வேடந்தாங்கல் சரணாலயத்தில் 30 ஆயிரம் பறவைகள் குவிந்தன..

மணக்கால் அய்யம்பேட்டை | 2:03 PM | Best Blogger Tips


சென்னை  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்கி உள்ளது. சுமார் 30 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. எனவே சரணாலயத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல பஸ் வசதி மற்றும் உணவு விடுதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் பிரசித்தி பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த ஏரியில் நீர் நிரம்ப தொடங்கியது. சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வர தொடங்கும்.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் பார்வைக்காக சரணாலயம் திறக்கப்பட்டது. தற்போது நத்தை கொத்தி நாரை, கரண்டி வாயன், நீர் காகம், வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, வக்கா, பாம்பு தாரா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சிறிய வெள்ளை கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. இவைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளன. இந்த பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும். சீசன் முடிந்ததும் குஞ்சுகளுடன் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்லும்.

இந்த பறவைகள் ஏரியில் உள்ள கடம்ப மரத்தில் கூடுகட்டி தங்கி உள்ளன. இந்த காட்சி பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கிறது. பறவைகளை கண்டு ரசிக்க சரணாலயத்தில் பெரியவர்களுக்கு ரூ5ம், சிறியவர்களுக்கு ரூ2ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படம் எடுப்பதற்கு ஸ்டில் கேமராவுக்கு ரூ25, வீடியோ கேமராவுக்கு ரூ150 கட்டணம் செலுத்த வேண்டும். வேடந்தாங்கல் சரணாலயம் வருவதற்கு மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து சில பஸ்கள் இயக்கப்படுகிறது. சீசன்நேரத்தில் கூடுதல் பஸ்கள்விட வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர். சரணாலயத்தில் பயணிகள் தங்குவதற்கு விடுதி உள்ளது. அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

இதுபற்றி வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த புகழ்பெற்ற சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் பார்வையாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் வனத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஆனால் இங்கு வரும் பயணிகளுக்கு ஓட்டல், உணவு விடுதி வசதி இல்லை. எனவே அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வேடந்தாங்க லுக்கு குறைந்த பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நேரடியாக பஸ் இயக்க வேண்டும். இப்பகுதியில் வேடந்தாங்கல் முக்கியமான இடமாக உள்ளது. எனவே கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தர முன்வர வேண்டும் என்கின்றனர்.


Via FB ரிலாக்ஸ் ப்ளீஸ்