பங்குச்சந்தை என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:37 AM | Best Blogger Tips



  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWO8aOo2yoU5i8F4uxfrMxoXFTWSrDpf2gLQle8fR2hNwVtnovQjZXv83JDotmPD2nS21z7MnYuOZKmgBg3-bji7__qKwJkLwLSxu5O454g1LQxalnWqZypaDit44HoXYf1stdacDk4Qpa/s400/bombay_stock_exchange_dalal_street.JPG


பங்குச்சந்தை  என்றால் என்ன,  அதை  எங்கே  போய் கற்றுக்கொள்ளலாம் என்று பலருக்கு சந்தேகம் இருக்கும்.  ஒரு சாமானியனுக்கும் பங்குச்சந்தை பற்றி  ஆரம்பம் முதல் தொழில்நுட்பப பகுப்பாய்வு வரை விளக்கும் ஒரு சிறு முயற்சி.

பங்குசந்தையில் பணம் பண்ண வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் 1 . பொறுமை, 2 . கற்றல் அறிவு  3 . அதிர்ஷ்ட்டம்.

1 . பொறுமை காத்தல்
இதுதான் பங்குசந்தையில் மிக முக்கியமான ஒன்று,  எந்த ஒரு நேரத்திலும்  அவசரப்பட்டு முடிவுகளை  எடுத்து விடக்கூடாது. அதேபோல் ஒரே நாளில் பணம் சம்பாதித்து விடவேண்டும், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக்கி விட வேண்டும் என்று நினைத்து நீங்கள் பங்குசந்தையில் நுழைந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இன்று சில பங்குசந்தை தரகர்களே புதியவர்களுக்கு  உதவுவதாக கூறி  தினவர்த்தகத்தில் ஈடுப்பட வைப்பதே நிஜம். காரணம் அவர்களுக்கு கமிஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் இது தெரியாத வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் போல என்று நினைத்து அவர்கள் சொல்லுவதர்க்கேல்லாம் தலையாட்டிவிட்டு பணம் போனப்பின் தனது தவறை நினைத்து வருந்துவார்கள். பங்குசந்தையில் பணம் ஈட்டுவதை விட தனது கையில் உள்ள பணத்தை பாதுக்காப்பதே சிறந்தது அதற்க்கு மிக முக்கியமான ஒன்று பொறுமை.

 2 . கற்றல் அறிவு
 ஒரு சிலர் பங்குசந்தையில் நுழைந்தவுடனே பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் கண்ணா பின்னவென பங்குகளை வாங்க ஆரம்பித்து விடுவார்கள். பின்பு கை சுட்டபின் தான் தெரியும் நான் செய்தது தவறு என்று.   பங்குசந்தை என்பது முழுக்க முழுக்க நிறுவனத்தின் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குவது இல்லை. அதில் பேரு முதலீட்டாளர்களின் விளையாட்டும் அடங்கி உள்ளதால் கண்டிப்பாக அடிப்படை மற்றும் தொழில்நுட்பப பகுப்பாய்வு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை கற்றுக்கொடுக்க இன்று தகுதியான இடம் தமிழகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காரணம் நான் பார்த்தவரை பணம் பண்ணுவதில் தான் கருத்தாக இருக்கிறார்கள். 

3 .  அதிர்ஷ்ட்டம் 
என்னதான் தொழில்நுட்ப பகுப்பாய்வை கறைத்து குடித்திருந்தாலும்  அதிர்ஷ்ட்டம் பங்குசந்தையில் கண்டிப்பாக ஒருவருக்கு இருக்க வேண்டும்.  அதுவும் தின வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு 99 சதவிகிதம் இது கட்டாயம் தேவை. ஏன் என்றால் நாம் சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரே நிமிடத்தில் நாம் வாங்கிய பங்கு படு வீழ்ச்சியை அடைய வாய்ப்பு உள்ளது அதற்க்கான காரணத்தை ஆராய்ந்தால் 75 %  புரளியாகத்தான் இருக்கும். அதையும் மீறி வேறு ஒரு காரணம் இருக்கும் என்றால் வெளிநாட்டில் ஏதோ ஒரு சம்பவத்தை கூறுவார்கள். இதனால் கண்டிப்பாக பங்குசந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் இருக்க வேண்டும்.

