக்கும் செயலாகும். விண்டோஸ் அப்படிப்பட்டது இல்லை. உலகெங்கும் ஒரே மாதிரியான இயக்கம் கொண்ட, இயக்குவதற்கு எளிதான சிஸ்டம் விண்டோஸ்.
3. ஸ்டார்ட் மெனு ஏன் இல்லை?
விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் அனைவரும், இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் இருந்த ஸ்டார்ட் மெனு, இதில் இல்லை என்பதைக் குற்றமாக அல்லது வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். ஸ்டார்ட் மெனுவிற்குப் பதிலாக, ஸ்டார்ட் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதில் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் சதுர வடிவ ஓடுகளாக அடுக்கப்பட்டுள்ளன. விரல் அசைவில் அல்லது மவுஸ் தொடலில் இவை அழகாக நகர்ந்து நம் முன் தயாராக இருக்கின்றன. இந்த மாற்றத்தினை பெரும்பாலான மக்களின் விருப்பத்தினை அறிந்த பின்னர் கொண்டு வந்ததாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் இதனை வருங்காலத்தில் விரும்பிப் பயன்படுத்து வார்கள் எனவும் கூறியுள்ளது.
4. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை யு.எஸ்.பி. ட்ரைவில் இருந்து இயக்கலாம் என்பது உண்மையா?
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பதிப்பு விண்டோஸ் என்டர்பிரைஸ் (Windows Enterprise) என அழைக்கப்படுகிறது. இதில் விண்டோஸ் டு கோ (Windows To Go) என்று ஒரு இயக்க வழி தரப்படுகிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றில் வைத்து இயக்கலாம். இது விண் 8 சிஸ்டத்தினை, யு.எஸ்.பி.ட்ரைவ் பயன்படுத்தும் கம்ப்யூட்ட ரில் பதியாது. மாறாக, யு.எஸ்.பி. ட்ரைவில் இருந்தே இயக்கும். யு.எஸ்.பி. ட்ரைவ், கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கப்பட்டால், 60 விநாடிகள், சிஸ்டம் இயங்கிய நிலையில் இருக்கும். மீண்டும் யு.எஸ்.பி. ட்ரைவினை இணைத்தால், சிஸ்டம் விட்ட இடத்தில் இருந்து இயங்கத் தொடங்கும். விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தப்படும் ஒரு நிறுவனத்தில், அதன் அலுவலர்கள் எல்லாருக்கும் இந்த பயன்பாடு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மைக்ரோசாப்ட் விண்டோஸ் என்டர்பிரைஸ் என்ற அமைப்பினை, யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்து இயக்கும் வகையில் தந்துள்ளது. இதனை எந்த யு.எஸ்.பி. ட்ரைவிலும் வைத்து இயக்க முடியாது. இன்றைய நிலையில், மைக்ரோசாப்ட் மூன்று மாடல் யு.எஸ்.பி. ட்ரைவ்களை மட்டுமே, இதற்கென அங்கீகரித்துள்ளது.
5.விண் 8 சிஸ்டத்துடன், முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு கம்ப்யூட்டரில் இயங்கும் வகையில் டூயல் பூட் முறை அமைக்க முடியுமா?
முடியும். விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில், விண் 8 சிஸ்டத்தைப் பதிந்து, டூயல் பூட் முறையில் இயக்கலாம். இதற்கென சில வழிமுறைகளை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதனைப் பின்பற்றித்தான் இந்த டூயல் பூட் முறை அமைக்கப்பட வேண்டும்.
6.விண்டோஸ் ஆர்.டி. என்பது என்ன? இது விண்டோஸ் 8 சிஸ்டம் போன்றதா? அல்லது மாறுபட்டதா?
