வேலூர் மாவட்டம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:52 PM | Best Blogger Tips

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில்கள்தான் ஆம்பூரிலும், ராணிபேட்டையிலும், வாணியம்பாடியிலும் அதிகளவு தோல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பிரியாணி மிக சிறப்பு பெற்றது.


வேலூர்:

வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி. 1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும் ஓடுகின்றன . வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த செய்தி.


வேலூர் கோட்டை:

பழமையின் சான்றாக கம்பீரமாக இருக்கிறது வேலூர் கோட்டை. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வெடித்த முக்கிய இடம் இது. வேலூர் என்றதும் சட்டென மனத்தில் நிழலாடும் கற்கோட்டை இது. கோட்டைச் சுவர்கள் உட்பொருந்தும் செங்கோணக் கற்களில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடக் கலை நுட்பம் ஆங்கிலேயர்களின் பொறியியல் பாணியை நினைவூட்டுகின்றன. கோட்டையின் பிரதான சுவர் கருங்கற்களால் ஆனது. சுவரில் சாந்துப்பூச்சு இல்லை. கோட்டைச் சவரில் நடப்பதற்கான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டையின் பழையவாசல் பல கதவுகளுடன் சாலை வழியும் அதைத் தற்காக்கும் இழுவைப் பாலமும் கொண்டுள்ளது.கோட்டையைச் சுற்றி அகழியும் அதற்குச் செல்லும் கீழ் வழிகளும் கூட உள்ளன. இந்த நுட்பமபன வசதிகளை வைத்துப் பார்த்தால் வேலூர் கோட்டை எந்த அளவு ராணுவ முக்கியத்துவமானது என்பதை அறியலாம். கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழியின் நீளம் 8000 அடியும் ஆழம் 190 அடியிலிருந்து முறையே 20 அடி வரையிலும் உள்ளது. தற்போது இங்கு படகுக் குழாம் அமைக்கப்பட்டுள்ளது


ஜலகண்டேஸ்வரர் ஆலயம்-வேலூர் கோட்டை:

வேலூர் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற கோயில். இங்கு மூலவர் ஜலகண்டேஸ்வரர். மூலவரைச் சுற்றி ஒரு சுற்றுப் பாதையும் மகா மண்டபமும் வடக்கு முகம் நோக்கிய நடராசர் சிலையும் மற்றும் பல உப தெய்வங்களும் உள்ளன. விஜயநகர கட்டடக் கலையின் அற்புதமாக விளங்கும் இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தின் தெற்கில் அமைந்துள்ள கல்யாண மண்டபம் பிற்கால விஜயநகர கட்டடக் கலையின் ரத்தினமாக விளங்குகிறது. இத் திருத்தலத்தில் சிற்பங்பளும் கலை எழில்மிக்க தூண்களும் சிறப்பு சேர்க்கின்றன.


அமிர்தி விலங்கியல் பூங்கா:

பல்வேறு வகைப்பட்ட பறவையினங்களும் விலங்குகளும் நிறைந்த பூங்கா. குழந்தைகளின் உற்சாக உலகம். ஜவ்வாது மலைத்தொடரின் கீழ்ப்புறம் அமிர்தி ஆற்றிற்கு அக்கரையில் இந்த விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. 25 ஏக்கர் பரப்பில் விரிந்திருக்கும் இப்பூங்காவிற்குள் ஓர் அழகான அருவியும் உண்டு. ஏராளமான மூலிகைச் செடிகளும் சந்தன மரங்களும் வளர்க்கப்படுகின்றன.


ஆற்காடு:

ஆற்காடு சாலை சென்னையில் தொடங்குகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கர்நாடக நவாபுகளின் தலைநகரம். இந்நகரம் பாலாற்றங்கரையில் உள்ள கோட்டையைக் கட்டியவர் ஆற்காடு நவாப்பாக இருந்த தாவூத்கான். இது திப்புசுல்தான் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. கி.பி. 1751 இல் தென்னிந்தியாவைக் கைப்பற்ற பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த யுத்த்தில் ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவால் கைப்பற்றப்பட்ட தற்காப்புக் கோட்டை இதுதான்.


