கல்வி கற்கும் பருவத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.
பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.எட். படியுங்கள். சி.பி.எஸ்.சி. ஸ்கூலில், உங்களுக்கு 50,000 சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பி.எச். டி. படியுங்கள், நல்ல சம்பளத்தில் கல்லூரிகளில் வேலை கிடைக்கும். இன்றைக்கு வேலையில்லை என்ற நிலைமை நிச்சயம் இல்லை.
ஆனால், திறமையுள்ள இளைஞர்கள் இல்லை என்கிற நிலைதான் உள்ளது. வேலைகள் செய்யத் தகுதியுள்ள ஆட்கள் இல்லை. இன்னும் சொன்னால் தரமான வேலையாட்கள் இல்லை.
ஒரு மிஷின் ரிப்பேர் செய்யத் தெரிந்தால் வேலை கிடைக்கும். மோட்டார் வாகனம் பழுது பார்க்கத் தெரிந்தால், வேலை கிடைக்கும். கம்ப்யூட்டரில் இணையதளம் வடிவமைக்கத் தெரிந்தால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
அமெரிக்காவில் ஏழைக்குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தத்தாய் சொல்கிறாள், எனது மகனேÐ நீ மாபெரும் மனிதனாக வர வேண்டும்.
அந்தச் சிறுவன் பள்ளியில் தோல்வியடைகிறான், கல்லூரியில் தோல்வியடைகிறான், அரசியலில், குடும்ப வாழ்வில் தோல்வி. ஆனால் தொடர்ந்து பொதுகூட்டத்தில் பேசுவது, எழுதுவது, படிப்பது போன்றவற்றை செய்து கொண்டிருந்தான். அப்போது அவனிடம் கேட்டார்கள், ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்? உங்களுக்கு 50 வயதாகிவிட்டது. இனிமேல் உங்களுக்கு எந்த வாய்ப்புமே கிடைக்காது என்றார்கள்.
அதற்கு அவர், “எனக்கு வாழ்க்கையில் எல்லா இடத்திலும் தோல்விதான் இருந்தாலும் நான் முயற்சியைக் கைவிட மாட்டேன், தொடர்ந்து முயற்சி செய்வேன். என்றாவது ஒருநாள் எனக்கு ஒருவாய்ப்பு கிடைக்கும். அமெரிக்க அதிபராக வந்துவிடுவேன்.
அப்போது நான் படித்த படிப்பு, எனது சிந்தனைத்திறன், எனது ஞாபகசக்தி, எனது அறிவு, எனது முடிவெடுக்கும் திறன், எனது செயல்திறன் எனக்குப் பயன்படும். எனவேதான் நான் தொடர்ந்து முயற்சிக்கிறேன்” என்று சொன்னார். பிற்காலத்தில் சொன்னபடியே அவர் அமெரிக்க நாட்டினுடைய ஜனாதிபதியாக மாறினார். அவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.
எவ்வளவு தோல்வியடைந்தாலும், மீண்டும் முயற்சி. அதுதான் விடாமுயற்சி. யார் என்ன சொன்னாலும் முயற்சி எடுத்தார் லிங்கன். விளைவு, வெற்றி. நீங்கள் ஏதாவது முயற்சி எடுக்கும்போது மற்ற மாணவர்கள் குறை சொல்லலாம்.
அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் விளையாடச் செல்லும்போது அவர்கள், நீ விளையாடி பெரிய சச்சின் டெண்டுல்கராகப் போகிறாயா? எதற்காக விளையாடுகிறாய் என்று கேட்கலாம். நீ படித்து என்ன ஐ.ஏ.எஸ். ஆகப் போகிறாயா என்று கிண்டல் செய்யலாம். உங்களை மனம் தளரச் செய்வார்கள்.
நாங்கள் படிக்கும்போது ஒரு மாணவன் இங்கிலீஷ் கிளப் ஒன்று ஆரம்பித்தான். டெக் கிளப் (Development of English Club). அதை அவன் ஆரம்பித்தவுடன் சீனியர் மாணவர்கள் அவனைத் துன்புறுத்தினார்கள். அதோடு அவன் அம்முயற்சியை கைவிட்டான். அதோடு ஆங்கிலம் கற்கும் முயற்சியும் நின்றது.
மற்றவர்கள் என்ன சொன்னாலும், அதை அலட்சியப்படுத்தி தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். “என்னிடம் ஒரு கோடாரியைக் கொடுத்து இந்த மரங்களையெல்லாம் தொடர்ந்து வெட்டுங்கள் என்று சொன்னால் நான் மற்றவர்களைப்போல் 8 மணிநேரம் தொடர்ந்து வெட்ட மாட்டேன். நான் 2 மணிநேரம் மட்டும்தான் மரத்தை வெட்டுவேன். மீதி 6 மணிநேரம் எனது கோடாரியை கூர்மைப் படுத்துவேன்” என்று ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார்.
பள்ளியில் படிக்கும் பனிரெண்டு ஆண்டுகள், கல்லூரியில் படிக்கும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், உங்கள் கோடாரிகளைக் கூர்மைப்படுத்துங்கள்.
உங்களது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மனப்போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் மட்டும்தான் நீங்கள் கல்வி அறிவு பெற்றவர்கள் என்று பொருள்.
Via Thannambikkai