விண்டோஸ் ஆர்.டி. (Windows RT) என்பது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் இன்னொரு வகையாகும். இது மொபைல் சாதனங் களுக்கான விண் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் என வைத்துக் கொள்ளலாம். ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசிக்கள் போன்ற மொபைல் சாதனங்கள், டெஸ்க்டாப் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கட்டமைப்பைக் கொண்டு செயல்படுகின்றன. எனவே, இவற்றில் இயங்கும் வகையில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்தினைத் தந்துள்ளது.
இதில் ஆர்.டி. என்பது என்ன? என்று இதுவரை மைக்ரோசாப்ட் விளக்கம் தர வில்லை. ஆனால், பல வலைமனை எழுத்தர்கள், இதனை “Run Time” என்றும் “Windows Run Time” எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மைக்ரோசாப்ட் எதனையும் ஏற்று அறிவிக்கவில்லை. வர்த்தக ரீதியாக, விண்டோஸ் 8ன் பிரிவாக ஒரு பெயரைக் கொடுக்க, மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்தியுள்ளது என்றுதான் கொள்ள வேண்டியதுள்ளது.
7. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும் விண்டோஸ் போன் 8 க்கும் என்ன தொடர்பு?
விண்டோஸ் போன் 8 என்பது மொபைல் போன்களுக்கான நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். இது விண்டோஸ் 8 சிஸ்டம் அமைப்பின்படி உருவாக்கப்பட்ட ஒன்றாகும். எனவே, விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்கப்படும் சாதனங்களுடன் இணைந்து இந்த சிஸ்டம் கொண்டுள்ள மொபைல் போன்கள் செயல்படும். விண்டோஸ் போன் 8 கொண்ட மொபைல் போன்கள் சில தற்போது கிடைக்கின்றன. நோக்கியாவின் லூமியா வரிசை போன்களும், எச்.டி.சி. விண்டோஸ் வரிசை போன்களும், இந்த சிஸ்டத்தினைக் கொண்டுள்ளன.
8. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும் ஸ்கை ட்ரைவிற்குமான தொடர்பு எப்படிப்பட்டது?
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ள ஸ்டோரேஜ் ட்ரைவ் தான் ஸ்கை ட்ரைவ் ஆகும். விண்டோஸ் 8 சிஸ்டம் முழுமையாக, ஸ்கை ட்ரைவுடன் இணைந்து செயல்படுகிறது. நாம் விண்டோஸ் 8 சிஸ்டம் வாங்கும்போதே, நமக்கு ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி இடம் ஒதுக்கப்படுகிறது. நம் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்தால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும் அதில் ஸ்டோர் செய்யப்படுகிறது. அப்டேட் செய்யப் படுகிறது. எனவே, நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உருவாக்கும் பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தும், விண் 8 சிஸ்டம் பயன்படுத்தும் எந்த சாதனத்தின் வழியாகவும் பெற்று பயன்படுத்தலாம். இந்த வழிமுறையை (“Fetching”) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. தமிழில் “தருவித்தல்’ என அழைக்கலாம். ஸ்கை ட்ரைவில் நாம் கட்டாயமாக நம் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டியதில்லை. நாம் விரும்பினால் மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
9. என்னுடைய நிறுவனத்தில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா பயன்படுத்தி வருகிறேன். கட்டாயமாக அலுவலகக் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 பயன்படுத்த மாற்றிக் கொள்ள வேண்டுமா?
விண்டோஸ் எக்ஸ்பிக்கு தரும் சப்போர்ட்டினை மைக்ரோசாப்ட் விரைவில் நிறுத்த உள்ளது. பெருகி வரும் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்பாட்டினைப் பார்க்கையில், மாறிக் கொள்வது நல்லது.
10. நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். நான் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டுமா?
கட்டாயம் மாறிக் கொள்ளத் தேவை இல்லை. நீங்கள் எது போன்ற பணிகளுக்கு விண்டோஸ் 7 பயன்படுத்துகிறீர்கள் என்பதனைப் பொறுத்தது.
Thanks to anasgrafix