மணிக்கூண்டு:

தழிழகத்தின் முக்கியமான சில ஊர்களில் மணிக்கூண்டுகள் இருக்கின்றன. ஆனால் வேலூர் மணிக்கூண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவியேற்றதன் நினைவுச்சின்னம். முதல் உலகப்போரில் உயிரிழந்த 22 ஆங்கிலேய படைவீரர்களுக்காவும் அர்ப்பணிக்கப்பட்ட மணிக்கூண்டு


ஏலகிரி மலை:

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஜவ்வாது மலை எழில் ஓவியமாகச் சூழ்ந்திருக்க நான்கு மலைகளுக்கடையில் இருக்கின்றன ஏலகிரி மலை. இந்த மலைப் பகுதியில் 14 கிராமங்களில் வாழும் தொல்குடியினரின் வாழ்க்கை அபூர்வமானது. தனித் தன்மை வாய்ந்த அவர்களின் வாழ்க்கை பாணியும் சடங்குகளும் குடில்களும் நவீன பூங்காவூம் பயணிகளைக் கவர்ந்திழுக்கும். இங்குள்ள முருகன் கோயிலில் ஆடி மாதத்தில் விழாக் கோலம். சிறுவர் பூங்கா விலங்கு காட்சி சாலை உங்கள் குழந்தைகளை மகிழவிக்கும். அதிக ஆரவாரமின்றி இதமான சூழல் மனதைக் கவ்வும் மகிழ்ச்சிப் பிரதேசமிது. ஏழைகளின் ஊட்டிக்குப் போகாமல் இருக்கலாமா?


தென்னிந்திய திருச்சபை:

அமெரிக்க கிறிஸ்தவ திருச்சபை குழுவால் நிறுவப்பட்டது இந்தத் தேவாலயம் . 150 ஆண்டுகள் பழமையானது. வேலூர் சிப்பாய் கலகத்தின்போது உயிரிழந்த ஆங்கிலேய படைவீரர்களின் உடல்கள் தேவாலயத்தின் அருகே புதைக்கப்பட்டுள்ளன. நீங்கள் வேலுhர் சென்றால் இந்தப் பழமையின் அடையாளத்தைப் பார்க்க மறந்துவிடாதீர்கள்.


வேலூர் சிறைச்சாலை:

விடுதலைப் போராளிகளால் புகழ்பெற்ற சிறைச்சாலை. மார்ச் 3 1867 இல் 160 கைதிகளுடன் தொடங்கப்பட்டது. அந்தமானுக்கு அடுத்த கொடிய சிறைச்சாலை இது. இந்திய சுதந்திரப் போரில் பங்கெடுத்த வினோபாவா காமராசர் போன்ற தேசபக்தர்களும் மொழிப் போராட்டத்தில் தலைமை தாங்கிய அறிஞர் அண்ணாவும் லட்சியத் தவமிருந்த சிறை. சிறைக்கைதிகளின் உழைப்பின் மூலம் பெறப்படும் வருவாயைக் கொண்டு சிறைச் சாலையின் செலவுகள் ஈடுசெய்யப்படுகின்றன. விசாரணைக் கைதிகளுக்காகவும் காவல் கைதிகளுக்காகவும் துணை சிறைச்சாலை ஒன்றும் செயல்படுகிறது.


ஜவ்வாது மலைத்தொடர்:

மலைத்தொடரின் பெயரைச் சொன்னாலே மணக்கும். ஜவ்வாது மலைத்தொடர் கிழக்கு மலைத்தொடரில் உள்ளது. சந்தன மரங்களும் பழ மரங்களும் புகழ்பெற்ற ஜவ்வாது மலையின் முக்கிய கிராமம் ஜமனாமரத்தூர் . இங்கு அடர்ந்த காட்டில் உள்ள பீமன்மடவு அருவியும் காவலூர் வானிலை ஆய்வு மையமும் உள்ளன. மலையே அழகு மலைத்தொடர் பேரழகு.


எருக்கம்பட்டு:

வள்ளிமலைக்கும் மேல் பாடிக்கும் நெருக்கமாக அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் எருக்கம்பட்டு. இங்குள்ள ஏரிக்கரையில் ரெங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய போகாசயன மூர்த்தி சிலை உருவம் மத்திய சோழர் காலத்தைச் சேர்ந்தது.


