நேர்மையான சிந்தனை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:47 AM | Best Blogger Tips


களை எடுப்பதிலிருந்து கணினி இயக்குவது வரை, கழிவறை சுத்தம் செய்வதிலிருந்து ஆவண அறையை அலங்கரிப்பது வரை எல்லா பணிகளுமே தெய்வீகப் பணிகள் தாம்.

‘இன்னும் இனிமையாக; இன்னும் சிறப்பாக; இன்னும் மேன்மையாகச் செய்ய வேண்டும்’ என்ற உந்துதலில் தொடர்ந்து பணியாற்றுபவனே பணிக்குப் பெருமை சேர்க்கிறான். அப்படிப்பட்டவர்கள் வேறு பணிக்குச் செல்ல நேரிடின் ஏற்கனவே இருந்த பணி ஏற்றமடைகிறது.

வான்கா ஓர் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தபோது அவருடைய நண்பர் அங்கு வந்தார். ‘இதுவரை நீங்கள் வரைந்த ஓவியங்களிலேயே மிகச்சிறந்த ஓவியம் எது?’ என்றார். ‘இப்போது நான் வரைந்து கொண்டிருக்கிறேனே அதுதான் இதுவரை நான் வரைந்தவற்றிலேயே மிகவும் சிறந்தது’ என்றார் வான்கா.

மூன்று மாதம் கழித்து மறுபடியும் நண்பர் வந்தார். ‘போனமுறை நான் வந்தபோது உங்கள் ஓவியங்களிலேயே மிகச்சிறந்த ஓவியத்தைத் தீட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே, அதை நான் பார்க்க முடியுமா? என்று கேட்டார் ஆவலாய்.

‘இப்போது நான் வரைந்து கொண்டிருக்கிறேனே அதுவே என்னுடைய மகத்தான ஓவியம். அடுத்த ஓவியம் இதைக்காட்டிலும் மகத்தானதாக இருக்கும். இப்படித்தான்...’ என்றார்.

ஏற்கனவே சிகரத்தைத் தொட்டுவிட்டதாக நினைப்பவன் பள்ளத்தாக்கிலேயே பின்தங்கிவிடுவான். சிகரம் என்பது முன்பு இருந்ததிலும் உயர்ந்து நிற்பது தான். நம் பணியை மேம்படுத்த ஒரு வழியுண்டு. நாம் நெய்கிற ஆடையை நம் பிரியமானவர்களே அணியப் போவதாக எண்ணி நேசத்துடன் நெய்தால், பருத்தி கூட பட்டுப்போல பளபளக்கும். இல்லாவிட்டால் பட்டுகூட பழசுபோல பல்லிளிக்கும். நம் மகளே எழுதப்போவதாக எண்ணிப் பேனாவைச் செய்தால் அது தாள்களை முத்தமிடும்போது முத்துமுத்தாகக் கையெழுத்து முகிழ்க்கும்.

நேர்மை என்பது அரசுப்பணிகளில் மட்டுமல்ல அனைத்துப் பணிகளிலுமே மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியக் கோட்பாடு.

எனக்குத் தெரிந்தவர் தன் வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்துக்குப் போய்விட்டார். ஆனாலும் வருடம் ஒருமுறை வந்து விற்ற வீட்டைப் பார்ப்பார். அவரிடம் கேட்டேன் ‘இன்னுமா இந்த வீட்டின் மீது பிடிப்பு?’. வீட்டின் மீது பிடிப்பு இல்லை. நான் நட்ட மரங்கள் நன்றாக இருக்கின்றனவா என்று பார்த்து சுகம் காண வந்து போகிறேன். ஏனென்றால் உயிரற்ற வீட்டைக் காட்டிலும் உயிருள்ள மரங்கள் உன்னதமானவை என்பதே என்னுடைய அனுமானம்.

இருத்தலுடன் தொடர்புள்ளவர்கள், தாங்கள் பணி செய்த இடத்திலிருந்து நீங்கிய பின்பும், தாங்கள் செய்த பணி தொடர வேண்டுமென்று தொடர்ந்து சிந்திப்பார்கள்.
 
Via Nammabook