பங்குசந்தையில் ஈடுப்ப்படும்முன் தெரிந்து கொள்ள வேண்டியவை:

► பங்கு தரகர் 
►தொழில்நுட்ப்ப பகுப்பாய்வு

பங்கு தரகர்
இன்று பங்குசந்தையில் ஈடுப்படும் பலர் பணத்தை இழப்பது இவர்களிடம் தான் காரணம் பங்குசந்தையில் ஏற்ப்படும் நட்டம் ஒருபக்கம் என்றால் இவர்கள் புதிதாக இனைபவர்களிடம் கமிஷன் என்ற பெயரில் கறக்கும் பணமே அதிகம். அதிலும் இப்போது உதித்திருக்கும் பல தரகு நிறுவனங்கள் ஒருவர் இணையும்போதே தரகு தொகையை செலுத்திவிட வேண்டும் என்று  ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து விடுகின்றனர். இது புதிதாக இணைபவர்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்ப்படுத்திவிடும் பங்குகளை குறிப்பிட்ட தினத்துக்குள் வாங்கியே தீர வேண்டும் என்று. அதனால் புதிதாக பங்கு சந்தையில் இணைபவர்கள் தயவு செய்து முன் கூட்டியே தரகு தொகையை செலுத்த வேண்டாம்.  நீங்கள் இணைந்தபின் யார் உங்களிடம் பங்குகளை  வாங்கும் நேரத்தில் தரகு தொகையை பிடித்துக்கொள்கிரார்களோ அவர்களிடம் இணைந்தால் உங்களுக்கு எந்த நிர்பந்தமும் இருக்காது. இதை முன்கூட்டியே நன்கு விசாரித்துவிட்டு அவர் சரியான அனுபவம் வாய்ந்த தரகர் தான என்று முடிவு செய்த பின்  தரகரிடம்  இணையவும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வழிகள்:
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மூன்று வழிகளில் முதலீடு செய்யலாம் 1 . MUTUAL FUND வழியாக முதலீடு செய்வது,  2 . ULIP என்று சொல்லப்புடும்  இன்சூரன்ஸ் திட்டங்கள் வழியாக அல்லது  3 . புரோக்கர் உதவியுடன் நாமே நேரடியாக முதலீடு செய்வது .

1 . MUTUAL FUND :
 MUTUAL FUND வழியாக  முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஓரளவு பங்குச்சந்தை பற்றிய அறிதல் இருந்தாலே  போதுமானது.  இதில் சிறப்பம்சம் என்று பார்த்தல்  ULIP திட்டத்தை விட முதலீட்டின்  வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும்,  அதேப்போல் ULIP திட்டத்தை விட இதில்  முதலீட்டின் நிறுவன  கமிஷனும்  குறைவுதான். ஆனால் முதலீடு ரிஸ்க் முழுவதும் முதலீட்டாளரையே சாரும். ULIP திட்டங்களை விட கொஞ்சம் ஆபயகரமானது என்பதால் தினமும் முதலீட்டின் வளர்ச்சியை கவனிக்கக்கூடியவர்கள் மட்டும் MUTUAL FUND ல் முதலீடு செய்தால் நல்லது.


2 . யூலிப் திட்டங்கள்(ULIP)
யூலிப்  திட்டங்கள்  பற்றி  சொல்லவே தேவையில்லை என்று  நினைக்கிறேன்,  ஏற்க்கனவே பலர் இந்த திட்டத்தால்  ஏமாற்றப்பட்டு விட்டனர்.  தெரியாதவர்களுக்காக சொல்கிறேன், இன்சூரன்ஸ் நிறுவனங்களால் நடத்தப்படுவது தான்  யூலிப் திட்டங்கள். நண்பர்களோ அல்லது உறவினர்கள் மூலமாக நீங்கள் இந்தத்திட்டத்தை இனி  அறியப்படலாம். அவர்கள் உங்களை  அணுகும்போது உங்களிடம் சொல்லும் வார்த்தை வருடம் ஒரு முறை அல்லது ஆறு மாதம் ஒரு முறை   குறிப்பிட்டத் தொகையை தொடர்ந்து  மூன்று வருடங்களுக்கு கட்டினால் போதும்,  அதற்குப்பின் உங்கள் முதலீடு கன்னாப்பின்னாவென்று ஏறிவிடும் இப்படித்தான் ஆசைவார்த்தை கூறி உங்களை இணைக்க முயற்சி செய்வார்கள். அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் கீழே உள்ளதை படித்து விழித்துக்கொள்ளுங்கள்.