அரசு அருங்காட்சியகம்:

பல்துறை பயன்பாட்டு அருங்காட்சியகம். பழங்கால மற்றும் தற்கால அபூர்வப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வட ஆற்காடு மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


காவேரிப்பாக்கம்:

வேலூர் மாவட்டத்தின் நீளமான மிகப்பெரிய ஏரி காவேரிப் பாக்கம் ஏரி . காவேரிப்பாக்கம் அணைக்கரையைக் கட்டியவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன். இந்த ஏரிக்கரையின் நீளம் 8.35 கி.மீ.


ஜலகம்பாறை அருவி:

ஏலகிரி மலையின் கீழுள்ள குன்றில் விழுகிறது ஜலகம்பாறை அருவி. இதற்கு வண்டிப்பாதை உண்டு. இரண்டு மணி நேரப் பயணம். வேல் வடிவில் முருகன் எழுந்தருளியுள்ள கோயில் ஒன்று இங்குள்ளது. அருவியில் புறக் குளியல் முருகன் கோயிலில் அகக் குளியல் பக்தர்கள் குவிவிறhர்கள். 17 கி.மீ. தொலைவில் அருவி அசத்துகிறது.


கைலாச கிரி:

ஒரு சிறிய மலை மீது முருகன் கோயில் கொண்டுள்ள இடம். இக்கோயிலின் சுற்றுப் புறத்தில் சிற்றோடைகள் ஓடுகின்றன. நவாப் காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படும் கோட்டையின் சிதைவுகளை இங்கே பார்க்கலாம். ஆம்பூரிலிருந்து 10 கி.மீ. தூரம் பயணித்தால் கைலாச கிரி நம்மை வரவேற்கும்.


காஞ்சன கிரி:


சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படும் பூமி. குன்றுகள் சூழ்ந்த மேட்டு நிலத்தில் உள்ள சிவன் கோயிலால் காஞ்சன கிரி புகழ் பெற்றது. இங்கே சுயம்புவாக உருவான பல லிங்கங்களைக் காண முடியும். ராணிப்பேட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது காஞ்சனகிரி.


காங்கேயநல்லூர்:

சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் காங்கீஸ்வரர் கோயில் இது. முல்லையாதாஸ் பாகவதர் மற்றும் சைவத் தழிழ் இசைச் சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோரால் இக்கோயில் புதுபிக்கப்பட்டது. கந்தபுராணக் காட்சிகளும் முருகனின் அறுபடை வீடுகளும் கலைநயமிக்க வேலைப் பாடுகளுடன் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ளன


மேல்பாடி சமாதி கோயில்:

வரலாற்று புகழ்பெற்ற ஊர். சோழ மற்றும் ராஷ்ட்டிர கூடர்களின் ஆட்சி எல்லையைக் குறிக்கும் முக்கயத்துவம் வாய்ந்த ஊர். சோழ மாமன்னர் இராஜஇராஜசோழன் தனது பாட்டனார் அரிஞ்சயன் நினைவாக எழுப்பயதாக கருதப்படுகிறது. இது பள்ளிப்படை கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டு ஆதாரங்களின் படி கோயிலுக்கு ஏராளமான நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளன.


மேல்வலூரம்:

ஆற்காடு நவாப் ஆட்சிக் காலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்த ஊர். இன்றும் கூட அவ்வழி வந்தவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்த இந்நகரத்தில் புகழ்பெற்ற மசூதி பெருமை தேடித் தருகிறது


முத்து மண்டபம்:

விக்கிரம் ராஜசிங்கனைத் தெரியாமல் உங்களால் முத்து மண்டபத்தை ரசிக்க முடியாது. இலங்கை கண்டியை கடைசியாக ஆண்ட தழிழ் மன்னன் ராஜசிங்கன். இம்மன்னனின் மற்றொரு பெயர் கண்ணுசாமி. வெள்ளையர்களை எதிர்த்து 16 ஆண்டுகள் போரிட்டவன். இறுதியில் 1815இல் கைது செய்யப்பட் மன்னன் ராஜசிங்கன் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டு வேலூர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டான். சிறையிலேயே மரணமடைந்தான். இம்மன்னனது கல்லறை 1983 இல் தான் கண்டறியப்பட்து. ராஜசிங்கனின் நினைவாக முத்துமண்டபம் ஜூலை 1 1990இல் தழிழக முதல்வர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது


பள்ளிகொண்டா:

ரங்கநாதர் பள்ளிக்கொண்டிருக்கும் ஆலயம் அமைந்த ஊர் பள்ளிக்கொண்டா. பத்தாம் நூற்றாண்டில் விக்கிரம சோழனுக்கு முந்தைய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகள் விவரிக்கின்றன. இடிபாடுகளாகக் காணப்படும் மதிற்சுவர்களிலிருந்து இக்கோயிலில் ஒரு கோட்டைக்குள் இருந்ததை அறிய முடிகிறது.


கோட்டை மசூதி:

செங்கோண வடிவ மசூதி. கருங்கல்லால் கட்டப்பட்டு முன்புறத்தில் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கோயில் கட்டப்பாணியின் மீது மெல்ல இஸ்லாமிய கட்டடக் கலை வளர்ந்த இடம் இப்போது இங்கு தொழுகை நடப்பதில்லை.


பலமாத்தி மலைகள்:

கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரத்தில் இங்கு சமீபத்தில் கட்டப்பட்ட முருகன் கோயில் பக்தர்களிடம் மிகவும் பிரபலமானது. முருகனடியார்களின் மனத்திற்குப் பிடித்த ஆலயம். வேலூரின் புறநகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் முருகன் அருள்பாலிக்கிறhர்.


தக்கோலம்:

திருவுரை என்றும் அழைக்கப்படும் தக்கோலம் வரலாற்று முக்கியத்துவமான ஊராகும். ராஜாதித்ய சோழன் ஆட்சியில் (கி.பி. 949) சோழர்களுக்கும் ராஷ்ட்டிரகூடர்களுக்கும் இடையே நடந்த போரின் இடம் இது.இங்கு அழகிய சிற்பங்களும் மதிப்புமிகு கல்வெட்டுகளும் காணக்கிடக்கின்றன. மன்னர் காலத்தின் கலை மகத்துவத்தைப் பார்ப்பது அற்புத அனுபவம்


செம்பாக்கம்:

உள்ளுர் வெளியூர் பக்தர்கள் நாடி வரும் திருத்தலம். செல்வ விநாயகரும் சோமசுந்தரேஸ்வரரும் கோயில் கொண்டுள்ளனர். இங்குள்ள விநாயகருக்குத் திறந்தவெளியில் பூஜைகளும் அபிஷேகமும் நடைபெறும் விதமாகச் சுற்றியுள்ள பிரகாரம் தனித்தன்மையுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு செண்பக மலர்கள் நிறைந்திருந்ததால் முன்பு செண்பகவனம் என்ற பெயரும் ஊருக்குள் இருந்தது


ரத்னகிரி:

முருகன் எழுந்தருளியுள்ள சிறிய மலை பெரும் புகழ்பெற்ற இந்தத் திருக்கோயில் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலை அடைய 13 கி.மீ. செல்ல வேண்டும். முருகன் அருள்பாலிக்காத இடமேயில்லை.


திருவலம்:

சைவக்குரவர் திருஞான சம்பந்தர் பாடப்பெற்ற தலம். இங்கு எழுந்தருளியுள்ள வல்லநாதீஸ்வரரைப் போற்றி அவர் தேவாரப் பதிகம் பாடியுள்ளார். வழக்கமாக சிவனைப் பார்க்காமல் நந்தி எதிர்த் திசையைப் பார்ப்பதாக அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இங்குள்ள பலிபீடத்தின் கீழ் சுரங்க நடைபாதை ஒன்றுள்ளது. திருவலம் போய் வரலாமே.


சோளிங்கர்:

நீண்ட நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறைவனை வழிபடும் தலங்கள் நிறைந்த மலை. இம்மலை மீதுள்ள யோகலஷ்மி நரசிம்மரை வணங்க 1305 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். இம்மலையின் அருகிலுள்ள யோக ஆஞ்சநேயரை வணங்க 406 படிகள் ஏற வேண்டும். திருப்பாவை உற்சவ விழாவும் நவராத்திரி திருவிழாவும் விமரிசையானவை. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் பக்தர்கள் இங்கும் கிரிவலம் செல்வதுண்டு.


