தமிழில் வேதத்தை “எழுதாக் கிளவி” என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க மாட்டார்கள். வேதத்தைப் பாராயணம் செய்வார்கள்.சொல்லும் விதம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுக்கு கவனம் செலுத்துவார்கள். அப்படி உச்ச்சரிக்கபப்டும் ரிக் வேதத்தையே பாட்டாகப் பாடும்போது, இறைவனே நேரில் வருவான் என்பது வேதத்தின் சிறப்பு. இறைவனைக் கவர்வது, வேதக் கருத்தாக இருப்பின், ரிக் வேதம் சொன்னால் கூட இறைவன் வர வேண்டும். ஆனால் அதை சாம கானமாக இசைக்கப்படும்போது, அந்த கானத்துக்குத் தான் இறைவன் கவரப் படுகிறார் என்றால், அங்கே பொருள் முக்கியமல்ல, ஓசை நயமே முக்கியம் என்று தெரிகிறது. அமிர்த வர்ஷிணி போன்ற ராகங்கள் இசைக்கப் படும்போது, இயற்கையே கவரப்பட்டு, மழை பொழிகிறது என்று கேள்விப்படுகிறோம். ஆக, ஓசையானது ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேண்டும் பலன்களைத் தருகிறது என்று தெரிகிறது.
வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம். வேதத்தின் ஆதாரம் அதன் ஓசை நயத்தில் இருப்பதால்தான் அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வேதம் சொல்வதை ‘வேத கோஷம்’ என்பார்கள். கோஷ்டியாக, கூட்டமாகச் சொல்ல வேண்டும். வேதத்தின் ஓசை நயத்தால், பலன் கிடைப்பதை அக்னி ஹோத்திரம்என்னும் ஹோமத்தைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியில் அறிந்துள்ளனர்.
அதிராத்திரம் என்னும் ஹோமத்திலும் அப்படிப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடந்தன.
வேத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் யாகம் என்பதே, ஒரு விஞ்ஞானக் கூடத்தில் செய்யப்படும் பௌதிக அல்லது வேதியல் மாற்றம் போலத்தான். இன்னின்ன மாற்றம் அலல்து பலன் வேண்டுமென்றால், இன்னின்ன வகையில் ஹோமமும், வேத மந்திரம் ஓதப்படுதலும் வேண்டும் என்பதே வேதத்தின் ஆதார பயன். இந்த மந்திரங்களில் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி என்று பல பெயர்களும் வரும். அர்த்தம் என்று பார்த்தால் பல இடங்களிலும் கோர்வையாக அர்த்தம் இருக்காது. அங்கே அர்த்தத்துக்கு முக்கியத்துவம் இல்லை. ஓசை நயமோ, அதிர்வலைகளோ அல்லது அது போன்ற வேறு எதற்கோ தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்து மதத்தை வழி நடத்திச் சென்ற மூன்று ஆச்சர்ய புருஷர்களும் வேதத்தை எழுதி, அதற்குப் பொருள் சொல்லவில்லை. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. தாங்கள்தான் அதைச் செய்த ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஏனென்றால் தியானத்திலும், தவத்திலும் அமிழும் போது தானாகவே அவர்கள் வாயில் புறப்பட்ட சொற்களே வேதம் ஆயிற்று. அவற்றை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்ககச்க் செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.
வேதம் சொல்லும் கருத்து என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தவம் செய்தவர்களையும், ரிஷிகளையும், ஞானிகளையும் நாடிச் சென்று அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி எழுந்ததுஉபநிஷத்துக்கள். வேதம் சொல்லும் ஞானத்தை உபநிஷத்துக்கள் மூலமாகத் தான் அறிய முடியும். அப்படித்தான் அறிந்தனர். வேதம், உபநிஷத்துக்கள் ஆகிய இவை இரண்டுமே செவி வழியாக அறியப்படவே, இவற்றுக்கு சுருதி என்று பெயர். இவற்றை எழுதிப் படிக்கவில்லை.
வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவியது. லௌகீக விஷயங்களுக்கு அவை தேவை இல்லை. குறுந்தொகையில் (156) ஒரு பாடல் வரும். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் பாண்டிய சேனாதிபதி ஒருவர் அதைப் பாடியுள்ளார். அதில் தலைவன், தலைவியைப் பிரிந்து வருந்துவான். அப்பொழுது அங்கே ஒரு பார்ப்பனர் வருகிறார். கையில் புரச மரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்டம் என்னும் கோலுடனும், கமண்டலத்துடனும், விரத உணவை உண்பவராகவும் அந்தப் பார்ப்பனர் சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் தன் பிரிவாற்றாமைக்கு ஒரு வழி கேட்கலாமா என்று தலைவன் எண்ணுகிறான். அப்புறம் தோன்றுகிறது, இவரைக் கேட்டு என்ன பயன் என்று.தலைவன் சொல்லுகிறான், பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, உன்னுடைய எழுதாக் கல்வியில் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்து இருக்கிறதா? இல்லையே! என்கிறான்.
ரிக் வேதத்தை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆரிய – திராவிடப் போராட்டத்தை நம்பும் நம் திராவிடத் தலைவர்கள், இந்தப் பாடலை மறந்தது ஏன்?வேதமே எழுதாத கல்வி.அந்தக் கல்வியில் காதல், லௌகீகம் போன்றவற்றைப் பற்றி ஒன்றும் இல்லை.போரும், அதில் வெற்றியும் பற்றி இருந்தால் இந்த சேனாதிபதி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்பானா?அது ஆரிய – திராவிடக் கதை சொல்லியிருந்தால், தமிழர்கள் அதை அன்றே அறிந்திருக்க மாட்டார்களா?
வேதம் என்பது படித்துப் பொருள் சொல்ல அல்ல. அது கதைப் புத்தகமும் அல்ல.அது சரித்திரப் புத்தகமும் அல்ல, அதிலிருந்து நம் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ள.தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருக்குறளே வேதம் எப்படிப்பட்டது, எதற்குப் பயன் படுவது என்பதற்குச் சாட்சி.பொய்யா மொழி என்று திருக்குறளைப் போற்றும் சங்கப் புலவர் வெள்ளி வீதியார், அது செய்யா மொழிக்கு (யாராலும் இயற்றப்படாத வட மொழி வேதம் ) திரு வள்ளுவர் மொழிந்த பொருள் என்கிறார். (திருவள்ளுவ மாலை).அந்த செய்யா மொழியும் சரி, பொய்யா மொழியும் சரி, ஆரிய- திராவிடப் போராட்டத்தைச் சொல்லவில்லை. திருக்குறள் இந்திய சரித்திரம் பற்றிச் சொல்லவில்லை.
அது போல வேதமும் சரித்திரப் புத்தகம் அல்ல.
அது போல வேதமும் சரித்திரப் புத்தகம் அல்ல.
வேதம் உதவுவது ஆத்ம ஞானத்துக்கு, இறைவனை அடைவதற்கு.
அவர்களுக்கு இந்திய சரித்திரம் வேண்டுமென்றால், புராண இதிகாசங்களை நாடி இருக்க வேண்டும். அவை தெள்ளத் தெளிவாக நம் பழைய சரித்திரத்தைக் கூறுகின்றன. அவற்றில் இந்த ஆங்கிலேயருக்கும் ஐரோப்பியருக்கும் சுவாரசியம் இல்லை. வேதம் என்பது குறிப்பிட்ட வாழ்க்கை முறைகளைப்பின்பற்றுபவர்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதியை உடைத்து அவர்கள் அதைப் படித்ததினால் வந்த வினை இன்றும் நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, காரணமில்லாமல் அந்த நாளில் அப்படிப்பட்ட நியதிகள் போடவில்லை என்று புரிகிறது. நல்லவன் கையில் வேதம் அமிர்தம். அதுவே சுயநலமிக்க வல்லவன் கையில் ஒரு அம்பாகி விடுகிறது
நன்றி vivekanandadasan.wordpress