யூலிப்-  இதில் சிறப்பம்சம் என்று சொன்னால் நாம்  முதலீடு செய்யும்  தொகையில்  பங்குச்சந்தையில் முதலீடு செய்யவும், முதலீடு செய்பவருக்கு இன்சுரன்ஸ் போன்றவையும் ஒரே திட்டத்தால் கிடைப்பதுத்தான். ஆனால் இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் திட்டம் என்றே சொல்லலாம். யூலிப் திட்டத்தின் வளர்ச்சி என்று பார்த்தால் வங்கியில் நாம் முதலீடு செய்யும் நிரந்தர வைப்புத்தொகையை (FIXED DEPOSIT) விட குறைவுத்தான், ஏதாவது ஒருதிட்டம் நிரந்தர வைப்புத்தொகையை விட  வளர்ச்சி அதிகமாக இருக்கலாம் அது ஏமாற்றுபவர்களை  பொறுத்து.   ஆனால் இதில்  முதலீட்டின் ரிஸ்க் முழுக்க முதலீட்டாளரையே சாரும். அதேப்போல் நாம் முதலீடு செய்யும் தொகையில் அதிகப்படியான வளர்ச்சித்தொகை நாம் முதலீடு செய்த  நிறுவனங்கள் சுரண்டவே  சரியாக இருக்கும்.  என்னைக்கேட்டால் இதுப்போன்ற திட்டத்தில் முதலீடு செய்யவேண்டாம் என்றுத்தான் சொல்வேன், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க பயன்படுத்தும் திட்டம் தான் இந்த யூலிப் திட்டம் என்பது என்கருத்து, லாக்கிங் பீரியட்  கூட இதில் ஒரு பாதகமான அம்சம்தான்.  இன்சுரன்ஸ் நிறுவனங்களை கண்காணிக்கும் IRDA இவர்கள் சுரண்டலை கண்டும் காணாமல் இருப்பது வருத்தமே. கேரண்டி தொகை சிறப்பம்சம் உள்ளது  என்று கூட  உங்களிடம் யாராவது இந்த திட்டத்தை பரிந்துரைத்தால் ஆங்கில படிப்பறிவு இல்லாதவர்கள்   முடிந்தவரை ULIP திட்டத்தை தவிர்க்கவே  பாருங்கள் அல்லது இந்த திட்டத்தை பற்றி இணையும் ஒப்பந்தத்தில் சரியாக படித்துவிட்டு இந்த திட்டத்தால்  நமக்கு நன்மை உண்டா என்று அறிந்து விட்டு இணையப்பாருங்கள். இல்லையென்றால் வங்கியில் செய்யப்படும் நிரந்தர வைப்புத்தொகையே யூலிப் திட்டத்தை விட  சிறந்தது, அபாயகரம் இல்லாதது.

3 . பங்குச்சந்தையில் நேரடி முதலீடு:
நேரடியாக நாமே பங்குச்சந்தையில் முதலீடு செய்யவேண்டும் என்றால் சில தகுதிகள் வேண்டும். தகுதியே தேவையில்லை கணினி பயன்படுத்த தெரிந்தால் போதும்  என்று சிலர் தொலைக்காட்ச்சியில் கதை அளப்பார்கள் நம்பிவிட வேண்டாம்.