திருமால்பூர்:

சிற்பங்கள் இல்லை. கல்வெட்டுகள் நிறைய உண்டு. இந்தக் கிராமம் திருமாலின் பெயரால் திருமால்பூழ் என்று அழைக்கப்படுகிறது. பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டக்கள் நிறுவுகின்றன. சோழ ராணிகள் பலர் திருமால்பூர் கோயிலுக்கு அன்பளிப்புகளை வாரி வழங்கியுள்ளனர்.


வள்ளிமலை:

மத்திய காலத்தில் சமண மதத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்த மலை. இயற்கைச் சுனைகள் நிறைந்த பாதுகாப்பு மிகுந்த மலைக்குன்று சமணத் துறவிகளை நிச்சயம் கவர்ந்திருக்கும். மேற்கு கங்கைப் பேரரசின் ராஜமல்லா என்ற இளவரசன் இம்மலையில் இயற்கையாய் அமைந்த ஒரு குகையை சமணப்பள்ளியாக மாற்றினான் என்று ஒரு கல் வெட்டு சொல்கிறது.


விலப்பாக்கம்:

பஞ்சபாண்டவ மலையைக் கேள்விப்படிருக்கிறீர்களா இந்த மலை சூழ்ந்த பகுதியை அப்படித்தான் அழைக்கிறார்கள். இங்கு சமண மதம் செழித்தோங்கி இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. குடைவரைக் கோயில்களில் காணப்படும் சமணப் புனிதர்களின் சிற்பங்களும் கல்வெட்டுகளும் சமண மதச் சான்றுகளாக இருக்கின்றன.


விரிஞ்சிபுரம்:

பாஸ்கரஷேத்ரம் விரிஞ்சிபுரம் சிவன்கோயிலுக்குப் புகழ்பெற்ற பெயர் இதுதான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பங்குனி மாதத்தில் சிவலிங்கத்தின் மீது விழுவதால் சூரிய பகவான் இங்கு வழிபடுவதாக ஐதீகம். ஐந்து பிரகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். இதன் கருவறை மண்டபத்தை இராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்கச் சோழன் கீழிருந்த குறுநில மன்னன் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது. கருவறை லிங்கத்தின் இடது புறத்தில் உள்ள சிங்கமுக சிற்பம் எழில் நிறைந்தது.


வைனு பாப்பு வானியல் மையம் (காவலூர்):


இந்த வானியல் மையத்திற்குப் பின்னால் ஒரு பழம்பெரும் வரலாறே இருக்கிறது. கி.பி. 1786 இல் வில்லியம்பெட்ரி என்ற வெளிநாட்டவர் சென்னை எழும்பூரில் தனது வீட்டுத் தோட்டத்தில் ஆராய்ச்சிக்காக அமைத்த ஆய்வு மையமே மெட்ராஸ் வானியல் ஆய்வு மையம். பின்னர் கோடைக்கானலுக்கு நகர்ந்து இப்போது காவலூரில் இயங்குகிறது. பொதுமக்கள் வானியல் ஆராய்ச்சி மையத்தைக் கண்டு சந்தேகங்கள் களையலாம். குழந்தைகளோடு செல்ல வேண்டிய இடம் இது.


ஸ்ரீபுரம் தங்கக் கோயில்:

100 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீபுரத்தில் மகாலஷ்மி கோயில் வேலூர் அருகில் திருமலைக்குடியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 55000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தங்கத்தினாலும் தாமிரத்தினாலும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கோயில் சுமார் 600 கோடி ரூபாய் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மலைகளும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு இடையே இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் பாதை நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பகவத்கீதை பைபிள் திருகுர்ஆன் மற்றும் நாராயண பீடத்தின் அம்மா அவர்களின் பொன் மொழிகள் பொறிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையிலிருந்து ஸ்ரீபுரத்திற்கு ஒரு நாள் சுற்றுலா தினந்தோறும் நடத்துகிறது.



Via FB ரிலாக்ஸ் ப்ளீஸ்