தகுதி:
படிப்பறிவு நிச்சயம் தேவை(பங்குச்சந்தை பற்றிய செய்திகளை உள்வாங்கும் அளவுக்கு), பொறுமையாக எதையும் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும், பதட்டப்படுபவராக இருக்ககூடாது,  மாதவருமானம் பெறக்கூடியவர் அல்லது செலவுக்கு மீறி கையில் பணம் வைத்திருப்பவர்கள். இந்த தகுதிகளை உடையவர்கள் மட்டுமே பங்குச்சந்தையை நாடினால் நல்லது இந்த  தகுதிகளில்  ஏதேனும் ஒன்று இல்லை  என்றால் கூட  அவர்கள் பங்குச்சந்தை பக்கமே வரவேண்டாம், உங்களுக்கு வங்கி நிரந்தர வைப்புத்தொகையே சிறந்தது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க. 

முதலீடு தொகை:   
எக்காரணத்தைக்கொண்டும் புதியவர்கள் முதல் முறை முதலீடு செய்யும்போது   5000 (ஐந்தாயிரம்) ரூபாய்க்கு  மேல் முதலீடு செய்ய வேண்டாம். ஐம்பதாயிரம்/ஒருலட்ச்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் தரகு தொகையில் சலுகை கொடுக்கிறேன் என்று தரகு நிறுவனங்கள் ஆசைக்காட்டினாலும் அடம்பிடிக்கவும் வேண்டாம் என்று.  ஆரம்பத்தில் 2500 ரூபாய் முதலீடு செய்தாலும் நல்லதே. முதலீடு செய்து சில மாதங்களுக்குப்பின் நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தகுதியானவர்தான் என்று உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே மேலும் முதலீடு செய்யவும்,தொடரவும்  இல்லையென்றால் கணக்கை மூடிவிட்டு பொழப்பை பார்க்கவும்.

பங்குச்சந்தையில் கணக்கு தொடங்க தேவையானவை:
            பான் கார்ட்(PAN CARD),  வங்கி கணக்கு( கண்டிப்பாக  வாடிக்கையாளர்  பெயரில்), ரேஷன் கார்ட், புகைப்படம், படிப்புச்சான்றிதல்.

தரகர்:
பங்குச்சந்தையில் நாம் இணைய வேண்டும் என்றால் முதலில் அணுகவேண்டிய நபர் பங்கு தரகர்/தரகு நிறுவனம். பங்கு கணக்கை தொடங்கும்போது அதை சரியான இடத்தில் தொடங்கினாலே பாதி கிணறு  தாண்டிய  மாதிரித்தான். ஏன் என்றால் இன்று பல நிறுவனங்கள் தரகர் தகுதி இல்லாமலே தரகு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர், ஏமாற்றி வருகின்றனர்.  எப்படியாவது பணம் சம்பாதித்துவிடலாம் என்றுத்தான்.

சில முன்னணி பங்கு நிறுவனங்கள்:

1. ANGEL BROKING
2. INDIA INFOLINE
3. ICICI DIRECT
4. RELIGARE
5. RELIANCE MONEY

இன்னும் பல பெரிய, சிரிய நிறுவனங்கள் உலா வருகின்றன. இவற்றில் சிறந்தது எது என்று கண்டுப்பிடிப்பது கடினமே. சில தகுதிகளை சொல்கிறேன் இணையும்போது கவனித்துக்கொள்ளுங்கள்: நீங்கள் இணையும் முன் அந்த நிறுவனத்தில் ஒருவாரம்மாவது தினமும்  சென்று பங்குச்சந்தையை கவனிக்கவும். கவனிக்கும் சாக்கில் அங்கே வந்து செல்பவர்கள், நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் அணுகும் முறை, அவர்களின் வணிக உத்திகள் போன்றவற்றை கவனித்துக்கொள்ளவும்.  ஒருவாரம் கழித்து உங்களுக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அங்கே பங்கு கணக்கை தொடங்கவும். இல்லையென்றால் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி அவர்களை கட் செய்யவும்.

அதேப்போல் நீங்கள் இணையும்போதே தரகு தொகையை கேட்க்கும் நிறுவனத்தில் இணையவேண்டாம். பங்குகணக்கை தொடங்கும்போது 750 முதல்  1000  ரூபாய்  வரை மட்டுமே கேட்கும் நிறுவனத்தில் மட்டும் கணக்கை தொடரவும். ஏதாவது பிளான் என்று சொல்லி வருடம் 2000, 3000 என்று சொன்னால் இவர்களையும் கட் செய்யவும்.

பங்குச்சந்தையில் லாபம் பார்க்க முடியுமா?
நான் மேலே   தகுதி என்று கூறியது பங்குச்சந்தையில் ஈடுப்படுவதர்க்கு மட்டுமே ஆனால் பங்குச்சந்தையில் லாபம் பெறவேண்டும் என்றால் சிலவற்றை  கற்றிருக்க வேண்டும். அவற்றை கற்காமல்  எக்காரணத்தை கொண்டும் பங்கு கணக்கை தொடங்க வேண்டாம். பங்கு கணக்கை தொடங்கியப்பின் கற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் ஆர்வக்கோளாரில் பணத்தை இழந்துவிடுவீர்கள். நீங்கள்  கறக்கவேண்டியதில்  முதன்மையானது தொழில்நுட்பப பகுப்பாய்வு(TECHNICAL ANALYSIS). தொழில்நுட்ப  பகுப்பாய்வில் பல வகைகள் உள்ளது  அவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது சிறந்த முறையில் கற்றிருக்க வேண்டும். இனி வரும் நாட்களில் ஒவ்வொன்றாக புகைப்படத்துடன் விளக்கத்துடன் பதிவிடுகிறேன் அதற்குள் ஆர்வத்தில் யாரிடமாவது பணம் கொடுத்துக் கற்றுக்கொள்கிறேன்  என்று பணத்தை இழந்து விட வேண்டாம்.                    

புதியவர்களின் பங்குச்சந்தை பற்றிய சந்தேகங்கள்:
புதிதாக  பங்குச்சந்தைக்கு வருபவர்களின் சந்தேகம் என்று பார்த்தால் ►பங்கு என்றால் என்ன?  ►ஏன் பங்கின் விலை ஏறுகிறது, இறங்குகிறது? ►பங்கை ஏன்  விற்கிறார்கள்/வாங்குகிறார்கள்? ►லாபம்/நஷ்ட்டம் எப்படி ஏற்ப்படுகிறது? ►எப்படி வாங்குகிறார்கள்/விற்கிறார்கள்?   என்பதுததான்.

பங்கு என்றால் என்ன?
ஒரு நிறுவனம்/கம்பனி தொடங்கும்போது முதலீட்டின் தொகை நிறவனத்தின் முதலாளியிடம் குறைவாக இருந்தால் அதனை மக்களிடம் இருந்து   வசூலிக்க  பயன்படுவதுதான் பங்கு(SHARE ). அதாவது ஒரு நிறுவனத்துக்கு மக்கள் மூலம் 100000 (ஒருலட்சம்) ரூபாய் தேவைப்படுகிறது என்றால் அதை பங்கு என்று வெளியிடும்போது சிறு விலைக்கு பிரித்து  வெளியிடுவார்கள். உதாரணத்துக்கு ஒரு பங்கின் விலை 100 ரூபாய் என்றால் (100000/100) ஆயிரம் பங்குகளை வெளியிடுவார்கள் 1000X100=100000 ரூபாய். அதை வெளியிட சில வழிமுறைகள் உள்ளது  அதைப்பற்றி பின் வரும் நாட்களில் விளக்கமாக பதிவிடுகிறேன்.

ஏன் பங்கின் விலை ஏறுகிறது, இறங்குகிறது?
பங்குகள் மக்களிடம் வெளியிட்டப்பின் பங்கை வெளியிட்ட நிறுவனத்தின்  செயல்பாட்டை பொறுத்து பங்கின் விலை நிர்ணயிக்கப்படும். உதாரணத்திற்கு  அந்த நிறுவனம் புதிதாக ஏதாவது அரசு டெண்டர் எடுத்தால் அல்லது புது ஆர்டர் பெற்றால் அதன் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபத்தை கணக்கில் கொண்டு  அந்த நிறுவனத்தின்  பங்கு(SHARE ) விலை பங்குச்சந்தையில் ஏற்றம் அடையும்.  ஒரு வேலை அந்த நிறுவனத்துக்கு ஏதாவது ஒருவழியில் இழப்போ அல்லது நட்டமோ அடைந்தால் பங்குச்சந்தையில் அதன் பங்கு விலை குறையும். இதை கருத்தில் கொண்டுத்தான் பங்கின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
 
►பங்கை ஏன்  விற்கிறார்கள்/வாங்குகிறார்கள்?
சரி நிறுவனம் தான் லாபத்தில் போகிறதே பிறகு  ஏன் பழைய ஆட்கள்(பங்குதாரர்கள்) பங்கை(SHARE ) விற்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்க்கு காரணம் நூறு ரூபாய்க்கு வாங்கியவன் கொஞ்சம் லாபம் வந்தவுடன் லாபத்தை உறுதி செய்யும் நோக்கில் தன் கையில் இருந்த பங்கை விற்க முயலுவான். அந்த பங்கை வாங்குபவன் அந்த நிறுவனம் இன்னும் லாபம் அடைந்து பங்கின் விலை இன்னும்  மேலே போகும் என்ற நம்பிக்கையில் அந்த பங்கை வாங்குகிறான். அதேப்போல் அந்த நிறுவனம் நஷ்ட்டம் அடைந்தால் அந்த பங்கின் விலை சரியும், அப்படி சரியும்போது மேலும் நஷ்ட்டம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக பழைய பங்குதாரர்கள் பங்கை விற்று நஷ்ட்டத்தை தவிர்க்க பங்கை விற்ப்பார்கள். அந்த பங்கை வாங்குபவர்கள் அந்த நிறுவனம் நஷ்ட்டத்தில் இருந்து மீண்டு விடும் என்ற நம்பிக்கையில் வாங்குவார்கள்.

►லாபம்/நஷ்ட்டம் எப்படி ஏற்ப்படுகிறது?
 பங்கை(SHARE ) வாங்குபவன் பங்கின் விலை சரியும்போது வாங்கினால் எப்படியும் மீண்டும் பங்கின் விலை உயர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாங்குகிறான். ஆனால் அவன் வாங்கியப்பின்பும் பங்கின் விலை மேலும் சரிந்தால் பங்கின் விலை ஏறும் என்று நம்பி வாங்கியவனுக்கு நஷ்ட்டத்தை ஏற்ப்படுத்திவிடும், இதனால்தான் பங்குச்சந்தையில் நஷ்ட்டம் ஏற்ப்படுகிறது. இது உதாரணம் மட்டும்தான் மேலும் நஷ்ட்டம் அடைய பல வழிகள் உள்ளன அதனை பின்வரும் நாளில் பதிவிடுகிறேன்.

►எப்படி வாங்குகிறார்கள்/விற்கிறார்கள்?
ஆரம்ப நாட்களில் பங்கை விற்பனை/வாங்க  வேண்டும் என்றால் பத்திரம் மூலம் தான் வாங்க முடியும் அதுவம் நாம் வாங்கியப்பங்கு கைக்கு வரவேண்டும் என்றால் பலநாட்கள் பிடிக்கும்.  பிறகு கணினி, இணையத்தளம்  பயன்ப்பாடு அதிகரித்தப்பின் DEMAT என்னும் முறையில் கணினி வழியாகவே பங்குகளை வாங்கிவிடலாம் என்று  இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை அறிமுகப்படுத்தியது. இப்போது பங்குகளை வாங்கவேண்டும் என்றால் இணையத்தளம் வழியே ஒரு நிமிடத்தில் வாங்கி விடலாம். பணம் பரிமாற்றம், பங்கு பரிமாற்றம் எல்லாமே சில வினாடியில் கணினி வழியே நடந்து விடும்.

தயவு செய்து யாரும் ஆர்வக்கோளாரில் பங்குச்சந்தையில் இணைந்துவிட வேண்டாம். மேலே நான் சொன்ன தகுதிகள் இருக்க வேண்டும், இன்னும் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் அதுவரை பொறுமை காக்கவும்.

http://busybee4u.blogspot.com